For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வியர்வையை இச்சமூகம் உதாசீனப்படுத்துகிறது-தங்கர் ஆவேசம்

By Staff
Google Oneindia Tamil News

Sathyaraj with Thangar Bachan
-மு. இளங்கோவன்

உழவர்கள்-உழவர்களின் வாழ்க்கை செல்லாக் காசாக உள்ளதையே ஒன்பது ரூபா நோட்டு படம் மூலம் விளக்கியதாக இயக்குநர் தங்கர்பச்சான் கூறினார்.

புதுச்சேரியில் ஒன்பது ரூபா நோட்டு திரைப்படக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழாவைப்
புதுச்சேரி நண்பர்கள் தோட்ட அமைப்பினர் ஜெயராம் உணவகத்தில் நடத்தினர்.

அதில் தங்கர்பச்சான் பேசியதாவது

படைப்பாளிகள் பலர் ஒன்பது ரூபா நோட்டுப் படத்தை மிகச் சிறப்பாகத் திறனாய்வு செய்தனர். பத்திரிகைகளைவிட மிகச் சிறப்பாகச் செய்தது பாராட்டிற்கு உரியது. பத்திரிகைகள் கதைச்சுருக்கம் வெளியிடுவதையே இன்று திறனாய்வாக நினைக்கின்றன.

இதுவரை 87 பத்திரிகையில் ஒன்பது ரூபா நோட்டு பற்றி திறனாய்வு வந்துள்ளது.

அனைவரும் இப்படத்தை விரும்பிப் பார்க்கின்றனர். பலரை தூங்கவிடாமல் செய்த படம் இது. வெளிநாடுகளிலிருந்து பலரைத் தம் பிறந்த ஊருக்கு வரவழைத்த படம் இது. மண்ணையும் மக்களையும் நேசிக்கும் படம். பெற்றோர் பாசத்தை வலியுறுத்தும் படம் இது.

என் 24 வயதில் எழுதத் தொடங்கிய கதை. அனைவருக்கும் காதல் ஊற்றெடுக்கும் வயதில் நான் வாழ்க்கையை உள்வாங்கிக் கொண்டு அதன் ஆழம் பற்றி எண்ணி எழுத ஆரம்பித்தேன். உழைக்கும் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்துள்ளதால் உழைக்கும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பதிவு செய்தேன்.

101 ஆண்டுகால திரைப்பட வரலாற்றில் இதுவரை விவசாயிகளின் வாழ்க்கையை ஆழமாக யாரும் பதிவு செய்யவில்லை. அனைவரும் உண்டு உயிர் வாழக் காரணமாக இருக்கும் விவசாயியை யாரும் நினைப்பதே இல்லை. அழுக்கு, வியர்வை, நாற்றம் உழைப்பவர்களிடமே இருக்கும். உழைப்பின் அடையாளமான வியர்வையை இச்சமூகம் உதாசீனப்படுத்துகிறது.

உழவர்கள்-உழவர்களின் வாழ்க்கை செல்லாக் காசாக உள்ளதை ஒன்பது ரூபாய்நோட்டு சித்திரிக்கிறது.

ஒவ்வொருவரும் நம் உள்ளத்தை யாரிடமோ பறி கொடுத்துள்ளோம். அவ்வாறு பறி கொடுத்த உங்கள் உள்ளங்களை என் வழிக்குக் கொண்டுவர நான் செய்த சூழ்ச்சியே அழகி திரைப்படம். படித்த இளைஞர்களை விலை பேசி வாங்கிச்செல்லும் பணக்காரர்களை அடையாளம் காட்டுவதே சொல்லமறந்த கதை.

தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் முதல்படமே தென்றல். பெண்களின் உழைப்பில் வாழும் சமூக அக்கறை இல்லாதவர்களைக் காட்டுவதே சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி. இப்படத்தில் நடிக்க யாரும் முன்வராத்தால் நானே நடிக்கவேண்டியிருந்தது.

தனக்கு அறிவு தந்த பள்ளியை நினைக்கும் படி மாணவர்களுக்கு அறிவுரை சொன்னபடம் பள்ளிக்கூடம்.

எனவே சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டவையே என் படங்கள். அழகி படம் திரையிடப்பட்ட முதல்நாள் என் குடும்பம் உட்பட 21 பேர் மட்டும் திரையரங்கில் இருந்தோம். இன்று என் புதிய படத்தை 700 பேர் வரை பார்க்கின்றனர். இவ்வளவு பேரை இழுக்க இவ்வளவுநாள் ஆகியுள்ளது.

இளைஞர்கள் என் படம் பார்க்க வருவதில்லை. நடுத்தர வயதிற்கு மேல் உள்ளவர்களே என் படத்தை விரும்பிப் பார்க்கின்றனர்.

சத்தியராஜ் ஒன்பது ரூபா நோட்டு கதையைப் புரிந்துகொண்டு நடித்ததால்தான்-அப்படத்தில் மாதவராக வாழ்ந்ததால்தான் இப்படம் மிகச் சிறப்பாக அமைந்தது என்றார் தங்கர்.

இதையடுத்துப் பேசிய சத்யராஜ் இந்தப் படத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தங்கர்பச்சானின் சிறப்புகளை எடுத்துரைத்தார். இதில் நடித்த இன்பநிலாவும் பேசினார்.

இந்தப் படத்தின் கலைஞர்களுக்குப் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரெங்கசாமி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். புதுச்சேரியைச் சேர்ந்த ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

-மு. இளங்கோவன் ([email protected])

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X