• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உறங்காத தெய்வங்கள்

By Staff
|

Nattar Deivangalஎனக்கு இந்த ஊர்க்கோயில்கள் என்றழைக்கப்படும் இந்த காவல் தெய்வங்களையும், அவற்றின் கோயில்களையும் பிடிக்கும்.இன்று சிறு தெய்வங்கள் என்று இவைகள் அழைக்கப்பட்டாலும் இவைகளே மக்களின் தெய்வங்களாக நெடுங்காலமாகநிற்கின்றன. பெரும்பாலான இத்தெய்வங்கள் மழையிலும் வெயிலிலும் திறந்துகிடந்தன. மக்கள் புக அஞ்சும் அடர்ந்தவனச்செறிவுக்குள் மரங்களோடு பின்னிப்பிணைந்த காட்டுக்கொடிகளுடன் தம்மைச் சூழ்ந்த பயங்கரக் கதைகளை காற்றில்பரப்பியவாறு அவை ஒரு ஊரின் ஒதுக்குப்புறமாய் தம் பெரிய கண்கள் சிவக்க கள்ளும் சாராயமும் மாந்திக்கிடந்தன.

இந்த தெய்வங்கள் மனிதரோடு பேசக்கூடியவை. கள்ளையும், கோழியையும், ஆட்டையும் விரும்பிக்கேட்டு உண்பவை.மனிதரோடு குடித்து, கதைத்து, அழுது, சிரித்து அவன் விதைத்ததைத் தின்று அவன் சாகும் வரை அவனோடு பிரியாதுஉழல்பவை. அங்கு மனிதனுக்கும் கடவுளுக்கும் போதிய இடமிருந்தது. பரஸ்பர மரியாதை இருந்தது. பாட்டிகள்கருப்பையாவையும் கொம்புக்காரனையும் வேண்டவும் திட்டவும் செய்தார்கள். பெற்றுக்கொண்ட படையலுக்காக ஒருகுடிமகனைப்போல வருடமெல்லாம் இவர்களுக்கும் வேலையிருந்தது. இல்லாவிட்ட்டால் சாபமிருந்தது. ஆயிரக்கணக்கானவருடங்களாக வாழ்ந்துபோன நேர்மையான திடமான ஒரு வயசாளியைப்போல இவர்கள் கிராமங்களை சூழ்ந்திருந்தார்கள்.பொழுது இறங்கிய மாலை நேரத்தில் ஊண்றப்பட்ட வேல்களில் இருக்கும் மணிகள் அசைகையில் அவர்கள் சிரிப்பதுதெளிவாய்க் கேட்கும்.

இதெல்லாம் முன்பு.

ஆயிரமாயிரமாண்டுகளாய் ரெண்டு பனைமர உயரத்துக்கு உலவித் திரிந்த இவர்களால் இந்த மின்விளக்கு வெளிச்சத்தில்வெளியில் வரமுடியவில்லை. டாடா சுமோக்கள் பறக்கும் சாலைகளில் முன்பு காற்றைக் கிழித்துப் பறந்த இவர்களது குதிரைகள்தடுமாறுகின்றன. புதுப் புது தெய்வங்கள் ஊருக்குள்ளேயே வந்து உட்கார்ந்துவிட்டன. மின்சார வெளிச்சத்தில் கவரிங் நகைகள்,ஜிகினா காகிதங்கள் உபயத்தில் மினுக்கி அருள் பாலிக்கிற காலமாய் போய்விட்டது.

வெவ்வேறு புதுக்கதைகளை பாகவதர்களும் நவீன பெளராணிகர்களூம் ஒலிபெருக்கிகளிலும் தொலைக்காட்சிகளிலும் இந்தப்புது தெய்வங்களுக்கு ஓட்டுவேட்டை நடத்துவதில் இந்த பழந்தெய்வங்கள் கூட தமது பயங்கரக் கதைகளை மறந்துவிட்டன;மக்களை பற்றிச் சொல்வானேன். ரியல் எஸ்டேட்காரர்களும், ரோடுபோடுபவர்களும் மரங்களையெல்லாம் வெட்டிவிட்டுபேருக்கு ஒரு கூரையையும் ரெண்டு டியூப் லைட்டுகளும் போட்டுக்கொடுத்துவிட, ஓங்கிய வாளைக்கூட ஓரமாய் வைக்கமுடியாதுதவிக்கிறார்கள். கள்ளும் சாராயமும் நினைவிலிருந்தே மங்கிப்போய்விடும் போலிருக்கிறது. எப்போதாவது வரும் ஆடுகோழிக்கும் ஆபத்து வரும்போலத் தெரிகிறது.

Nattar Deivangalஇந்தக் கருப்பையா கோவில் எனக்குத் தெரிந்து எட்டிமரங்கள் சூழ்ந்த மரச்செறிவுக்குள் இருந்தது. பொழுதோடு போக அஞ்சுவர்மக்கள். பயங்கரக்கதைகள் நடுவே நெளிந்து செல்லும் கேட்பவரது ஆர்வம் போல மரச் செறிவுக்குள் ஒற்றையடிப்பாதைகள்குளத்துக்கும் கோவிலுக்கும் இட்டுச்செல்லும். வயசாளிகள் குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பதுபோல ஏதோ ஒரு நினைப்புதோன்றும். இப்போது மரங்கள் இல்லை. கூரையும் லைட்டும் வந்து பூட்டப்பட்ட கம்பி கதவுக்குள் அவரும் இருக்கிறார்.கடவுளுக்கும் ஒரு கதவிருப்பதே ஒரு அநாகரீகம், ஒரு மூடத்தனம், ஒரு வேதனை என்று கூட தோன்றாத மக்களைப் பார்த்துஅவர் விக்கித்துப் போயிருக்கலாம்.

ஏதேனும் ஒரு மரமேனும் இல்லாத பின்னனியில் படமெடுத்து ஒரு பாவத்தைச் செய்துவிடுவேனோ என்று அஞ்சியேகூடுமானவரை மரத்தையும் தண்ணிரையும் சேர்த்தே புகைப்படமெடுக்க முனைந்தேன். ப்ளாஷையும் தவிர்த்துவிட்டேன்ஏனெனில் அது நெடுஞ்சாலை லாரிகளின் விளக்கொளியோ என்று அவர் சிறிது நடுங்கக்கூடும்.

சொல்ல மறந்துவிட்டேன், இப்போது அவர் பெயர் அருள்மிகு முத்துக்கருப்பையா சுவாமி.

பின் குறிப்பு:

தமிழகத்தில் கோவில் காடுகள் என்றழைக்கப்பட்ட இந்நாட்டார் தெய்வங்களின் இவ்விடங்கள் உயிரின பன்மைத்தன்மைக்கு(Biodiversity) எவ்வாறு நீண்டநெடுங்காலமாக பேருதவியாய் இருந்தன. இவைகளின் அழிவு எவ்வாறு பல உயிரினங்கள்,தாவரங்களின் நிரந்தர அழிவுக்கும், சூழலியல் பாதிப்புக்கும் வழிவகுக்கின்றன என்றும் ஆய்வுகள் நடக்கின்றன.

- தங்கமணி(ntmani@yahoo.com)

இவரது முந்தைய படைப்பு:

உண்மைகளைக் கூறி...

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X