For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியல் பேனர், போஸ்டர், கொடிக்கு தடா - அதிசய கிராமம்!

By Sridhar L
Google Oneindia Tamil News

Viruthunagar Dt.
சிவகாசி: விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அரசியல், பேனர், போஸ்டர், கொடி போன்றவற்றுக்கு அங்குள்ள மக்கள் தடை விதித்துள்ளனர்.

அந்த அதிசய கிராமம், விருநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள மேல ஒட்டம்பட்டி.

இங்கு ரெட்டியார், நாயுடு, தேவர், முஸ்லீம், அருந்ததியர் என பல சமூகத்து மக்களும் ஜாதி மத வேறுபாடு இன்றி அண்ணன் தம்பியாக, சகோதர சகோதரியாக வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் வசிக்கும் பலர் பட்டாசு தொழிற்சாலைகளில் பணி புரிபுரிந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் சினிமா விளம்பரம், அரசியல் கட்சி விளம்பரம், பேனர், கட்சி கொடி கட்டுதல், போன்றவற்றிற்கு தடை விதித்துள்ளனர்.

மேலும் கிராமத்தில் மது, பீடி விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி தொகுதியின் கீழ் முன்பு இருந்து வந்த மேல ஒட்டம்பட்டி தற்போது விருதுநகர் தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு 1500 பேர் வசிக்கின்றனர்.

கடந்த 60 ஆண்டுகளாக தேசிய கொடி மட்டுமே இந்த கிராமத்தில் கம்பீரமாக பட்டொளி வீசி பறந்து வருகின்றது. பஞ்சாயத்து அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று மட்டும் தேசியக் கொடி ஏற்றுவார்கள். வேறு எந்தக் கொடிக்கும் இந்தக் கிராமத்தில் இடம் கிடையாது.

ஏன், ரசிகர் மன்றங்களும் கூட இங்கு கிடையாது. இக்கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர் ஜெ. இளங்கோவன். இவர் கடந்த 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இருவரை, சுயேச்சையாக நின்று தோற்கடித்தார்.

மேல ஒட்டம்பட்டியில் அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை குறித்து இளங்கோவன் கூறுகையில், எங்களது கிராமத்திற்குள் அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்கள், போஸ்டர்களையும், சினிமாவையும், ரசிகர் மன்றத்தையும் நுழைய விடக் கூடாது என்பதை கொள்கை முடிவாக எடுத்துள்ளோம்.

எங்களது கிராமத்தில், சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் நடந்த முதல் தேர்தலின்போது பெரும் வன்முறை வெடித்தது. சுவர்களில் விளம்பரம் வரைவது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை அது. அதன் பின்னர் ஊர் மக்கள் கூடி அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள், பேனர்கள், கொடிகளுக்கும், சினிமா ரசிகர் மன்றத்திற்கும் தடை விதிப்பது என முடிவெடுத்தனர். அன்று முதல் இதை உறுதியாக கடைப்பிடித்து வருகிறோம்.

இங்கு அரசியல்வாதிகள் வரலாம். ஆனால் மேடை போட்டு பேசக் கூடாது. கார்களின் அணிவகுப்புக்கும் அனுமதி கிடையாது. நடந்துதான் வர வேண்டும், அமைதியான முறையி்ல் பேசி விட்டுப் போய் விட வேண்டும்.

சினிமா பட போஸ்டர்களையும் கூட நாங்கள் அனுமதிப்பதில்லை.

எங்களது கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அச்சகங்கலில் வேலை பார்த்து வருகின்றனர். பலர் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர். அச்சகங்களில் வேலை பார்ப்போர் அங்கு அச்சிடப்படும் போஸ்டர்களைக் கூட இங்கு கொணடு வரக் கூடாது என்றார்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 75 வயதாகும் சுந்தரம் நாடாரும், அவரது மனைவியும் ஒரு தேர்தல் கூட விடாமல் அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களித்துள்ளனர்.

சுந்தரம் நாடார் தீவிர திமுக அனுதாபி. அண்ணாவின் கொள்ககைள் எனக்குப் பிடிக்கும். அதனால் திமுகவில் இணைந்தேன். எனது கிராமத்தில் ஒரு போஸ்டர் கூட இதுவரை ஒட்டப்பட்டதில்லை. நான் சாகும் வரை இதே போல கிராமம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

உள்ளூரில் நடக்கும் கோவில் விழாவின்போது கூட எந்த போஸ்டரையும் இவர்கள் ஒட்டுவதில்லையாம். அதற்குப் பதிலாக வேப்பிலை மாலைகளை மட்டுமே தெருக்களில் கட்டுவார்களாம்.

வித்தியாசமான இந்த கிராமம் போல இந்தியாவின் அத்தனை பகுதிகளும், மக்களும் இருந்து விட்டால், அரசியல் என்ற பெயரில் நடக்கும் அடாவடி, அட்டகாசங்களுக்கும், முறைகேடுகளுக்கும் வழியே இல்லாமல் போய் விடும் இல்லையா..

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X