For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்க இலக்கியச் செம்பதிப்பாளர் முனைவர் ஈவா வில்டன்

By Sridhar L
Google Oneindia Tamil News

- முனைவர் மு.இளங்கோவன்

தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் செர்மனி நாட்டு அறிஞர்கள் பலவகையில் தொண்டு புரிந்துள்ளனர். தமிழ் இலக்கியங்கள் சார்ந்த பல ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள்,சிலைகள் செர்மனி நாட்டில் இன்றும் உள்ளன.

செர்மனி நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது.ஆய்வுப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலைநாடுகளில் முன்பெல்லாம் சமற்கிருதமொழி பயிற்றுவிக்கப்படுவதே முதன்மையானதாக இருந்தது.

சமற்கிருதமொழி கற்ற பலர் பின்னர் தமிழ்மொழியைப் பற்றி அறிந்த பிறகு தமிழ் அறிஞர்களாக மாறிப்போவதே வரலாறாக உள்ளது.அவ்வகையில் சமற்கிருத மொழிகற்று, வேதங்களை நன்கு படித்த ஒருவர் தமிழ்மொழி இலக்கிய அறிமுகம் ஏற்பட்டதும் தமிழ் ஆராய்ச்சிப் பணிகளில் தம்மை முழுமையாகக் கரைத்துக் கொண்டார். அவர்தான் ஈவா வில்டன் அம்மையார் அவர்கள். அவர்களின் தமிழ்வாழ்க்கையையும் சங்க இலக்கிய ஆய்வுப்பணிகளையும் இங்கு எண்ணிப்பார்ப்போம்.

ஈவா வில்டன்(Eva Wilden) அவர்கள் செர்மனி நாட்டில் உள்ள ஒப்லேடன்(opladen ) என்னும் ஊரில் 28.02.1965 இல் பிறந்தவர்.பெற்றோர் பெயர் ரோல்ட் வில்டன்(Rolt Wilden),உருசுலா வில்டன்(Ursula Wilden) என்பதாகும்.தந்தையார் பொறியாளராகச் செருமனியில் உள்ளார். அம்மா வேதியியல்துறையில் பணியில் உள்ளார்.

இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய ஈவா வில்டன் அவர்கள் புகுமுக வகுப்பில் செர்மனிய இலக்கியங்களையும் தத்துவங்களையும் பயின்றார்.பின்னர் துபிங்கன் பல்கலைக் கழகத்தில் இளங்கலை(1986-88) தத்துவம்,செர்மனிய இலக்கியம் பயின்றவர். அம்பர்க்கு(Hamburg) பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்றவர். இதில் இந்தியவியல் தத்துவம் பயின்றார். குறிப்பாக மந்திரங்கள் பற்றிய பகுதியில் கவனம் செலுத்தினார். "வடமொழிப் பிராமணங்களின் வழிக் கடவுளருக்கும் மானுடர்க்குமிடையே பலி"என்னும் திட்டக்கட்டுரையை இதற்கென உருவாக்கினார்.

அம்பர்க்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராக இருந்தபடியே வேதங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற்றவர்(1996). இவர் நெறியாளர் பேராசிரியர் வெசுலர்(Wezler) ஆவார்.முனைவர் பட்டத்துக்கு இவர் மேற்கொண்ட தலைப்பு "வேதங்களில் பலிப்படையல்களின் பங்கீடு" என்பதாகும்.

இவ்வாறு இவர் வேதம்,வடமொழி என்று அறிந்திருந்தாலும், பயிற்சிபெற்றிருந்தாலும் செர்மனியில் பணியாற்றிய தமிழ்நாட்டுப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் தமிழ் மொழியையும் தொல்காப்பியம்,சங்க இலக்கியங்களையும் அறிமுகம் செய்தபொழுது குறுந்தொகை உள்ளிட்ட இலக்கியங்கள் இவருக்கு அறிமுகம் ஆயின. எட்டாண்டுகள் இவர் சீனிவாசனிடம் கற்றுள்ளார். சங்க இலக்கியங்களில் ஓர் உலகப்பொதுமை காணப்படுவதை உணர்ந்த ஈவா வில்டன் அவர்கள் சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.

