For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தன்னலக்காரர்களின் புற்றுநோய் தமிழை உலகெங்கும் பாதிக்கிறது

By Staff
Google Oneindia Tamil News

Tamilannalஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக உலகெங்கும் வழங்கும் மொழி தமிழே - என்று இந்தத் தன்னலக்கேடர்கள், பேசிப்பேசிக், கைதட்டு வாங்கிநம்மை ஏமாற்றுகின்றனர்.

இன்றைய சிங்கப்பூரின் நிலை என்ன தெரியுமா? ஓர் ஆங்கிலேயரும், சிங்கப்பூருக்கு விடுதலை தேடித் தந்த முதல் தலைமையமைச்சர்லீகுவான் யூவும் அங்கு நான்கு தேசிய மொழிகளில் தமிழையும் ஒன்றாக்கி, அரசியலமைப்புச் சட்டம் வகுத்துவிட்டனர்.

தமிழுக்கு ஆங்கிலம், சீனம், மலாய்க்கு நிகரான - சட்டப்படியான - சமநிலை, அனைத்திலும் - எதிலும் எங்கும் அங்குளது. நடுவணரசு இந்திவெறிமிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சிலர் கொண்ட குழுக்களை அடிக்கடி அனுப்பி, இதைத் தகர்க்க அங்குள்ள அரசுடன் பேசுகின்றது.

தமிழக அரசுகள் ஆக்கவழியிற் செயற்படுவதில்லை. நம் தமிழ் அறிஞர், கல்வியாளர், சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பி, அங்குத்தமிழுக்குச் செய்யும் சிறப்புக்கு நன்றி கூறலாம், உதவிகள் செய்யலாம், இதற்கான திட்டங்கள் தீட்டலாம். எதிர்க்கட்சிகளும் இதில்ஈடுபடலாம், எடுத்துரைக்கலாம், இது கிடக்கட்டும்.

"நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்ற நிலை இன்று வந்துளது.சிங்கப்பூர் வானொலி முழுவதும் நல்ல தமிழிலேயே ஒலிபரப்புகிறது. சிங்கப்பூர்ப் பள்ளிப் பாடநூல்கள் நல்ல தமிழில் மட்டுமேஉருவாக்கப்படுகின்றன.

இன்று சிங்கப்பூர் அரசு, "மொழிப்பாடங்களை எளிமைப்படுத்துவது- என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்துளது. தமிழ்ப் பாடம் நல்ல தூயநிலையிலிருப்பதைக் "கடினம் என மதிப்பிட்டு, அங்குள்ள தலைமை அமைச்சர் முதல், தமிழ் அமைச்சர் வரை, "தமிழ்ப் பாடத் திட்டம்,பாடநூல் மற்றும் கல்விப் பயிற்சியைப், பேச்சு நடைக்குக் குறைத்து எளிமைப்படுத்த வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டுள்ளனர்.இந்நிலை கண்டு, அங்குள்ள தமிழர்கள் கலங்கிப் போயுள்ளனர்.

ஏனேனில் அங்கு அரசை எதிர்த்து எதுவும் ஆகாது. உள்ளதும் போகாமல் காத்துக்கொள்ளவே முடியும்.ஆனால் நேர்மையுடன் கூடியவற்றை, அரசே உணரும்படி செய்தால், அந்நாட்டு அரசு தவறே செய்யாது.அவர்கள் கூறும் காரணம்: ""உங்கள் தமிழ் நாட்டுத் தொலைக்காட்சியும் நாளிதழ்களும் (பெயர் குறிப்பிட்டே கூறுகின்றனர்) கலப்படத்தமிழையே பரப்பும் போது, இங்குமட்டும் உயர்ந்த - கலப்பற்ற நடை ஏன்? சீன நண்பர்கள், "உங்கள் தொலைக் காட்சியில் அளவுக்கு மீறிஆங்கிலம் பயன்படுத்தப்படுவதால், அது எங்களுக்குத் தமிழ்க் காட்சியாகப்படவில்லை, என்றே கூறுகின்றனர்.

மேலும் சீன மொழியில் ஐயாயிரம் எழுத்து வடிவங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் சித்திரமாக வரைய வேண்டியன. சீனர்களில் பலவகையினர் உளர். சீன மொழி மிகப்பல வட்டார வழக்குடையது. ஒரே சொற்றொடர் ஒரு வட்டாரத்திற்கு ஒரு பொருளையும், அதே தொடர்பிற வட்டாரத்தினர்க்கு வேறு பொருளையும் தருமாம். ஆங்கிலத்தை அலுவலக மொழியாகக் கொண்ட, சிங்கப்பூரில், சீன எழுத்துமொழியைக் கற்பிப்பது கடினமாதலால், மூன்றாம் வகுப்பு முடிய பேச்சு மொழி மட்டுமே கற்பிக்கலாமா எனச் சிந்திக்கின்றனர்.

தமிழுக்கு இது கடினமில்லை. ஆனால் இப்பொது முடிவு தமிழையும் பாதிக்குமோ என அஞ்சுகின்றனர்.அண்மையில், இது பற்றிச், சிங்கப்பூர்த் தொலைக்காட்சியினர் அங்கு என்னைப் பேட்டி கண்டு கேட்டபோது, ""தமிழை மிகஎளிமைப்படுத்திக் கற்பிக்க நினைக்கும் அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு, அவ்வாறே செய்யலாம். ஆனால் ஒவ்வொரு மொழிக்கும்தனித்தனி இயல்புண்டு. தமிழைச் சிதைக்காமலே எளிமையாக்கலாம், இதற்குத் தமிழை மிக ஆழமாகக் கற்ற வல்லுநர் குழுவை அமைத்துஎளிமைப்படுத்த வேண்டும் என்று கூறி வந்தேன்.

ஆக, அங்கேயும் ஊடுருவி விட்ட தெரு தொலைக்காட்சியால் அந்நாட்டுத் தமிழும் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு அத்தொலைக்காட்சியினர், "எங்களுக்குத் தமிழ்ப்பற்று எல்லாம் இல்லை, இது எங்களுக்கு வணிகம் என நேர்காணலில் பேசுகின்றனர்.தமிழகத்தில் இவர்களைப் பிடித்த புற்றுநோய், தமிழைப் பாதிக்கின்றது, அதனோடு இந்த நோயை இவர்கள் உலகெங்கும் பரவவிடுகின்றனர். இந்த நிலை மாறினாலன்றிச், சிங்கப்பூர் மட்டுமன்றி, உலகெங்கும் தமிழ் ஒரு கலப்பட மொழியாகித், திரிபுபடுவது உறுதி,தமிழ், செம்மொழி ஆனதாகப் பாராட்டுக் கூட்டம் நடத்திப் பணம் சேர்த்தவர்கள், கண்டனக் கூட்டங்கள் நடத்துவதன்றோ,நடுவுநிலையாகும்? யாரேனும் முன் வருவார்களா?

- முனைவர். தமிழண்ணல்([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1. இன்றைய நிலையில் ""தமிழுக்கு நேர்ந்துள்ள இடர்களும் இழிவுநிலைகளும்


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X