For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அமாவாசை தினம் இந்துக்களுக்கு புனிதமான தினமாகும். அதுவும் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை பித்ரு கடன் செய்ய ஏற்ற நாளாளும் அன்றைய தினம் நீர் நிலைகளில் புனித நீராடி மூத்தோர் கடன் செய்வது மரபு.

வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் “பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை “மாதுர் காரகன்" என்கிறோம்.

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் தோஷங்களில் இருந்து தப்ப முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ரமேஸ்வரம் அக்னி தீர்த்தம்

நேற்று ஆடி அமாவாசை. ஆடி அமாவாசை தினத்தன்று எள்ளும் அரிசியும் கலந்து மூத்தோர்களை வணங்கும் இந்துக்கள் அவற்றை கடலில் இட்டு நீராடி விட்டு பின்னர் முன்னோர்கள் ஆத்மா சாந்திக்காக 24 தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வழிபடுகின்றனர். முக்கடலும் சங்கமிக்கும் குமரியிலும், நாகப்பட்டணம் மாவட்டம் கோடியக்கரையிலும் ஏராளமானோர் புனித நீராடுவது மரபு.

ஆயுள் பலம் கூடும்

ஆடி அமாவாசை விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். இதற்கு சுவையான கதை ஒன்றும் கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் அழகாபுரி என்ற பட்டணத்தை கத்தலைராஜா என்ற அரசன் ஆண்டுவந்தான். பல புண்ணிய தலங்களுக்கு சென்று விரதம் மேற்கொண்டு புண்ணிய நதிகளில் நீராடியதன் பலனாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு அழகேசன் என பெயரிட்டு சீராட்டி வளர்த்தான் கத்தலைராஜா. அந்த மகனுக்கு 16 வயதில் ஆயுள் முடியும் என்று ஒருநாள் காளி மாதாவிடமிருந்து வாக்கு வெளிப்பட்டது. அதைக்கேட்ட மன்னன் தன் மகனுக்காக தன்னுயிரை இழக்கத் துணிந்தான்.

அப்போது மீண்டும் காளிமாதா தோன்றி “உன் மகன் இறந்ததும் சடலத்திற்கு உலகிலேயே நல்ல குணங்கள் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து வை. அவளது மாங்கல்ய பலத்தால் உன் மகன் மீண்டும் உயிர் பெற்று எழுவான், என்றாள்".

சிவன் பார்வதி

காலமும் விரைந்து ஓடியது. காளியின் வாக்குப் படியே 16 வயதில் அழகேசன் மரணமடைந்தான். இதனையடுத்து சடலத்திற்கு பெண்கொடுப்பவர்களுக்கு அவ-ருடைய குடும்பத்திற்கு தேவையான அளவு செல்வம் தரப்படும் என்று மன்னன் அறிவிக்கச் செய்தான். அப்போது கிராமத்தில் வசித்து வந்த தேவசர்மா என்பவரின் பெண் குழந்தை கங்காவை அவளுடைய அண்ணிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு இளவரசனின் சடலத்திற்கு திருமணம் செய்து தர முன்வந்தனர்.

மறுநாள் கங்கா அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டாள். தலைகுனிந்த வண்ணம் உள்ளே சென்ற கங்காவை மணவறையில் அமரவைத்தனர். அவளது அருகில் சடலம் வைக்கப்பட்டது. அக்கால மன்னர் முறைப்படி கண்ணைக்கட்டிதான் திருமணம் செய்ய வேண்டும் என்று அவளிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கண்ணைக்கட்டிவிட்டனர். திருமணம் நடந்தது. ஒரு பல்லக்கில் கங்காவையும் சடலத்தையும் ஏற்றி காட்டில் கொண்டு விடக்கூறினர். பல்லக்கு இறக்கப்பட்டதும் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது. தனது கணவன் அசதியின் காரணமாக உறங்குகிறான் என கங்கா நினைத்துக்கொண்டாள். நீண்ட நேரமாகியும் கணவன் எழவில்லை. எனவே அவனை மெதுவாக தொட்டு எழுப்பினாள். அவனை லேசாக அசைத்துப்பார்த்தாள். எவ்வித உணர்வும் இல்லாததால் அவளுக்கு நிலைமை புரிந்துவிட்டது.

உயிர் மீண்ட அழகேசன்

தனக்கு செய்யப்பட்ட மோசடியை அறிந்து கண்ணீர்விட்டாள். அப்போது வான் வழியே சிவனும் பார்வதியும், சென்று கொண்டிருந்தனர். அவர்கள் காதில் கங்காவின் கதறல் கேட்டது. இருவரும் அவளிடம் வந்தனர். பார்வதிதேவியின் காலில் விழுந்து புலம்பினாள் கங்கா. அத்துடன் சிவபெருமானின் கால்களை கட்டிக்கொண்டு தன் கணவனுக்கு உயிர் தராவிட்டால் அவ்விடத்தைவிட்டு அகலவிடமாட்டேன் என சூளுரைத்தாள். சிவன் அவளிடம், மகளே! கவலைப்படாதே! அழுகையை நிறுத்து. உன் முன்வினைப்பயனால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தையும் உன் வீட்டிலேயே தொலைத்து விட்டாய். இன்று ஆடி அமாவாசை. இந்நாளில் இறைவனை நினைத்து வழிபடுவோருக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும். பெண்கள் சுமங்கலிகளாய் இருக்க அருள்செய்யும் விரதநாள் இது. உன் கணவன் உடனே எழுவான், என்றார். அழகேசனும் எழுந்தான்.

உடனே பார்வதிதேவி, கங்காவிடம், இந்த வரலாற்றை படிக்கும் அனைத்து பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் சித்திக்கும். ஆடி அமாவாசைக்கு முதல்நாள் இக்கதையை ஒருவர் சொல்ல மற்றவர் கேட்க வேண்டும், என அருள்பாலித்து விட்டு மறைந்தாள்.

English summary
Aadi Amavasya is the no moon day in the Tamil month of Aadi and is considered highly auspicious for performing rituals to the dead like Shradh and Tarpan. Aadi Amaavasai 2011 date is July 30. The day is also auspicious to Lord Muruga. Important rituals on the day include performing rites for dead ancestors in sacred Teerths and riverbanks and also taking a holy dip in sacred rivers and spots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X