குறுந்தொகை பற்றிய விரிவான பாடங்களைக் கோபாலையர் அவர்களிடம் புதுவை வந்து கற்றார்.அவர் தம் தாய்நாடான செர்மனி செல்ல இரண்டு கிழமைகள் ஓய்வு கிடைத்தது. அந்த நேரத்தில் நற்றிணை என்ற மற்றொரு சங்க இலக்கியத்தைக் கற்றார். கோபாலையர் அவர்கள் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை வழியாக நற்றிணையை விளக்கினார். கோபாலையரிடம் இவர் தொல்காப்பியம் - நச்சினார்க்கினியம்,இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்களைப் பாடம் கேட்டுள்ளார்.

குறுந்தொகை,நற்றிணை என்ற இரண்டு நூல்களில் ஈவா அவர்களின் கவனம் குவிந்தது. இதில் குறுந்தொகை பற்றிய பாடல் பகுதிகளில் பாடவேறுபாடுகள் பல இருக்கக் கண்டு இதற்குச் செம்பதிப்பு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார்.அதுபோல் நற்றிணையில் உள்ள பாடவேறுபாடுகள்,உரைக்குறிப்புகளில் வேறுபாடுகள் இருக்கக்கண்டு அதனையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும் முயற்சியில் கடுமையாக உழைத்தார்.

அயல்நாட்டு நூலகங்கள், உ.வே.சா. நூலகம்,திருவனந்தபுரம் நூலகம், கல்கத்தா நூலகம்,சென்னைக் கீழ்த்திசை நூலகம் திருவாவடுதுறை மடத்து நூலகம் உள்ளிட்ட பல நூலகங்களுக்குச் சென்று பலவகையான பதிப்புகளைக் கண்டு ஒப்புநோக்கினார்.

நற்றிணைப் பதிப்புக்காக இவர் மூன்று முதன்மைப் பதிப்புகளையும் ஐந்து கையெழுத்துப் படிகளையும் ஒப்பிட்டுத் தம் நற்றிணைப் பதிப்பைக் கொண்டு வந்தார்.ஓலைச்சுவடிகளில் உள்ள சங்க இலக்கியப்பகுதிகளைப் புதிய மின்வடிவில் கொண்டுவந்து இனி அழியாத வகையில் இவர் கணிப்பொறியில் பாதுகாத்துவருகின்றார்.முதலில் நற்றிணைச் செம்பதிப்பு வெளியானது.1500 உரூவா விலையில் மூன்று தொகுதிகளாகத் தமிழ்மண் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

நற்றிணைப் பதிப்பு விரிந்த ஆராய்ச்சி முன்னுரை கொண்டது. முதல் பகுதி 1-200 பாடல்களைக் கொண்டுள்ளது.இரண்டாம் பகுதி 201-400 பாடல்களைக் கொண்டுள்ளது. மூன்றாம் பகுதி சொல்லகர நிரலாக விளங்குகிறது.நற்றிணையில் இடம்பெறும் சொற்கள் யாவும் முறையாக விளக்கப்பட்டுள்ளன.இதுபோல் சங்க இலக்கியங்கள் அனைத்திற்கும் சொல் நிரல்கள் உருவானால் பழந்தமிழ்ச்சொற்களின் அகரநிரலை ஓரிடத்தில் கொண்டு வந்துவிட முடியும்.

நற்றிணைப் பதிப்பில் புலவர் பெயர், கூற்று, பாடல், வேறுபாடு, ஆங்கில எழுத்தில் பாடல், குறிப்பு, மொழிபெயர்ப்பு, அடிக்குறிப்பு எனச் செய்திகள் உள்ளன. தமக்குத் தமிழ் அறிமுகம் செய்த பேராசிரியர் சீனிவாசன் அவர்களுக்கு இந்த நூலை ஈவா படையல் செய்துள்ளார்.

குறுந்தொகையும் மூன்று தொகுதிகளாக விரைவில் வெளிவர உள்ளது.குறுந்தொகைக்கு இதுவரை இருபதிற்கும் மேற்பட்ட தரமான பதிப்புகள் வெளிவந்துள்ளன. இவற்றையெல்லாம் பார்த்துப் பாடவேறுபாடுகள் கண்டு செம்பதிப்பு வெளிவர உள்ளது.

