For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2008ல் வெளியான 29 நூல்களுக்குப் பரிசு - கருணாநிதி உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: 2008ம் ஆண்டு வெளியான 29 நூல்களுக்குப் பரிசுத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நூலின் ஆசிரியருக்கும் தலா ரூ. 20,000 பரிசும், பதிப்பகங்களுக்கு தலா ரூ. 5000 பரிசும் சேர்த்து மொத்தம் ரூ. 7.25 லட்சம் பரிசுத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தமிழில் வெளியிடப்படும் நூல்களில் சிறந்த நூல்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கி படைப்பாளிகளுக்கு ஊக்கமளிக்கும் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் சிறந்த நூல்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை 10 ஆயிரம் ரூபாய் என்பதை 20 ஆயிரம் ரூபாய் என்றும்; பரிசு பெறும் நூல்களை வெளியிட்ட பதிப்பகங்களுக்குப் பரிசுத் தொகை 2 ஆயிரம் ரூபாய் என்பதை 5000 ரூபாய் என்றும் 17.1.2008 அன்று உயர்த்தி முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டபடி பரிசுத் தொகைகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் 31 வகைப்பாடுகளில் நூல்கள் நூலாசிரியரிடமிருந்தும் பதிப்பகத்தாரிடமிருந்தும் வரவேற்கப்பட்டன. அந்த வகையில் போட்டிக்கு வரப்பெற்ற நூல்களில் பொறியியல், தொழில்நுட்பம், வகைபாட்டில் நூல்கள் எதுவும் போட்டிக்கு வரவில்லை; வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் வகைப்பாட்டில் ஒரு நூல் மட்டுமே வரப் பெற்றதால் அது போட்டிக்குக் கருதப்படவில்லை.

எஞ்சிய 29 வகைபாடுகளில் போட்டிக்கு வரப்பெற்ற நூல்களுள்:

மரபுக் கவிதை வகையில், வாய்மை நாதன் எழுதி நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட கப்பலுக்கொரு காவியம்;

புதுக்கவிதை வகையில், அழகிய பெரியவன் என்கிற திரு. சி. அரவிந்தன் எழுதி ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட உனக்கும் எனக்குமான சொல்;

புதினம் வகையில், எஸ்ஸார்சி எழுதி அலமேலு பதிப்பகம் வெளியிட்ட நெருப்புக்கு ஏது உறக்கம்;

சிறுகதை வகையில், தமிழ்மகன் எழுதி நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “எட்டாயிரம் தலைமுறை";

நாடகம் (உரைநடை, கவிதை) வகையில், பேராசிரியர் அ. அய்யாசாமி எழுதி விழிகள் பதிப்பகம் வெளியிட்ட வைக்கம்;

சிறுவர் இலக்கியம் வகையில், புதுவை தமிழ்நெஞ்சன் எழுதி தமிழ் மொழிப் பதிப்பகம் வெளியிட்ட மரப்பாச்சி;

திறனாய்வு வகையில், மருத்துவர் ஜெய ராஜமூர்த்தி எழுதி தனஜோதி பதிப்பகம் வெளியிட்ட வள்ளலாரும் பெரியாரும்;

மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் வகையில், முனைவர் ச. குருசாமி எழுதி இராணி பதிப்பகம் வெளியிட்ட நச்சினார்க்கியர் உரைநெறி;

பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்" வகையில், பேராசிரியர் அ. அய்யாசாமி எழுதி விழிகள் பதிப்பகம் வெளியிட்ட தென்னகத்தின் எழுச்சி;

நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) வகையில், முனைவர் த. கனகசபை எழுதி பொன்னி வெளியிட்ட சங்கத் தமிழிசை;

அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் வகையில், முனைவர் ச.வே. சுப்பிரமணியன் எழுதி மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்ட “தமிழ் நிகண்டுகள் 2 தொகுதிகள்;

பயண இலக்கியம் வகையில், வேங்கடம் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்ட “அடேங்கப்பா ஐரோப்பா;

வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு வகையில், பேராசிரியை அன்புக்கொடி நல்லதம்பி எழுதி மலர் பதிப்பகம் வெளியிட்ட “சமூக விஞ்ஞானி கலைவாணர்;

நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும் அகழாய்வு வகையில், இரா. இராமகிருட்டிணன் எழுதி ராமையா பதிப்பகம் வெளியிட்ட “தகடூர் வரலாறும் பண்பாடும்;

கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியில் வகையில், வாண்டுமாமா எழுதி கங்கை புத்தக நிலையம் வெளியிட்ட “இயற்கை அற்புதங்கள் (இயற்பியல்);

மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் வகையில், முனைவர் ஆ. ஜெகதீசன் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.., வெளியிட்ட “இலக்கியத்தில் மனித உரிமைக் கோட்பாடுகள்;

சட்டவியல், அரசியல் வகையில், திரு. ரா.பாலகிருஷ்ணன் எழுதி கே.பி.கே. நினைவு அரசியல்சார் இதழியல் அரங்கம் வெளியிட்ட “மக்களவைக் கூட்டத்தைத் தமிழகத்தில் நடத்துக!;

பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் வகையில், எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட “தொழில் முனைவோர் கையேடு;

மருந்தியல், உடலியல், நலவியல் வகையில், தமிழ்நாகை எழுதி தமிழ் முனை பதிப்பகம் வெளியிட்ட “வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே;

தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)" வகையில், பேராசிரியர்க. சிவநேசன் எழுதி அருள் பதிப்பகம் வெளியிட்ட “சித்த மருத்துவத்தில் வேர், மரம், செடி, கொடி, இலைகளும் அதன் மருத்துவப் பயன்களும்;

சமயம், ஆன்மீகம், அளவையியல் வகையில், முனைவர் பா. சுந்தர் எழுதி கபிலன் பதிப்பகம் வெளியிட்ட “திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவ மூர்த்தங்கள்;

கல்வியியல், உளவியல் வகையில், கலாநிதி மா. கருணாநிதி எழுதி குமரன் புத்தக இல்லம் வெளியிட்ட “கல்விச் சமூகவியல்;

வேளாண்மையியல், கால்நடையியல் வகையில், இரா. தங்கவேலு மற்றும் எம்.எம். முஸ்தபா ஆகியோர் எழுதி இரா. புவனராஜி வெளியிட்ட “வாழை சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்கள்;

சுற்றுப்புறவியல் வகையில், முனைவர் ஆர்.வி. ஜெபா ராஜசேகர் எழுதி ஈடன் பதிப்பகம் வெளியிட்ட “காற்று மாசுபாடு மற்றும் மாசுக்கட்டுப்பாடு;

கணினியியல் வகையில்,ம. லெனின் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட “எளிய தமிழில் எக்ஸெல்;

நாட்டுப்புறவியல் வகையில், டாக்டர் இரா. கு. ஆல்துரை எழுதி நெலிகோலு வெளியீட்டகம் வெளியிட்ட “படகர் அறுவடைத் திருநாள்;

இதழியல், தகவல் தொடர்பு வகையில், திரு. இரா. பாவேந்தன் எழுதி சந்தியா பதிப்பகம் வெளியிட்ட “ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு;

பிற சிறப்பு வெளியீடுகள் வகையில், முனைவர் இரா. குமரவேலன் எழுதி பாரி நிலையம் வெளியிட்ட “திருக்குறள் வ.உ.சிதம்பரனார் உரை;

விளையாட்டு வகையில், முனைவர் பூ. மாரிஅய்யா எழுதி ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட “அறிந்து கொள்ளுங்கள்-கால்பந்து;

ஆகிய 29 நூல்கள் சிறந்த நூல்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும்; இந்நூல்களை எழுதிய ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும்;

இந்த நூல்கள் ஒவ்வொன்றையும் வெளியிட்ட பதிப்பகங்களுக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் இந்த சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 15.1.2010 அன்று நடைபெறவிருக்கும் அய்யன் திருவள்ளுவர் நாள் விழாவில் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கலைஞர் இன்று (2.1.2010) ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X