கல்விக் கண் திறந்த கல்லுடைக்கும் தொழிலாளி

வறுமையே வாழ்க்கையாக வாழ்ந்து வரும் கல்லுடைக்கும் சிறு குழந்தைகள், அறியாமையால் சுத்தியல் பிடித்து கல்லுடைத்த காலம் மலையேறி தற்போது பேனா, பென்சில், கணிப்பொறி, மவுஸ் பிடித்து சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடக்கின்றனர். இதற்கு காரணம் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி என்றால் நம்ப முடிகின்றதா?
திண்டுக்கல்லில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராசக்காப்பட்டி. இதன் அருகில் உள்ளது ஜீவா நகர்.
இங்கு உலகமே வியக்கும் வண்ணம் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து சம்பாதித்து கட்டிய, கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான, இந்தியாவிலேயே முதன் முதலாக துவக்கப்பட்ட இலவச உண்டு உறைவிட உயர் நிலைப் பள்ளி கம்பீரமாக காட்சி தருகிறது.
இந்தப் பள்ளியில் தமிழகத்தை சேர்ந்த 23 மாவட்டங்களைச் சேர்ந்த 140 குழந்தைகள் அறியாமையை அகற்ற அறிவுக்கண் திறக்க கல்வி பயின்று வருகின்றனர்.
நன்கொடை, அந்த கட்டணம், இந்தக் கட்டணம், சிறப்புக் கட்டணம் என பணத்தையே மூலதனமாக வைத்து தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வரும் இந்த காலத்தில் உழைப்பு ஒன்றை மட்டுமே நம்பி இந்தப் பள்ளியை நடத்தி வருகிறார் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் சங்க நிறுவனர் எஸ்பி ஞானமணி.
தமிழ்நாட்டில் மொத்தம் 23 மாவட்டங்களில் சுமார் 20 லட்சம் கல் உடைக்கும் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் குவாரியையே தங்களது வீடாக நினைத்து அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு நிர்ணயக்கப்பட்ட சம்பளம் அல்லது கூலி கிடையாது. குவாரியில் அவர்கள் வேலை செய்கின்றனர் என்பதற்கு எந்த பதிவேடுகளும் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் விபத்து நேரும் போது விபத்து காப்பீடோ அல்லது இழப்பீடோ பெற முடிவதில்லை.
தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான கல்லுடைக்கும் தொழிலாளர்கள் இன்றும் பல்வேறு இடங்களில் கொத்தடிமைகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
1995 ம் ஆண்டு உச்ச நீதி மன்றம் நியமித்த கமிஷன் ஆய்வின் படி மூன்று கல்லுடைக்கும் தொழிலாளர்களில் இரண்டு பேர் கொத்தடிமைகள் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில்தான், இன்றும் கல் உடைக்கும் தொழிலாளியாக இருந்து கொண்டு அவல நிலையில் இருக்கும் பிற தொழிலாளிகளுக்காக மாநில அளவில் ஒரு சங்கத்தை திண்டுக்கல்லில் நிறுவி போராடி வருகிறார் எஸ்.பி. ஞானமணி.
எஸ்.பி. ஞானமணியிடம் பேசினோம்.
.... குவாரிகளில் வாழ்கை நடத்தும் மக்களுக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. பல குவாரிகளில் முதலுதவி பெட்டி கூட வைப்பது இல்லை. இப்படி உயிரை பணயம் வைத்து தான் கல் உடைக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் குழந்தைகள் எப்படி கல்வி பெற முடியும். அதனால் தான் பெற்றோர் வழியிலேயே, வற்புறுத்தலில் குழந்தை தொழிலாளராக மாறிவிடுகின்றனர்.
கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள், கல்லுடைக்கத்தான் தகுதியானவர்கள் வேறு தொழிலுக்கு தகுதி அற்றவர்கள், அவர்களால் அதை செய்ய இயலாது. காரணம் அதற்கு அவர்களுக்கு கல்வி அறிவு போதாது என்ற சூழ்நிலை வந்தது.
இந்த அவலத்தை போக்கியே ஆக வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் சபதம் எடுத்துக் கொண்டேன். அதன் விளைவு தான் இந்த பள்ளி துவங்கப்பட்டது என தன்னம்பிக்கையோடு பேசினார்.
அது மட்டும் அல்ல கல்லுடைக்கும் தொழிலாளர்களை கொத்தடிமைதனத்தில் இருந்து மீட்டு மறு வாழ்வை ஆர்வமுடன் வழங்கிய முன்னாள் மாவட்ட கலெக்டர் விக்ரம் கபூர் நினைவாக அவரது பெயரை கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு சூட்டி தாங்களும் நன்றியை மறக்காதவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.
(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் செய்தியாளர்)


Click it and Unblock the Notifications
