For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு!

By Sridhar L
Google Oneindia Tamil News

Gandhi Memorabilia
நியூயார்க்: பெரும் பரபரப்பு, திருப்பங்களுக்கு மத்தியில் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை ரூ. 9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா. ஆனால் மல்லையா மூலம் மத்திய அரசுதான் இந்தப் பொருட்களை வாங்கியுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி பயன்படுத்திய வட்ட மூக்கு கண்ணாடி, பாக்கெட் கடிகாரம், சந்தனத்தால் செய்யப்பட்ட செருப்பு, சாப்பாட்டு தட்டு, குவளை, ரத்த பரிசோதனை அறிக்கை, மாணவர்களுக்கு கையெழுத்திட்டு அவர் அனுப்பிய வாழ்த்து தந்தி போன்ற அவரது நினைவு பொருட்கள் ஜேம்ஸ் ஓடிஸ் என்ற அமெரிக்கர் வசம் இருந்தது.

அவர் காந்தியின் பொருட்களை நியூயார்க்கில் உள்ள ஆன்டிகோரம் என்ற ஏலமையம் மூலம் இன்று ஏலம்விடப் போவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்திய அரசு தலையிட்டு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது ஓடிஸ் இந்திய அரசு பட்ஜெட்டில் ராணுவ செலவுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக, ஏழைகளின் சுகாதார வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது உட்பட சில நிபந்தனைகளை விதித்தார்.

ஆனால், அவரது நிபந்தனைகள் ஏற்க முடியாதவையாக இருந்ததை அடுத்து அது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மன் மோகன் சிங், இந்த ஏலத்தை ரத்து செய்ய முடிந்தவரை முயற்சிக்குமாறு கலாசார துறை அமைச்சர் அம்பிகா சோனிக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடைசி நிமிடத்தில் மனம் மாறிய ஜேம்ஸ் ஓடில் ஏலத்தை ரத்து செய்தார். ஆனால், இதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஏலத்தில் பங்கேற்க 30 பேர் பெயர் கொடுத்து விட்டனர். சிலர் ஏலத் தொகையையும் தெரிவித்துள்ளனர். எனவே ஏலத்தை ரத்து செய்ய முடியாது என கூறிவிட்டது.

இதையடுத்து ஏலம் நடந்தது. ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் திடீர் திருப்பமாக விஜய் மல்லையாவும் கலந்து கொண்டார். அவரது சார்பில் டோனி பேடி என்பவர் ஏலத்தில் பங்கேற்றார்.

ரூ. 9.3 கோடிக்கு அவர் காந்தியடிகளின் பொருட்களை ஏலத்தில் எடுத்தார். காந்தியடிகளின் பொருட்களை நாட்டுக்காக மல்லையா ஏலத்தில் எடுத்துள்ளதாக டோனி தெரிவித்தார்.

மத்திய அரசே வாங்கி விட்டது - சோனி

இதற்கிடையே, மல்லையா மூலம் மத்திய அரசே காந்தியடிகளின் பொருட்களை வாங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.

இதுகுறித்து அம்பிகா சோனி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு நேரடியாக ஏலத்தில் பங்கேற்க முடியவில்லை. எனவேதான் விஜய் மல்லையா மூலம் இந்த ஏலத்தில் பங்கேற்று காந்தியடிகளின் பொருட்களை மத்திய அரசு பெற்றுள்ளது.

விஜய் மல்லையாவின் ஏஜென்ட் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்.

கலாச்சாரத்துறையும், வெளியுறவுத்துறையும் இணைந்து காந்தியடிகளின் பொருட்களை பெறுவதில் முயற்சியில் ஈடுபட்டிருந்தன என்று கூறியுள்ளார் சோனி.

கைக்கு வர 2 வாரமாகும்

ஏலத்தில் மல்லையா காந்தி பொருட்களை எடுத்து விட்டாலும் கூட சட்டப்படியான நடவடிக்கைகளுக்காக இன்னும் 2 வாரங்களுக்கு ஆன்டிகோரம் நிறுவனத்திடமே ஏலத்தில் எடுக்கப்பட்ட பொருட்கள் இருக்கும்.

இதற்குக் காரணம், காந்தி பொருட்களை ஏலம் விடக் கூடாது என்று தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமெரிக்க சட்டத்துறைக்கு இந்திய அரசு அனுப்பி வைத்து ஏலத்தை நிறுத்துமாறு கோரியிருந்தது.

இதையடுத்து ஏல நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட அமெரிக்க சட்டத்துறை, ஏலத்தை நடத்தலாம். ஆனால் அதை வாங்கியவர்களிடம், மறு உத்தரவு வரும் வரை பொருட்களை தரக் கூடாது என அறிவுறுத்தியிருந்தது.

இந்தியா தற்போது என்ன சொல்கிறதோ அதற்கேற்ப, ஆன்டிகோரம் நிறுவனத்திற்கு அமெரிக்க சட்டத்துறை உத்தரவு பிறப்பிக்கும். அதன் பிறகே மல்லையா கைக்கு ஏலப் பொருட்கள் வந்து சேரும்.

திப்பு சுல்தான் வாளை வாங்கிய மல்லையா:

மகாத்மாவின் அரிய பொருட்களை வாங்கி இந்தியாவின் மானத்தைக் காத்துள்ள விஜய் மல்லையா இதற்கு முன்பு திப்பு சுல்தாவின் விலை மதிப்பற்ற வாளை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திப்பு சுல்தான் பயன்படுத்திய வீர வாள், லண்டனில் ஏலத்திற்கு வந்தது. இந்த வாளை மல்லையாதான் பெரும் விலை கொடுத்து ஏலத்தி்ல எடுத்தார்.

மைசூர் புலியான திப்பு சுல்தான் 1799ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி ஸ்ரீரங்கப்பட்டனத்தின் மீது இங்கிலாந்துப் படையினர் படையெடுத்து வந்தபோது அந்த வாளை இங்கிலாந்துப் படையினரிடம் பறி கொடுத்தார். அந்த வாள் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த வாளை இங்கிலாந்து ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பெயர்ட் என்பவரின் வழித் தோன்றல்கள் 2003ம் ஆண்டு லண்டனில் ஏலத்திற்குக் கொண்டு வந்தனர்.

காந்தியின் பொருட்களை இன்னொருவர் மூலம் ஏலத்தில் எடுத்ததைப் போலவே இந்த வாளையும் வேறு ஒருவர் மூலம் ஏலத்தி்ல எடுத்தார் மல்லையா.

ஏலம் எடுத்தவர் யார் என்பது மர்மமாகவே இருந்து வந்தது. ஆனால் 6 மாதங்கள் கழித்துத்தான் இந்த செய்தியை வெளியிட்டார் மல்லையா. பெங்களூரில் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி வாளைக் காண்பித்து நான்தான் வாளை ஏலத்தில் எடுத்தவன் என அறிவித்தார் மல்லையா.

அப்போது அவர் ஜனதாக் கட்சியின் செயல் தலைவராக இருந்தார். கோலார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது இந்த வாளைக் காட்டி பிரச்சாரம் செய்தாலும் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 1.5 கோடிக்கு அந்த வாளை ஏலத்தி்ல எடுத்ததார் மல்லையா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X