For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சை கோட்டைக் கொத்தளச் சுவரில் 1000 ஆண்டு கால கற் சிலைகண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

Rajarajan Statue
தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள பெரிய கோவில் என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவிலின் கோட்டை கொத்தளச் சுவரில் மணிமகுடத்துடன் கூடிய ஒரு கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ராஜ ராஜசோழ மன்னனின் சிலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த சிலையின் வயது 1000 ஆண்டுகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய மாபெரும் கோவில்தான் பிரகதீஸ்வரர் கோவில். இக்கோவில் கட்டி 1000 ஆண்டுகளாகிறது. இதையொட்டி தமிழக அரசு தஞ்சையில் செப்டம்பர் 22ம் தேதி முதல் 5 நாட்களுக்கு பிரமாண்ட விழா எடுத்து கொண்டாடவுள்ளது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்காக பெரிய கோவிலைச் சுற்றிலும் அமைந்துள்ள கோட்டைச் சுவர் பகுதியில் மண்டிக் கிடக்கும் புதர்களை அகற்றி வருகின்றனர். இதற்காக கோட்டையின் தெற்குப் பகுதியில் உள்ள கொத்தளச் சுவரில், தலை மட்டும் உடைய சிறிய கற்சிலை ஒன்று வெளியே தெரிந்தது.

அந்த சிலையின் தலையில் மணிமகுடம் சூட்டப்பட்டுள்ளது. கல்லால் ஆன சிலை இது. இது மாமன்னன் ராஜராஜ சோழனாக இருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறுகையில்,

14-ம் நூற்றாண்டில் வடபுலத்தில் இருந்து வந்தவர்கள் கொள்ளை, சூறையாடலில் ஈடுபட்டனர். இதில் பல சிற்பங்கள், சிலைகள் சிதைந்தன. பின்னர் கி.பி. 1550-ம் ஆண்டு தஞ்சையை ஆண்ட நாயக்கர் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலைச் சுற்றி சிறியகோட்டைச் சுவர் கட்டப்பட்டு, கொத்தளச் சுவரும் கட்டப்பட்டது.

இந்த பணியில் ஈடுபட்ட கட்டிடக் கலைஞர்கள், அப்போது சிதைந்து கிடந்த இந்த சிலையின் அழகைப் பார்த்து, அதை கொத்தளச்சுவரில் பதித்து கட்டியிருக்க வாய்ப்புள்ளது. இது நாள் வரை புதர் மண்டிக்கிடந்ததால் இந்த சிலை வெளியே தெரியாமல் இருந்தது. தற்போது இது வெளிப்பட்டுள்ளது.

இந்த சிலை, கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த சிலை ஒரு அரசனின் சிலை போல காணப்படுகிறது. ஒன்றரை அடி உயரமுடைய இந்த கற்சிலையின் முக அமைப்பும், மணிமகுடமும் குஜராத் மாநிலம் ஆமதாபாத் கவுதம் சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜசோழனின் ஐம்பொன் சிலையின் முகம், மணிமகுடம் ஆகியவையும் ஒரே மாதிரி உள்ளன.

எனவே, தற்போது பெரியகோவில் கொத்தளச்சுவரில் வெளியே தெரியும், இந்த கற்சிலை ராஜராஜசோழனின் சிலை எனக் கருத இடமுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X