For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கியெழுந்த தமிழர்கள்-கொதிக்கும் மலேசியா

By Staff
Google Oneindia Tamil News

Malaysia Map
உலகத் தமிழர்களின் மனதில் இன்னும் ஒரு புதிய கவலை குடி புகுந்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைக் கண்டு உலகத் தமிழர்கள் உருகிக் கொண்டிருக்கும் நிலையில் மலேசியத் தமிழர்களுக்கு நேர்ந்துள்ள அநீதி, அடக்குமுறை, அவமரியாதை உலகத் தமிழர்களை மட்டுமல்லாது, மனித உரிமை ஆர்வலர்களையும் கூட அதிர வைத்துள்ளது.

மலாய் தீபகற்பத்தில் அடங்கியுள்ள தென் முனைப் பகுதிதான் மலேசியா. மலேகா என்ற பூர்வீகப் பெயர் கொண்ட மலேசியாவை, சிங்கப்பூரை ஆண்டு வந்த மலாய் மன்னர்கள் ஆரம்பத்தில் ஆண்டு வந்தனர்.

அதன் பின்னர் சீனா, இந்தியா, பர்மா, அரேபியாவிலிருந்து வந்த வர்த்தகர்கள் மலேசியாவை வளப்படுத்தினர். பிறகு இங்கிலாந்து ஆட்சியாளர்கள் வசம் மலேசியா சென்றது.

இங்கிலாந்து வசம் இருந்த மலேய தீபகற்பத்தை பிரித்து தனி நாடுகளாக மாற்றக் கோரி ஐக்கிய மலாய் தேசிய இயக்கம் (உம்னோ) போராட்டங்களில் குதித்தது. இந்த அமைப்பின் தீவிரப் போராட்டத்தின் விளைவாக 1951ம் ஆண்டு முதல் முறையாக உள்ளூர் தேர்தலை நடத்தியது இங்கிலாந்து அரசு.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக வலுவான அரசியல் அமைப்பு தேவை என்று கருதிய உம்னோ, மலாய் இனத்தவரைத் தவிர பிற இனத்தவரையும் தனது போராட்டத்தில் ஈடுபடுத்தியது.

இதன் விளைவாக மலாயன் சைனீஸ் சங்கம், மலாயன் இந்திய காங்கிரஸ் ஆகிய இரு பெரும் இனங்களின் பிரதிநிதி அமைப்புகள் உம்னோவுடன் கை கோர்த்து இங்கிலாந்துக்கு எதிராக போராட்டத்தில் இறங்கின.

அதன் பின்னர் 1955ம் ஆண்டு நடந்த முதலாவது பெடரல் தேர்தலில் இந்த கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைத்தது. மொத்தம் உள்ள 52 தொகுதிகளில் 51 தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது.

இக்கூட்டணியின் சார்பில் மலேசியாவின் முதல் முதல்வராக துங்கு அப்துல் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் கூட்டணி மிக வலுவானதாக இருந்ததால், இங்கிலாந்து ஆட்சியாளர்கள், மலேசியாவை தனி நாடாக்க தீர்மானித்தனர்.

இதையடுத்து 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி மலேசியா சுதந்திர நாடாக மாறியது.

மலாய் யூனியனாக இருந்து, பின்னர் மலேசியா தனி நாடாக மாறியபோது சிங்கப்பூரை தன்னுடன் வைத்துக் கொள்ள அது விரும்பவில்லை. இதனால் சிங்கப்பூர் தனியாக பிரித்து விடப்பட்டது.

இதற்கு முக்கியக் காரணம், மலாய் இனத்தவருக்கு நிகராக சீனர்கள் வந்து விடக் கூடாது என்பதே. அப்போதே சீனர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரையும் சேர்த்து 40 சதவீதமாக இருந்தது. இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது. இதன் காரணமாகவே சிங்கப்பூரை தங்களுடன் வைத்துக் கொள்ள மலேயர்கள் விரும்பவில்லை.

மலேசியாவில் இன்றுள்ள 2.7 கோடி மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 8 சதவீதமாகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்து சமுதாயத்தினர்.

இந்தியர்களிலும் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். இவர்கள் அனைவரும் இங்கிலாந்து ஆட்சியாளர்களால், தோட்ட வேலைக்காக மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள். நூறாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது.

இப்போது எழுந்துள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு மூல வித்தும் இங்கிலாந்து ஆட்சியாளர்களால்தான் தூவப்பட்டது.

