For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிப் பார்க்க பேட்டரி கார்கள்!

By Sridhar L
Google Oneindia Tamil News

மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பேட்டரி கார்களில் சென்று சுற்றிப் பார்க்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும் உள்ள நான்கு சித்திரை வீதிகளும் போக்குவரத்து நெரிசலுடன் எப்போதும் காணப்படும்.

தற்போது இந்த வீதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது. மேலும், நான்கு சித்திரை வீதிகளும், அழகுற மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வாகனப் போக்குவரத்து அறவே ஒழிக்கப்பட்டு விட்டது.

அதற்குப் பதிலாக, பேட்டரி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்த பேட்டரி கார்களி்ல் ஏறி நான்கு சித்திரை வீதிகள் வழியாக மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிப் பார்க்கும் வகையில், இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மதுரை மாநகராட்சி நிர்வாகம் 4 பேட்டரி கார்களை ரூ. 16 லட்சம் செலவில் வாங்கியுள்ளது.

கடந்த மாதம் இவை சோதனை ரீதியாக இயக்கிப் பார்க்கப்பட்டன. இதையடுத்து நேற்று முதல் இந்த பேட்டரி கார் டூர் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த பேட்டரி கார்களில் பயணம் செய்ய பெரியவர்களுக்கு 10 ரூபாய், சிறியவர்கள் மற்றும் முதியோருக்கு தலா 5 ரூபாய் மற்றும் ஊனமுற்றோர், மன வளர்ச்சி குன்றியோருக்கு 2 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி கார்கள் நான்கு சித்திரை வீதிகளிலும் உள்ள நான்கு கோபுர வாசல்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும். எங்கு ஏறுகிறோமோ அங்கிருந்து கோவிலை ஒரு சுற்று சுற்றி வந்து அதே இடத்தில் இறக்கி விடுவார்கள்.

இந்த பேட்டரி கார்களில் ஒரு காரில் நான்கு பேர், இன்னொன்றில் 6 பேர், இன்னொன்றில் 8 பேர் என பயணம் செய்யலாம்.

இந்த பேட்டரி கார்களுக்கு மதுரை மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே அமோக வரவேற்பு காணப்பட்டது. பெரும் கூட்டமாக மக்கள் கூடி வந்து பேட்டரி கார்களில் சவாரி செய்து கோவில் அழகை கண்களால் பருகி மகிழ்ந்தனர்.

தற்போது நான்கு சித்திரை வீதிகளிலும் வாகனப் போக்குவரத்து முற்றிலும் இல்லாததால் நடந்து செல்லும் பழக்கமுடையவர்களுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X