For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீமான் கவிஞனும், ஏழைக் கவிஞனும் ..

By Staff
Google Oneindia Tamil News

என்னுடைய கவிதைகள் ஏழை வீட்டு குழந்தைகள், ஆனால் வைரமுத்துவின் கவிதைகள் சீமான் வீட்டு குழந்தைகள் போன்றது என்று முதல்வர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.

Karunanidhiவைரமுத்துவின் 10 கவிதைகள் சென்னையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. வைரமுத்து கவிதைகளை வாசிக்க, இசையமைப்பாளர் இனியவன் இசையில் பாடகர்கள் அதை பாடலாக பாடினர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், மாணிக்க விநாயகம், எஸ்.பி.பி.சரண், விஜய் ஏசுதாஸ், சைந்தவி உள்ளிட்டோர் இந்தப் பாடல்களை பாடினர்.

இந்த வித்தியாச கவி விழாவில் முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், திரையுலகினர், பல்துறைப் பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

முதல்வர் கருணாநிதி பேசுகையில், விழாவில் பேசிய மணிரத்னம் போல நானும் கவிதை எழுதுகிறவன் தான். இன்றைக்கு நேற்றல்ல. கடந்த 1940ம் ஆண்டிலிருந்து கவிதை எழுதும் பழக்கும் கொண்டவன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் என்னைப் போன்றவர்கள் எழுதுகின்ற கவிதைகள், குறிப்பாக நான் சார்ந்துள்ள இயக்கத்தில் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளவர்கள் எழுதுகின்ற கவிதைகள் எல்லாம் ஏழை வீட்டுப் பிள்ளைகளைப் போல திரிந்து கொண்டிருக்க கூடியவை. ஆனால் வைரமுத்துவின் கவிதைகள் சீமான் வீட்டுப் பிள்ளைகள் போல செழித்து வாழக்கூடியவை.

பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்கு அது பிறந்தவுடன் பெயர் சூட்டுவிழா, காதணி விழா, பிறந்தநாள் விழா, கல்வி சாலைக்கு அனுப்பும் விழா என்று பல விழாக்களை கொண்டாடுவார்கள்.

அதேபோன்று வைரமுத்துவின் கவிதைகளுக்கு கவிதை வெளியீட்டு விழா, கவிதை நூல் வெளியீட்டு விழா, கவிதையே பாடலாக மக்களுக்கு தெரிவிக்கிற விழா என்று இப்படி பல விழாக்களை நடத்தி தனது கவிதைகளை நாட்டுக்கு அறிமுகமாக்கிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய பல கவிதைகள் மணிரத்னம் போன்றவர்களுக்கு படத் தொழிலுக்கு பயன்படக் கூடிய கவிதைகளாக, அவர்கள் எடுக்கின்ற படங்களில் கதாநாயகர்களுக்கு, தேவைப்படுகின்ற பாடல்களாக இருப்பவை. அவைகள் இங்கே பாடப்படும்போது அதை நீங்கள் ரசித்தது ஒரு விதம்.

அதே சமயம் அவர் சார்ந்திருக்க வேண்டிய இயக்கத்தின் கொள்கைகளை பாடல்களாக ஆக்கும்போது அதை நீங்கள் ரசித்தது ஒரு விதம். இந்த இரண்டு ரசிப்பையும் அவர் உணர்ந்திருப்பார் என்று கருதுகின்றேன்.

எனவே எதிர்காலத்தில் எந்த ரசிப்பின் பக்கம் அவர் வரவேண்டும் என்பதை அவரே தெரிந்து கொண்டிருப்பார் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமை பட்டிருக்கின்றேன். மணிரத்னமும், விவேக்கும் எடுத்துக் காட்டியதைப் போல அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் மிக ஆழமாக, உணர்ச்சிமிக்கவைகளாக, மக்களை சென்று தொடக்கூடியவைகளாக இன்று நேற்றல்ல, பல ஆண்டு காலமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

நான் அவரை மிக நெருக்கமாக அறிவேன். இன்னும் சொல்லப் போனால் நான் எழுதுகின்றவைகளைக் கூட அவரிடத்திலே படித்துக் காட்டுகின்ற பழக்கம் எனக்குண்டு. அதைப் போல அவர் எழுதுகின்றவைகளை அவர் எங்கிருந்து எழுதினாலும் தொலைபேசி மூலமாக எனக்கு படித்துக் காட்டுவார். இப்படி ஒரு கவிதை நட்பு எனக்கும், அவருக்குமிடையே இருக்கின்றது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கவிதை மழை என்ற தலைப்பில் என்னுடைய கவிதைகளையெல்லாம் தொகுத்து ஒரு பெரிய புத்தகமாக ஏறத்தாழ 1,000 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளியிட்ட போது, நான் எழுதி, ஆனால் அச்சியற்றப்படாமல் விடுபட்ட மூன்று கவிதைகள் உண்டு.