மலேசியாவுக்கு தோட்ட வேலைக்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களும், பிற இந்தியர்களும் அடிமைகள் போலவே நடத்தப்பட்டனர். குறைந்த கூலியைக் கொடுத்து அதிக வேலை வாங்கப்பட்டது.

அன்று எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலை இன்றும் மலேசியாவில் தங்களுக்குத் தொடர்வதால்தான் மலேசிய தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் கொதித்துப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

மலேசியாவில் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களில் மூன்றில் இரண்டு மடங்கு பேர் வறுமை, ஏழ்மை, வசதியின்மையில்தான் உழன்று கொண்டிருக்கின்றனர்.

மலாய் இனத்தவர்களின் ஆதிக்கம் முன்பை விட பல மடங்கு அதிகரித்து விட்டது. அவர்களுக்குப் போகத்தான் தமிழர்களுக்கு என்ற நிலை முன்பை விட அதிகமாகவே உள்ளது.

கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் மலாய் இனத்தவர்களுக்குத்தான் முதலுரிமை. தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுகின்றனர்.

தங்களது இந்த நிலைக்குக் காரணம், தங்களது மூதாதையர்களை மலேசியாவுக்கு அழைத்து வந்த இங்கிலாந்து அரசுதான் காரணம். எனவே இங்கிலாந்து அரசு மலேசிய இந்தியர்களுக்கு 4 டிரில்லியன் டாலர் இழப்பீட்டைத் தர வேண்டும் என்று கோரி லண்டன் கோர்ட்டில் மலேசிய வாழ் இந்தியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குக்கு ஆதரவு தெரிவித்தும், இங்கிலாந்து தூதரகத்தில் மனு கொடுக்கவே கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் பெரும் திரளான இந்தியர்கள் கூடி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அமைதியான முறையில் முடிந்திருக்க வேண்டிய இந்த போராட்டத்தை மலேசிய அரசும், காவல்துறையும் பெரிதுபடுத்தி, வன்முறையில் முடித்து விட்டது.

இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய போராட்ட ஒருங்கிணைப்பாளர்களான உதயகுமார், வாய்த மூர்த்தி, கணபதி ராவ் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சரியாக இல்லை என்று கூறி கோலாலம்பூர் நீதிமன்றம் இன்று இவர்களை விடுவித்து விட்டது.

மலேசியத் தமிழர்களின் நிலை சொல்லி மாள முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளது. சாதாரண வேலைக்குக் கூட அவர்களால் போக முடியாத அளவுக்கு மலாய் இனத்தவர்களின் ஆதிக்கம் படு மோசமாக உள்ளது.

இந்துக்களுக்கு மத சுதந்திரம் கூட அங்கு கிடையாது. அவர்கள் கட்டிய பல நூறு கோவில்களை மலேசிய அரசு இடித்துத் தள்ளி விட்டது. இதில் 150 ஆண்டு பழமையான மாரியம்மன் கோவிலும் அடக்கம்.

மலாய் இனத்தவர்களின் ஆதிக்கம் நிறைந்த மலேசிய அரசால் கடந்த காலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்தியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கிட்டத்தட்ட மலேசிய அரசு ஒரு இனப் படுகொலையை திட்டமிட்டு அரங்கேற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுவரை அடக்கப்பட்டு வந்த தமிழர்கள், இப்போது தங்களது உரிமைக்காக உரத்து குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் இவையெல்லாம் தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு செய்யும் வேலைகள் என போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறி வருகிறார்.

ஆனால், வந்தபோது எப்படி இருந்தோமோ அதே நிலையில்தான் இன்றும் இருக்கிறோம். இந்த நாட்டை எங்களது சொந்த நாடாக மாற்றிக் கொண்டு விட்டோம். எங்களுக்கு மலேசியாதான் தாயகம். இந்த தாயகத்தின் வளர்ச்சிக்காக, உயர்வுக்காக உழைத்து உழைத்து ஓடாகப் போய் விட்ட எங்களுக்கு சாதாரண மனித உரிமைகள் கூட கிடையாது என்றால் எப்படி என்று குமுறுகின்றனர் தமிழர்கள்.

மலேசியா வாழ் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் இந்த உரிமைப் போராட்டம் மலேசியாவை மட்டுமல்லாது உலக நாடுகளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

மலாய் இனத்தவர்களுக்கு நிகராக சம உரிமை, கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் நிற்கப் போவதில்லை என்று மலேசிய இந்தியர்கள் அமைப்பு திட்டவட்டமாக கூறியுள்ளதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்டத்திலும் அதிகரித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X