இவர் உற்றுநோக்கிய பழைய பதிப்புகளில் சவுரிப்பெருமாள் அரங்கன்,இராமாமிர்தம்,இராகவ ஐயங்கார், உ,வே.சா, வையாபுரியார் பதிப்புகள் குறிப்பிடத்தக்கன.இத்துடன் கையெழுத்துப்படிகள் பல கண்டு இப்பதிப்புகளைச் செய்துள்ளார்.

ஈவா அவர்களின் ஆங்கில முன்னுரை, ஆய்வுரைகள் சங்க இலக்கியச்செம்பதிப்பை எவ்வாறு அறிவியல் அடிப்படையில் செய்யவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.இவர்தம் கடுமையான உழைப்பும் உண்மைகாணும் ஆர்வமும் இம்முன்னுரைகளால் தெற்றென விளங்கும். ஈவா அவர்களின் ஆங்கில முன்னுரைக்குத் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. அறிஞர் விசயவேணுகோபால் அவர்கள் மிகச்சிறப்பாகத் தமிழில் முன்னுரையை மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.

குறுந்தொகை இரண்டாண்டுகளாகப் பதிப்புப்பணி நடைபெற்று வருகிறது.மூன்று தொகுதிகளாகத் தமிழ்மண் பதிப்பகம் விரைவில் வெளியிட உள்ளது.

சங்க இலக்கியங்களைப் பலர் பதிப்பித்துள்ளனர். அவரவர்களும் அவர்களின் மனவிருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்பப் பாடவேறுபாடுகளைக் குறித்துள்ளனர்.இவர்கள் உரிய பாடமாக ஒரு சொல்லை எடுத்துக்கொண்டதற்குரிய காரணத்தைக் காட்டவில்லை.அதுபோல் ஒருசொல்லைப் பாடத்திலிருந்து நீக்கியதற்குக் காரணம் சொல்லவில்லை. எல்லாப் பதிப்பாசிரியர்களும் எல்லாப் பதிப்புகளையும்(ஓலைச்சுவடிகள்,முந்தைய பதிப்புகள், கையெழுத்துப் படிகள்) பார்க்கவில்லை. ஒப்பிட்டுக் கண்டு பாடவேறுபாடுகளைச் சுட்டவில்லை.

பாடவேறுபாடு காரணமாக ஒதுக்கப்பட்ட சொற்கள் சங்க இலக்கியச் சொல்லகராதிகளில் இடம்பெறுவதில்லை. இருக்கும் சொற்களைக் கொண்டே பழைய மொழிநடை, பண்பாட்டுக் கூறுகளை இன்று அறியகிறோம்.இதனால் பழந்தமிழ் மொழியமைப்பு,இலக்கணம் உணர்வதில் சிக்கல் உள்ளது.இவற்றையெல்லாம் மனத்தில் உட்கொண்ட ஈவா அவர்கள் அனைத்துப் பாடவேறுபாடுகளையும் காட்டி உண்மையான பாடம் இதுவாக இருக்கமுடியும் என்று காரண காரிய அடிப்படையில் துணிந்து இந்தப் பதிப்பை உருவாக்கியுள்ளார்.இந்த நற்றிணைப் பதிப்புக்கு இவர் வரைந்துள்ள ஆய்வு முன்னுரை குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

1.தமிழ்ச்செவ்வியல் நூல்களின் பதிப்பு,2.நற்றிணைப் பதிப்புகள்,3நற்றிணை மொழிபெயர்ப் புகள்,4.நற்றிணை மேற்கோளுக்கான ஆதாரங்கள்,5.நற்றிணைப் பிரதிகள்,6.நற்றிணை மூலங்களுக்கிடையேயான உறவுகள்,7.நற்றிணை இடைவெளிகளும் வழமையானவை அல்லாதவைகளும்,8.பதிப்புநெறியும் விளக்கத்திற்கான அடிப்படைகளும்,9.மூலபாடத் திருத்தங்களும் பிற திருத்தங்களும், 10.பனுவலின் கட்டமைப்பு, மொழிபெயர்ப்பு, குறிப்புரை என்ற தலைப்புகளில் மிகச்சிறந்த ஆய்வுரை வரைந்துள்ளார்.