அதிலே நான் என் கவியரங்க நண்பர்களுக்கு பாராட்டுக்களை, எனக்கும் அந்த நண்பர்களுக்கும் உள்ள உறவை புலப்படுத்துகின்ற வகையிலே கவிதைகளை எழுதியிருந்தேன்.

அப்துல்ரகுமானை பற்றி, சுரதாவைப் பற்றி இப்படி பல கவிஞர்களை பற்றியெல்லாம் அதிலே எழுதியிருந்தேன். ஆனால் அவை அந்த புத்தகத்தில் இடம்பெற முடியவில்லை.

ஆனால் அந்தக் கவிதைகளையெல்லாம் அடுத்த பதிப்புக்காக தொகுத்து வைத்திருக்கிறேன். அதிலே நான் வைரமுத்துவைப் பற்றி எழுதியதை இங்கே சொன்னாலே, இந்த விழாவிலே நான் ஆற்ற வேண்டிய உரையில் முக்கால் பகுதியை ஆற்றிவிட்டதாகப் பொருள்.

நேர்த்தியாக ஒப்பனை முடிந்ததென்று
நேரிழையாள் முகம் பார்த்து நிலைக் கண்ணாடியின்
முன் நின்று முறுவலிப்பாள்; நானும்
என் எழுத்துக்கு நிலையான கண்ணாடியாக
ஆண்டு பலவாக அமைந்துவிட்ட தம்பி வைரமுத்துக்கு;
நீண்ட காலம் வாழ்க எனும் வாழ்த்துடனே
நிலம் செழிக்கப் பெய்யும் மழை போல தமிழர்
நலம் செழிக்கப் பொழியும் கவிதை மழை

என்று எழுதி கையெழுத்திட்டு அந்தப் புத்தகத்திலே வைத்திருக்கின்றேன்.

அதாவது ஒரு பெண், அலங்காரம் செய்து கொண்டு வெளியில் கிளம்புவதற்கோ, ஒரு விழாவில் செல்வதற்கோ புறப்படுவதற்கு முன்பு அலங்காரத்தை எல்லாம் முடித்துவிட்டு, அலங்காரம் சரியாக இருக்கிறதா. ஒழுங்காக ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டிருக்கிறோமா என்பதை கடைசியாக ஒரு முறை பார்த்துச் செய்து கொண்டாலும் கூட வீட்டை விட்டு கிளம்பும் போது கடைசியாக ஒரு முறை நிலைக்கண்ணாடியை பார்த்துக் கொள்வதைப் போல் நான் கவிதை எழுதினாலும், கட்டுரை எழுதினாலும், கடைசியாக ஒரு முறை அந்தக் கட்டழகி கண்ணாடியிலே பார்த்துக் கொள்வதைப் போல, வைரமுத்துவிடம் படித்துக் காட்டி சரியாக இருக்கிறதா என்று அவர் ரசிப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுவேன்.

அதனால் தான் சொன்னேன், என் எழுத்துக்கு நிலையான கண்ணாடியாக ஆண்டு பலவாக அமைந்துவிட்ட தம்பிக்கு வாழ்த்து என்று எழுதியிருந்தேன். அந்த வாழ்த்தைத் தான் இங்கே நான் நினைவூட்டுகிறேன்.

நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது மகிழ்ச்சியாகவும், நான் துயருறும் போது, அந்த துயரத்திலே பங்கு கொள்பவராகவும் இருவரும் ஒருவராக இருக்கின்ற அந்த உறவு மனப்பான்மையோடு வாழ்கின்ற சூழ்நிலையில் அவருடைய பாடல்கள், கவிதைகள் இசைப் பாடல்களாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது. அவரை நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X