For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மடல் எழுதுங்கள் - பரிசை வெல்லுங்கள் போட்டி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மடல் எழுதி பரிசை வெல்லும் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் கலந்து கொள்வோர் தங்களது மடல்களை ஜூலை மாதம் 5ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

"உள்ளங்கைக்குள் உலகம்" என்று சுருங்கிப்போன இவ்வுலகில் மனித உறவுகளின் மாண்பு அழிந்துப் போவது இயல்பே. மனிதன் தன உணர்வுகளை இழந்து நடைப்பிணமாக, சதைப் பிண்டமாகத் திரியும் இந்த அவசர உலகில் யாருக்கும் சக உறவு மீதோ, சக மனிதன் மீதோ பற்றுகள் இருப்பதில்லை.

நமது உணர்வு வெளிப்பாட்டின் மற்றொரு பரிமாணமாக இருந்த மடல் (கடிதம்) எழுதும் (கடிதம் என்பது வடமொழி சொல். மடல் என்பதே நல்லத தமிழ் சொல். எனவே வாசகர்கள் இனி மடல் என்கிற சொல்லை பயன்படுத்துங்கள்.) முறையை நாம் இன்று தொலைத்துவிட்டோம். அல்லது தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் அஞ்சலகங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு போட்டியாக தனியார் நிறுவங்களும் அஞ்சல் சேவையில் (சேவை???) ஈடுபட்டுள்ளன. ஆனால் இன்று வரும் கடிதங்கள் எதை தாங்கி வருகின்றன என்பதே நம் மனதில் எழும் வினா. (கேள்வி என்பதும் பதில் என்பதும் கூட வடமொழி சொல். எனவே வினா, விடை என்றே பயன்படுத்துங்கள். முடிந்தால்).

ஒரு காலத்தில் மனித உறவுகளின் மாண்புகளை சுமந்து வந்த மடல்கள் இன்று அலுவலகப் பணி, வங்கிப்பணி, தொலைப் பேசிக் கட்டணம், விவாகரத்து பிரச்சனைகள், கடன் அட்டை விபரங்கள் போன்ற பிரச்சனைகளையும், அறிவிப்புகளையும் மட்டுமே தாங்கி வருகின்றன.

ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து பட்டணத்திற்கு வந்து படிக்கும் தன் மகனுக்கு யாரோ ஒருவர் மூலம் அவள் தாய், தன்னுடைய ஏக்கங்களையும், பாசத்தையும், மகனைப் பற்றியக் கவலைகளையும் வார்த்தைகளாக மாற்றி மடலாக எழுதி அனுப்புவாள். இன்று அந்த வாய்ப்பு எத்துனை தாய்மார்களுக்கு கிடைக்கிறது. அல்லது யார் அதை விரும்புகிறார்கள்.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அந்தத் தொழில்நுட்பங்களால் வெறும் உணர்வுகளை பரிமாற்றம் செய்ய இயலாது. அவை வார்த்தைகளை ஒலியாக மாற்றி அனுப்பும் பணியை மட்டுமே மேற்கொள்கின்றன.

மடல்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஏதோ ஒருவித மவுனம் இருக்கும். ஆனால் இன்றைய அலைப்பேசிகளில் வெறும் இரைச்சல் மட்டுமே இருக்கும். வார்த்தைகளின் அழகே சில இடங்களில் அது மவுனமாக இருப்பதுதான்.

மடல் எழுதுவது என்பதே ஒரு சுகம். முதல் முறையாக மடல் எழுதும்போது உறவுகளை எப்படி விளிக்க வேண்டும், பெரியோர்களையும், மற்றவர்களையும் எவ்வாறு அழைக்க வேண்டும் என்கிறத் தடுமாற்றம் இருக்கும். "மதிப்பிற்குரிய அம்மா" என்று எழுதிவிட்டு பின்னர், அதை அடித்துவிட்டு, அன்பிற்குரிய அம்மாவிற்கு" என்று எழுதிய நினைவுகள் இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது.

மடல் எழுதும்போது அடித்தல், திருத்தல் இல்லாமல் இருக்காது. இந்த அடித்தாலும், திருத்தலும்தான், அந்த மடலுக்கே அழகு. நம்மை சார்ந்தவர்கள் மீதும், மனித உறவுகள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பின், ஏக்கத்தின் வெளிப்பாடே இந்த அடித்தாலும் திருத்தலும்தான்.

