For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி: பேராசிரியர் அடிகளாசிரியர்

By Staff
Google Oneindia Tamil News

Adigal Asiriyar
-முனைவர் மு.இளங்கோவன்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1993ம் ஆண்டளவில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம், வரலாறு, மதிப்பீடு என்னும் பொருளில் நான் முனைவர் பட்டப் பேற்றிற்கென ஆய்வு செய்த பொழுது தமிழகத்துப் பாவலர் பெருமக்கள் எழுதிய பலதிறத்துப் பாட்டு நூல்களையும் கற்பதில் பேரார்வம் கொண்டிருந்தேன்.

அவ்வாறு கற்ற நூல்களுள் "தண்ணிழல்" என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. அதனை இயற்றியவர் பேராசிரியர் அடிகளாசிரியர். அவர்களின் திருமகனார் அ.சிவபெருமான் அவர்கள் வழியாக அந்நூலும், அந்நூலாசிரியரான அடிகளாசிரியர் அவர்களும் அறிமுகமானார்கள். அந்நூல் மரபு இலக்கணத்தில் மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றை ஆற்றொழுக்காக நவிலும் நூல். அதனைக் கற்று மகிழத் தமிழில் நல்ல பயிற்சியுடையவர்களுக்கே இயலும்.

அந்நாளில் மரபுப்பாடல் எழுதுவதில் வல்லமை பெற்றிருந்த நன் அந்நூல் பற்றிப் பின்வரும் மதிப்புரையைக் கட்டளைக் கலித்துறையில் யாத்து திரு.அடிகளாசிரியர் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன். அப்பாடல்கள் வருமாறு:

அட்டியில் நற்கை அகத்தில் தொழுதேன்!

வருந்திய நெஞ்சுடன் வண்டமிழ் காக்கச் சிலவினைகள்
மருந்தெனச் செய்து மயங்கி உழன்று மடிகையிலே
அருந்தமிழ் வல்ல அடிகளின் தண்ணிழல் நூலமுதம்
பொருந்தியென் நெஞ்சைப் புலவிருந்(து) ஊட்டிப் புதுக்கியதே!

கழக இலக்கியம் கற்ற அடிகள் புலமைநலம்
அழகிய நூலினுள் ஆர்ந்து விளங்கி அழகுவிடப்
பழகு குழந்தை படிப்பதாய்ப் பன்முறை வாய்விடுத்தே
ஒழுகிய ஓசையில் ஓங்கி ஒலித்தேன்! உவகையுற்றே!

கலிப்பா வகையைக் கண்டு நடுங்கும் புலவரிடைச்
சலிப்பே எழாஅது செந்தமிழ் வண்ணம் சிறந்திலங்கப்
புலிப்பால் நிகர்த்த பெருந்தமிழ்ச் சீரைப் புகன்றதுபோல்
வலிப்பாய் எழுதியும் வண்டமிழ் போற்றியும் வாழுகவே!

வாழும் புலவர் வளமனை வாங்கி,வதிகையிலே
கூழை உணவினில் கூட்டி மிகவுண்டு,கூர்வறுமை
ஆழும் அறிஞரே! ஆக்கப் பணிகள் அணிபெறுமேல்
வீழும் புரட்டுகள்! வெண்ணிலா என்று விளங்குவையே!

எழுதிக் குவித்த எனதின் புலவ! அடிகளரே!
புழுதியும் குப்பையும் பொத்தகப் பேரில் புறம்வருதல்
கழுதைகள் சில்ல கடித்தே குதப்பிக் கருத்துரைத்தல்
இழுவைச் செயலாய் இருக்க,இதனில் விலகினரே!

விருத்த வகையில் விரிதமிழ் யாப்பை விதந்துரைத்துத்
திருத்திநற் செய்தியைத் தீட்டினீர் தேன்போல் செழுந்தமிழின்
பருத்த பலநூல் பயின்றீர்! பெரும்புலம் நூல்வடிவில்
துருத்தி வெளிவரும் தூய்மை தொழுது மகிழ்ந்திடவே!

புறநூல் பயிலப் புகுவோர் நுமதரும் தண்ணிழலைத்
திறமாய்ப் பயின்று திகழ்தமிழ்க் கோட்டை அடைவரெனில்
மறக்களம் கண்ட மகிழ்வை அடைவரே! மாற்றறியா
அறப்பா அமைத்த அறிஞ! அடைக பெரும்புகழே!

காதல் இயம்பக் கனித்தமிழ் வாழும் எனமுழங்கி
நோதல் உறும்புல மன்றில் நுமைப்போல் புறமதனை
ஈதலைச் செய்தவர் யார்நவில்? எம்போல் இளையவரோ
மூதர் அவையின் முனைமுகம் தங்க அருளுகவே!

பொருளும் உவமையும் பூட்டிப் புலவயல் சீருறவே
அருளால் உழுத அடிகளே! அன்னைத் தமிழினத்தார்
தெருளா(து) உமதடி தெய்வப் பொருளதாய்த் திகழ்தலையின்
சுருள்முடி தாங்கிச் சுமக்க இனியும் துலங்குவரே!

மீன்கள் உலவும் மிளிர்வயல் தன்னில் மருட்டிசில
தோன்றி இருப்பின் துணைவிழி காண்குறும்! ஆங்கதுபோல்
ஈன்றநற் பாட்டில் எதுகையின் மோனையின் ஈட்டமெண்ணி
ஊன்று வடசொல் உலவுதல் உள்ளம் உணருவதே!

