For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரி புலவர் நாகி

By Sridhar L
Google Oneindia Tamil News

Na.Krittinan
-முனைவர் மு.இளங்கோவன்

புதுச்சேரிப் புலவர்களுள் குறிப்பிடத் தகுந்த பெருமைக்கு உரியவர் புலவர் நாகி அவர்கள் ஆவார்.சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் ஐயா அவர்களின் வழியில் அரசியல் சார்பும் தமிழனப் பற்றும் சிலப்பதிகார ஈடுபாடும் கொண்ட இவரைப் பலவாண்டுகளாக யான் நன்கு அறிவேன். புதுச்சேரியில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொள்ளும் இவருடன் அண்மைக் காலமாக நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதுபொழுது இவர்களின் தமிழ்ப்புலமையும் தமிழ்ப்பற்றும் அறிந்து உவந்தேன்.

சிலப்பதிகாரத்தை ஊர்தோறும் கொண்டு சேர்த்தும் தமிழக எல்லைச் சிக்கல்கள் உருவானபொழுது முன்னின்று தமிழகப் பகுதிகளை மீட்டெடுத்தும் வரலாற்றில் இடம்பெற்ற அறிஞர் சிலம்புச்செல்வர் ஐயா அவர்கள் மேல் எனக்கு அளவுக்கு அதிகமான ஈடுபாடு உண்டு.

ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் (ம.கோ.இரா. ஆட்சியில்) எங்கள் ஊரான கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற இராசேந்திரசோழன் விழாவில் நம் சிலம்புச்செல்வர் உரையாற்றியமை இன்றும் என் மனக்கண்ணில் நிற்கின்றது. நகைச்சுவை கலந்து, அரசியலும் இலக்கியமும் அப்பெருமகனாரின் பேச்சில் அன்று வெளிப்பட்டதை எண்ணி எண்ணி மகிழும் நிலையில், அவர் வழியொட்டி வாழும் புலவர் நாகி அவர்கள் என்பதையறிந்து அகம் மகிழ்ந்தேன்.

சிலப்பதிகாரச் சுவையில் திளைப்பவர்களை என் அன்பிற்குரியவர்களாகவும் அவற்றைப் பரப்புபவர்களை என் உள்ளங் கவர்ந்தவர்களாகவும் நினைப்பவன் யான். அவ்வகையில் சிலம்புச் செல்வரிடத்து அரசியல் தெளிவு பெற்றுத் தமிழ்வளர்ச்சிக்குப் பல்வேறு அல்லல்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட புலவர் பெருமகனாரின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்து வைக்கிறேன்.

புலவர் நாகி அவர்களின் இயற்பெயர் நா.கிருட்டினசாமி என்பது ஆகும் இவர் 13.08.1934 இல் புதுச்சேரியில் உள்ள திலாசுப்பேட்டை என்னும் பகுதியில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் நாராயணசாமி. அரங்கநாயகி ஆவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பண்டிதப் படிப்பையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான், பி.லிட் என்னும் பட்டப் படிப்புகளையும் படித்துப் பட்டம் பெற்றவர்.

1961 முதல் 1994 வரை தமிழாசிரியராகப் புதுவை மாநிலத்தின் பல பள்ளிகளில் பணிபுரிந்தவர். நன்மாணாக்கர் பலரை உருவாக்கியுள்ள புலவர் நாகி அவர்கள் சொற்பொழிவுகள் வாயிலாகவும் மேடை நாடகங்கள் வாயிலாகவும் நகர, சிற்றூர் மக்களிடம் அறியாமை-கல்லாமை, சாதி, சமயப் பிணக்குகள், மூடநம்பிக்கைகள் பற்றி எடுத்துரைத்து மக்கள் பணிபுரிந்தவர்.

திலாசுப்பேட்டையில் தமிழ்க்கூடல் என்னும் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி அதற்குத் தலைவராக இருந்து தனிச்சொற்பொழிவுகள், வழக்காடு மன்றம், பட்டிமன்றம், தொடர்ப் பொழிவுகள் நடைபெற வழிவகுத்தார். வானொலி,தொலைக்காட்சி வழியாகவும் இலக்கியப் பணியாற்றி வருகிறார்.

மும்மணிகள் என்ற கையேட்டுப் படியை ஓராண்டு நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இவர்தம் நாடக ஆற்றல் உணர்ந்த ஔவை. தி.க.சண்முகனார், ஏபி,நாகராசன், ஏ.கே.வேலன் ஆகியோர் பாராட்டியுள்ளனர். தி.க.சண்முகம் அவர்கள் இவர்தம் நாடகத்தைப் பாராட்டியதுடன் ஐவர் உரையைப் பரிசாக நல்கி மகிழ்சிக் கண்ணீர் விட்டார்.

புலவர் நாகி அவர்களின் நாடகங்களுள் 1. மறுமணம் 2. ஏன் இந்த நிலை, 3. வீமனின் வெற்றி, 4. உலகம் பெல்லாதது, 5. சேரன்செங்குட்டுவன், 6. வீரபாண்டிய கட்டபொம்மன், 7. தன்வினை தன்னைச்சுடும், 8. மார்க்கண்டேயன், 9. பல்லவன் நந்திவர்மன், 10. பரஞ்சோதியார், 11. தாயகம் காப்போம் உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்தன.

பல்வேறு இதழ்களில் எழுதியுள்ள புலவர் நாகி அவர்கள் துலாக்கோல், மன்னவனும் நீயோ, இருமனம், ஒரு திருப்பம், சிந்தனைச் சிதறல்கள், எழுச்சிப் பத்து, ஊர்க்குருவி உலகைப் பார்க்கிறது, அன்பாரம், புரவலரே வாழ்க, புதுவை நாகியின் எண்ணப்பூக்கள், ஒருநாள் கூத்து உள்ளிட்ட நூல்களையும் இயற்றியுள்ளார். இந்நூல்கள் நாடகம், புதினம், பாடல்கள் எனப் பல திறத்தன.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராகவும், புதுவைச் சிவம் இலக்கியப் பேரவையின் செயலாளராகவும், புதுவை அரசின் கல்விக்குழு உறுப்பினராகவும், கலைமாமணி விருதளிப்புக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கலைமாமணி (புதுவை அரசு), மொழிப்போர் மறவர், சங்கரதாசு சுவாமிகள் விருது, முத்தமிழ்ச் செம்மல் உள்ளிட்டவை குறிப்பிடத் தகுந்தனவாகும்.தமிழுக்குப் பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்யப் புலவர் பெருமகனாரை வேண்டுகிறோம்.

புலவர் நாகி அவர்களின் தொடர்பு முகவரி:

புலவர் நாகி அவர்கள்
"சிலம்பகம்"
79,அய்யனார்கோயில் தெரு,
திலாசுப்பேட்டை(தமிழூர்),
புதுச்சேரி-605 009.

செல்பேசி : 9442031286
இல்லம் : 0413- 2276221

நன்றி: http://muelangovan.blogspot.com/

[email protected]

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X