For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிறிஸ்துமஸ்.... நட்சத்திரக் கொண்டாட்டம்!

By Shankar
Google Oneindia Tamil News

Ajith, Shalini with Child
ஒவ்வொரு மதத்தவருக்கும் ஒரு விழா என்பதுபோல கிறிஸ்துமஸை கிறிஸ்தவர்களின் விழா என்று சொல்லிவிட முடியாது. காரணம்... கிறிஸ்தவர் அல்லாதவர்களும் கூட ஆசை ஆசையாகக் கொண்டாடும் ஒரு இனிய நிகழ்வாக இன்று மாறியுள்ளது கிறிஸ்துமஸ்.

ஒரு புத்தாண்டைப் போல பொது நிகழ்வாக மாறிவருகிறது சென்னை போன்ற பெருநகரங்களில்.

புனித தோமையார் மலையில் கிறிஸ்தவர்களுக்கு சற்றும் சளைக்காமல் பல இந்து குடும்பங்களும் முஸ்லிம் குடும்பங்களும் கிறிஸ்துமஸ் தினத்தில் வந்து போவதைப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவும் இதற்கு விலக்கல்ல... கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சில திரைக் கலைஞர்களே கூட அந்த நாளில் கொண்டாட மறந்தாலும், கிறிஸ்தவர் அல்லாத பல கலைஞர்கள் வீட்டில் கேக் வெட்டியும், கிறிஸ்துமஸ் பார்ட்டி கொடுத்தும் கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது.

கிறிஸ்துமஸ் நினைவுகள், கொண்டாட்டங்கள் குறித்து தமிழ் கலையுலக பிரபலங்கள் சிலரது பகிர்தல் இங்கே:

சாலமன் பாப்பையா:

என்னோட கிறிஸ்துமஸ் நினைவுகள் ரொம்ப இனிமையானவை. வறுமையிலும் இனிமையாகக் கழிந்த நாட்கள் அவை. கிறிஸ்துமஸ் வந்தாலே எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமா இருக்கும்.

கால ஓட்டத்தில் வயதான பிறகும் கூட, கிறிஸ்துமஸைக் கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எல்லோருக்கும் நல்லது நடக்கணும், எல்லோரும் சந்தோஷமா இருக்கணும். உலகம் பாவங்கள் நீங்கி பொலியணும் என்பதுதான் இந்த நாளின் தத்துவம். உலகத்துல இன்னிக்கு எத்தனையோ பிரச்சினை, அதாவது மனுசனா உருவாக்கிக்கிட்ட பிரச்சினைகள் இருந்தாலும், இந்த நல்ல நாளில் மட்டும் எல்லார் மனசிலயும் அமைதியும் குதூகலமும் இருக்குன்னா... அதை விட ஒரு சிறப்பான தருணம் இருக்க முடியுமா?

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

'இளையதளபதி' விஜய்:

அனைத்துப் பண்டிகைகளையும் சமமாக மதிப்பவர் விஜய். கிறிஸ்துமஸும் அப்படித்தான் அவருக்கு. ஆனால் அதற்காக கேக்வெட்டி, பார்ட்டி கொடுத்து என விமரிசையாக எதுவும் அவர் செய்வதில்லை. அமைதியான கொண்டாட்டத்தையே அவர் விரும்புகிறார்.

கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் பற்றி அவர் கூறுகையில், "கிறிஸ்துமஸ் தினத்தன்று அப்பா அம்மாவிடம் ஆசி பெறுவேன். அடுத்த சர்ச்சுக்குப் போய் பிரார்த்தனை. முன்பெல்லாம் சாந்தோம் சர்ச்சுக்குப் போவது எனக்குப் பிடித்தமான ஒன்று. இப்போது அருகில் உள்ள சர்ச்சுக்கும் போகிறேன்!"

ஷாலினி அஜீத்:

அஜீத் வீட்டில் எல்லா மதமும் சம்மதம்தான். அவரது வீட்டு முகப்பிலேயே மும்மதங்களின் சின்னங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றி அஜீத் மனைவி ஷாலினி கூறுகையில், "கிறிஸ்துமஸ் அன்று அவர் (அஜீத்) எங்கிருந்தாலும் கண்டிப்பாக வீட்டுக்கு வந்து எங்களுடன் இணைந்து கொண்டாடுவார். அப்படி வரமுடியாவிட்டால், அவர் இருக்கும் இடத்துக்கு எங்களை குடும்பத்துடன் வரவழைத்துவிடுவார். சர்ச்சுக்குப் போய் பிரார்த்தனை செய்வோம். அதேபோல அன்றைய தினம் கோயிலுக்கும் செல்வோம். குடும்பத்தினர் அனைவரும் கூடி அந்த நாளை கொண்டாடி மகிழ்வோம். எங்களுக்கு அந்த நாள் எப்போதுமே இனிமையாகவும் நல்ல விஷயங்களுக்கு ஒரு ஆரம்ப தினமாகவும் அமையும்," என்றார்.

இசையமைப்பாளர் / நடிகர் நடிகர்விஜய் ஆன்டனி:

"எனக்கு கிறிஸ்துமஸ் என்றாலே சந்தோஷத்தை விட ஒரு இறுக்கமான உணர்வுதான் மனதில் நிற்கும். காரணம், கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் என் தந்தை இறந்துவிட்டார். அதனால் நான் ஒருபோதும் கிறிஸ்துமஸ் தினத்தை கோலாகலமாகக் கொண்டாடியதில்லை. அன்றைய தினமும் வேலையில் பிஸியாக இருப்பேன்.

கிறிஸ்துமஸ் அன்று கோயிலுக்குப் போவேன். பின்னர் வழக்கம்போல வேலைதான்!"

நடிகர் லிவிங்ஸ்டன்:

"கிறிஸ்துமஸ் எனக்கு மிக உற்சாகமான தினம். அன்று என் வீடே திருவிழா மாதிரி இருக்கும். என் வீட்டு கிறிஸ்துமஸ் குடில் ரொம்ப பிரபலம். நிறைய பேர் வந்து பார்த்துவிட்டுப் போவார்கள்.

தெய்வ மகன் அவதரித்த இந்த நன்னாளில் எல்லோருக்கும் நல்லதே நடக்கும் என்று வேதம் சொல்கிறது. என்னைப் பொருத்தவரை இதை முழுமையாக நம்புகிறேன். அனைவருக்கும் நல்லது நடக்க வாழ்த்துகிறேன்!"

இறைமகன் இயேசு அவதரித்த இந்த புனித நாளில் அனைவருக்கும் நல்லதே நடக்க நாமும் வாழ்த்துவோம்.

English summary
VIP Celebrities enjoying celebration on Christmas
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X