மட்டுரை என்று மனந்தான் மகிழ்ந்தே உவப்புறநீர்
கட்டுரைப் பாங்கில் கதையை விளக்கினீர்! கண்டுவந்தேன்!
வெட்டுரை போன்று விரிதமிழ்க் கல்லில் பொறித்திடுநும்
அட்டியில் நற்கை அகத்தில் தொழுதேன்! அடிபணிந்தே!

(அடிகளாசிரியரின் தண்ணிழல் நூலுக்கு 04.06.1993ல் நான் எழுதிய மதிப்புரைப்பாடல்)

தண்ணிழல்(1990)

இப்பாடல்கள் என் அரங்கேறும் சிலம்புகள்(2002) நூலில் இடம்பெற்றதைத் தவிர வேறு எந்த முன்னேற்றமான செய்தியும் இல்லாது அடிகளாசிரியர் பற்றி நினைவுகள் வருவதும் போவதுமாக இருந்தேன்.

திருச்சிராப்பள்ளியில் வதியும் திரு.அடிகளாசிரியர் அவர்களின் மாணவர் புலவர் தமிழகன் ஐயா அவர்கள் சிலநாள் அடிகளாசிரியர் மாண்பைச் சொல்லக் கேட்டுள்ளேன்.பல நிறுவனங்களில் படிப்பு, ஆய்வு, பணி எனச் சுழன்றுகொண்டிருந்த என் வாழ்வில் அண்மைக் காலமாக அடிகளாசிரியரைக் கண்டு வணங்கும் வேட்கை மேம்பட்டு நின்றது.

சின்னசேலம் அருகில் உள்ள ஊரில் பிறந்து திருவண்ணாமலையில் மின்வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரியும் நண்பர் அ.சிவராமன் அவர்களின் தொடர்பு அமைந்த பொழுது, அவர் ஊருக்கு அருகில்தான் அடிகளாசிரியரின் ஊர் அமைந்திருப்பதாகவும்,அவரைக் காணத் தம் நண்பர் வழி உதவுமுடியும் எனவும் உறுதியுரைத்தார். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி அடிகளாசிரியரைக் கண்டுவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.முதல்நாள் இரவு திட்டமிட்டு 09.08.2008 வைகறையில் எழுந்து, சின்னசேலம் சென்றேன்.

முன்பே திட்டமிட்டபடி மின்துறைப் பொறியாளர் வேலுமணி அவர்கள் எனக்காக உந்து வண்டியுடன் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். காலை பத்து மணிக்குதான் என்னால் அங்குச் செல்லமுடிந்தது. பேருந்து மெதுவாகச் சென்றதால் காலத் தாழ்ச்சி.

சிற்றுண்டியை முடித்துக்கொண்டு இருவரும் கூகையூர் செல்லும் கரிச்சாலையில் மகிழ்ச்சியாகப் பயணம் செய்தோம். திருச்சிராப்பள்ளி செல்லும் சாலை என்பதால் சாலை வசதி நன்கு உள்ளது என்றார் வேலுமணி. மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அப்பாதையின் இருமருங்கும் இருப்பதால் நல்ல விலைக்கு நிலம் விற்பத்தாகவும் சொன்னார். வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிலங்களில் இருந்தது. சுற்றுச்சுவர் இல்லை. படல் இல்லை. காப்பாளர் இல்லை. இயற்கை வாழ்க்கை நிகழ்த்தும் அம்மக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். கிணற்றுப் பாசனம் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் மட்டும் இருக்கும் அப்பகுதியில் புதியஅரிசி ஆலைகள் மிகுதி. நெல் அறைக்க ஏற்ற பதமான சூழல் அங்கு உள்ளது.

சோளம்,கரும்பு,மஞ்சள்,கருணைக்கிழங்கு,வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சின்ன சேலம் பகுதியில் அதிகம் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் மஞ்சளுக்கு ஈரோட்டுச் சந்தையில் நல்ல விலை கிடைக்குமாம். மஞ்சள் அறுவடை, சோளம் அறுவடை பற்றிய செய்திகளை நண்பர் வேலுமணி அவர்கள் சொல்லிக்கொண்டே வந்தார். போகும் பொழுது வழியில் ஒரு கொல்லையில் சோளத்தட்டைகள் உள்ள வயலில் இறங்கி ஒரு உந்து ஏரோட்டத் தொங்கியது. அங்கிருந்த தட்டைகள் கண்ணுக்குத் தெரியாதபடி மண்ணுடன் மண்ணாக மக்கச்செய்யும்படி, நொய்மணலாக அந்த வண்டி மாற்றியது. இதனை மீண்டும் திரும்பி வரும்பொழுது கண்டேன்.

இதமான காற்றை உள்வாங்கிக்கொண்டே 12 கல் தொலைவில் இருந்த கூகையூர் என்னும் ஊரை அடைந்தோம்.அவ்வூர் குகையூர் எனவும் அழைக்கப்படும். வெள்ளாற்றங்கரையின் வடகரையில் அமைதியான பண்புடைய மக்கள் காணப்படும் அவ்வூரில் இறங்கி,அடிகளாசிரியர் வீடு எது? என வினவினேன்.

-முனைவர் மு.இளங்கோவன் ([email protected])

நன்றி: http://muelangovan.blogspot.com/

தொடர்பான செய்திகள்:

வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி: அடிகளாசிரியர்- பகுதி 2வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி: அடிகளாசிரியர்- பகுதி 2

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X