For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரபோஜி கல்லூரி மாணவர்களின் மலரும் நினைவு சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவ- மாணவிகள் குடும்பத்துடன் சந்தித்து தங்களது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் 1980-ம் ஆண்டு முதல் 83-ம் ஆண்டு வரை படித்த வணிகவியல் மாணவ- மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப்பிறகு ஒன்று சேர்ந்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. இதில் 1980 முதல் 83-ம் ஆண்டுகளில் பயின்ற 47 மாணவ- மாணவிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இவர்களில் பலர் அரசு ஊழியர்களாகவும், தொழில் அதிபராகவும் உள்ளனர். பலர் அவுரங்காபாத், ஓமன், செகந்திராபாத் போன்ற நாடுகளிலும் மும்பை, டெல்லி போன்ற மாநிலங்களிலும் வசித்து வருகிறார்கள். இந்த இடங்களில் வசித்தவர்கள் தங்கள் பழைய தோழர்களைச் சந்திப்பதற்காக அந்த இடங்களில் இருந்து வந்து கலந்து கொண்டனர்.

அன்புப் பரிமாற்றம்

சந்திப்பு நிகழ்ச்சி தஞ்சை ஓரியண்டல் டவர் ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்களின் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் அனைத்து குடும்பத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர்.

பின்னர் அனைவரும் தாங்கள் படித்த சரபோஜி அரசு கல்லூரிக்கு சென்று தாங்கள் படித்த இடம், விளையாடிய இடம் போன்ற மலரும் நினைவுகளை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டனர். பின்னர் அங்கு ஒரு மரக்கன்றையும் நட்டனர்.

முன்னதாக ஒவ்வொருவராக ஓட்டலுக்கு வந்ததும் ஆண்கள் தங்களது நெருங்கிய நண்பர்களை பார்த்த மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து தங்களது அன்பைப்பறிமாறிக்கொண்டனர். பெண்களும் தங்களது நண்பர்களை பார்த்த மகிழ்ச்சியில் வணக்கம் தெரிவித்தனர். தங்களது குடும்பத்தினரை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

வல்லம் கனரா வங்கி மேலாளராக உள்ள முன்னாள் மாணவர் பக்கிரிசாமி கூறுகையில், 25 ஆண்டுகளுக்குப்பிறகு நாங்கள் படித்த பழைய மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி இது. அப்போது படித்த 47 பேரும் இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளோம்.

நாங்கள் ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தி அதன் மூலம் சமூக சேவை செய்ய திட்டமிட்டு உள்ளோம். அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவியும் செய்ய உள்ளோம். இதற்கான ஒரு முன்மாதிரியான சந்திப்பு நிகழ்ச்சி தான் இது என்றார்.

எஸ்.ஆர்.உஷா கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் ஒன்றிணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் பயின்ற போது எடுத்து புகைப்படத்தினை அழைப்பிதழில் போட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் அனைவரும் எங்களின் சந்தோசத்தை பகிர்ந்து உள்ளோம்.

வருங்காலங்களில் தங்களின் மகன், மகள் ஆகியோரின் திருமணம் மற்றும் ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகள் என்றாலும் படித்த நண்பர்கள் அனைவருக்கும் பத்திரிகை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 50-வது ஆண்டான பொன்விழா ஆண்டு வரும் போதும் நாம் அனைவரும் இது போன்று மகிழ்ச்சியுடன் சந்திக்க வேண்டும் என்றார்.

மைதீன் பாட்ஷா கூறுகையில், தங்களுடன் படித்த அனைவரையும் பார்க்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புவர். அந்த ஆசை நிறைவேறி உள்ளது. அனைவரும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த ஒரு ஆண்டாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவரின் முகவரியையும் கண்டுபிடித்து அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு அனைவரும் வந்துள்ளனர். இது போன்று ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் அனைவரையும் அழைக்க வேண்டும் என்றார் அவர்.

இந்த உணர்ச்சிகரமான சந்திப்புக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் கோதண்டராமன், மொய்தீன்பாட்சா, சுந்தர்ராஜன், அசோகன், வல்லம் கனரா வங்கி மேலாளர் பக்கிரிசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் கவிஞர் அரங்கசாமி, பயிற்றுவித்த பேராசிரியர்கள் அப்துல் கரீம் (தற்போது திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர்), மாரிச்சாமி (உடுமலைப்பேட்டை அரசு கல்லூரி பேராசிரியர்), இஸ்மாயில், திருநாவுக்கரசு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X