1997-2002 இல் செருமன் ஆய்வுக் கழகத்திடம் இரண்டு கல்வி உதவித்தொகையினைப் பெற்று சங்க இலக்கியங்களில் இலக்கிய உத்திகள்(குறுந்தொகை) என்னும்பொருளில் ஆராய்ந்தார்.புதுச்சேரி-பாரிசில் உள்ள பிரஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளியில்(EFEO) உறுப்பினராக இணைந்து தமிழ்ப்பிரிவின் தலைவராக இன்று பணிபுரிகிறார்.பன்னாட்டு ஆய்வுத்திட்டத்தில் சங்க இலக்கியங்களின் செம்பதிப்புப் பணியை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் குளிர்காலக் கருத்தரங்கம் என்ற பெயரில் செவ்வியல் இலக்கியங்களுக்கான அறிஞர்கள் 4 கிழமைகள் பங்கேற்கும் கருத்தரங்குகளை நடத்தியிருக்கிறார்.பிரான்சுநாட்டு அறிஞர் செவியா அவர்களுடன் இணைந்து அகநானூறு பதிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

ஈவா அவர்களுக்கு 1992 இல் திருமணம் நடந்தது.இவர் கணவர் பெயர் கிளாடிவ்சு நென்னிஞ்சர்(Clavdivs Nenninger) என்பதாகும். மால்ட்டு நென்னிஞ்சர், இராபர்ட்டு நென்னிஞ்சர் என்ற இரண்டு மழலைச்செல்வங்கள் இவர்களுக்கு உண்டு. கணவர் சமற்கிருதம் அறிந்தவர். இவர்கள் செர்மனியில் வாழ்ந்துவருகின்றனர்.

தென்னாசிய ஆய்வுக்கான வியன்னா ஆய்விதழில்(4 ஆம் மடலம்,202) "பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களின் கால நிருணயம்"என்ற இவர் கட்டுரை வெளியானது.மிகச்சிறந்த ஆய்வுக்கருத்துகளை இதில் முன்வைத்துள்ளார்.2003 இல் "பழந்தமிழ்ச்செய்யுளின் இலக்கிய உத்திகள்(குறுந்தொகை)" என்னும் கட்டுரையும் "தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாநடை- சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல்" என்னும் கட்டுரையும் இவரின் ஆய்வு வன்மை காட்டுவனவாகும்.

பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை படித்துள்ளார்.பல கருத்தரங்குகளை முன்னின்று நடத்தியுள்ளார்.பேராசிரியர் தி.வே.கோபாலையர் மேல் அளவுக்கு அதிகமான பற்று வைத்துள்ள ஈவா வில்டன் அவர்கள் அவரின் நினைவைப் போற்றும் வகையில் பல ஆக்கப்பணிகளைச் செய்துவருகின்றார்.

ஈவா அவர்களுக்கு வடமொழி,தமிழ் ஆங்கிலம் ,செருமன் உள்ளிட்ட பல மொழிகள் தெரியும்.வடமொழியும் அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களும் கற்றதால் தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதையும் நன்கு உணர்ந்துகொள்ளமுடிகிறது என்கிறார்.அதன்வழித் தமிழின் தனித்தன்மை விளங்குகிறது என்று மொழிகின்றார்.

நனி நன்றி

தமிழ்ஓசை(களஞ்சியம்)நாளேடு,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 19,01.02.2009
பேராசிரியர் விசயவேணுகோபால்(பிரஞ்சு ஆசியவியல் ஆய்வு நிறுவனம்,புதுச்சேரி)
பிரஞ்சு ஆசியவியல் ஆய்வு நிறுவனம் நூலகம்(EFEO),புதுச்சேரி

- முனைவர் மு.இளங்கோவன்.

தட்ஸ்தமிழ் நன்றி: http://muelangovan.blogspot.com/

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X