வாட்டி வதைக்கும் தனிமையை போக்கும் அருமருந்து இந்த மடல்கள். எங்கோ ஒரு மூலையில் பணிபுரியும் தன் மகன் ஒரு நாள் எழுதும் மடலுக்காக அந்த மாதம் முழுதும் தனிமையை ஏற்றுக் கிடக்கும் அந்தத் தாய்க்கு அவன் எழுதும் ஒரு மடல்தான் மிகச் சிறந்த நிவாரணி.

மடல்களின் சிறப்பை தமிழின் சங்கக் கால இலக்கியங்களும் மிக சிறப்பாக வலியுறுத்தி இருக்கின்றன. "நாரை விடுத் தூது", "பனை விடுத் தூது", "புறா விடுத் தூது" என மடல் இலக்கியங்கள் தமிழில் அதிகம்.

இதோ இறுதியாக அழிந்துக் கொண்டிருக்கும் மடல் எழுதும் முறையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக தமிழ் ஸ்டுடியோ.காம் மேற்கொள்ளும் முதல் முயற்சி. "மடல் எழுதுங்கள்...பரிசை வெல்லுங்கள்".

தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மடல் போட்டி நடத்த இருக்கிறது. இதில் சிறந்த மடலாக தேர்தெடுக்கப்படும் ஒரு மடலுக்கு 500 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

மேலும் முதல் மூன்று சிறந்த மடல்கள் எழுதியவர்கள், தமிழின் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளருடன் மாலை நேர தேனீர் சந்திப்பிலும் கலந்துக் கொண்டு அவருடன் கலந்துரையாடலாம்.

பரிசுகள்:

- முதல் சிறந்த மடலுக்கு 500 ருபாய் பரிசு.

- முதல் மூன்று சிறந்த மடல்களை எழுதியவர்களுக்கு தமிழின் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளருடன் மாலை நேர தேநீர் சந்திப்பில் கலந்துரையாடும் வாய்ப்பு.

நிபந்தனைகள்:

1. மடல்கள் கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த மாதத் தலைப்பு: ஏமாத்திட்டீங்களே தாத்தா!

2. தாளில் எழுதி அனுப்புவோர் எட்டுப் பக்கங்களுக்கு (A4 தாளில்) மிகாமலும் எழுதி அனுப்ப வேண்டும். மடல்கள் தாளில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். (மின்னஞ்சல் போன்ற கணினி சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தக் கூடாது. உங்கள் கையெழுத்தால் மட்டுமே எழுத்தின் அனுப்ப வேண்டும்).

3. ஒருவரே எத்தனை மடல்கள் வேண்டுமானாலும் எழுத்தின் அனுப்பலாம்.

4. ஒவ்வொரு மாதம் ஐந்து சிறந்த மடல்கள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும். பின்னர் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் குறும்பட வட்டம் நிகழ்வில் அந்த ஐந்து மடல்களையும் அதனை எழுதியவரே படித்துக் காட்ட வேண்டும். இதன் அடிப்படையில் முதல் சிறந்த மூன்று மடல்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதில் சிறந்த முதல் மடலுக்கு ஐந்நூறு ருபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். மற்ற இரண்டு மடல்கள் எழுதிய இருவர் மற்றும் முதல் பரிசு பெற்ற மடல் எழுதியவர் ஆகிய மூவரும் சிறப்பு தேநீர் சந்திப்பில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.

5. ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று மடல்களும் இறுதியில் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படும். அதற்கான இசைவையும் மடல் எழுதுபவர்கள் இணைத்தே அனுப்ப வேண்டும்.

6. போட்டியில் கலந்துக் கொள்ளும் அணைவருக்கும் குறும்பட வட்டத்தில் கலந்துக் கொள்ளும்படி அழைப்பு அனுப்பப்படும். அங்குதான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மடல்களும் அறிவிக்கப்படும். பின்னர் படிக்க வைத்து மூன்று மடல்களும் தேர்ந்தெடுக்கப்படும். எனவே போட்டியில் கலந்துக் கொள்ளும் அணைவரும் குறும்பட வட்டத்தில் பங்கு பெற்றே ஆக வேண்டும். குறும்பட வட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறும்.

7. போட்டியில் பங்குபெற நுழைவுக் கட்டணம் ஏதும் கிடையாது.

8. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

9. வெளியூர், வெளிநாடு ஆர்வலர்களும் இந்தப் போட்டியில் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் சார்பில் யாராவது ஒருவர் உறுதியாக நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டும்.

10. மடல்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: ஜுலை 5, 2009.

மடல்களை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

எம். அருண், 349, கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை 600 096.

மேலும் உங்களுக்கு எழும் ஐயங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236, 9894422268

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X