For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனது இறுதி நூல் வெளியீட்டு விழா!

Google Oneindia Tamil News

- ராஜ்சுகா

எழுத்தாளரும், வெளியீட்டாளரும், பன்னூலாசிரியருமான கலாபூசணம் புன்னியாமீன் அவர்களுடைய 'ஓர் ஈரநெஞ்சனின் உளவியல் உலா' எனும் நூல் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. ஏனைய தமிழ் நூல் வெளியீட்டு விழாக்களைப் போல்லாமல் வித்தியாசமான முறையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் மா.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சர்வதேச குர்ஆன் ஓதல் போட்டியில் முதலிடம் பெற்ற மொஹமட் ரிஸ்வானின் கிராத்துடன் விழா ஆரம்பமாகியது.

இலங்கையில் உளவியல்துறை மூத்த பேராசிரியர் ரோலன்ட் அபேபால, இலங்கையில் சிரேஸ்ட மனோ வைத்திய நிபுணர் நிரோஸ மென்டிஸ் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். விழாவில் நூலாய்வு இடம்பெறவில்லை.

இருப்பினும் அல்ஹாஜ் என்.ஏ. ரஷீட் சிறப்புரையையும், நூலாசியர் புன்னியாமீன் வெளியீட்டுரையையும், உலாநாயகன் யூ.எல்.எம் நௌபர் அவர்கள் ஏற்புரையையும் நிகழ்த்தியதுடன் திருமதி மஸீதா புன்னியாமீன் கவி வாழ்த்திசைத்தார்.

இந்த வித்தியாசமான விழா தொடர்பாக தேசிய, சர்வதேச ஊடகங்கள் இலங்கையில் அண்மைக்காலத்தில் நடைபெற்ற சாதனைக்குரிய விழா என்ற அடிப்படையில் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இது விஷயமாக கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்தேன்.

ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா

ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா

கேள்வி: கடந்த பிப்ரவரி 25ம் தேதி கொழும்பு ஜே.ஆர். ஜயவர்தனா கலாசார மண்டபத்தில் தங்களது சிந்தனை வட்டத்தின் 350 வது நூலான ஓர் ‘ஈர நெஞ்சனின் உளவியல் உலா' நூல் வெளியீட்டு விழாவின் போது, ஏனைய தமிழ் நூல் வெளியீட்டு விழாக்களில் காண முடியாத சனத்திரளைக் கண்டு வியப்படைந்தோம். இது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள் ஐயா.

பதில்: புகழனைத்தும் படைத்தவனுக்கே! என்னுடைய 185வது நூலான ‘ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா' வெளியீட்டு விழா உண்மையிலேயே எனக்கும் பூரண மன நிறைவைத் தந்தது. சிந்தனை வட்டத்தின் 350 வது நூலான இந்நூல் உளவளத் துணையாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர் அவர்களைப் பற்றியும், அவரது உளவளவியல் அணுகுமுறைகள் பற்றியும் உளவளவியல் கோட்பாடுகள் பற்றியும் எழுப்பட்டதாகும்.

யூ.எல்.எம். நௌபர் அவர்கள் கடந்த நான்கு தசாப்த காலத்தில் 2500க்கும் மேற்பட்டோருக்கு உளவியல் உளவளவில்துணை சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் அவரது வாழ்க்கையில் இதுவரை, தான் சிகிச்சை வழங்கிய ஒருவரிடமும் ஒரு சதமேனும் பணமாகவோ அன்பளிப்பாகவோ பெற்றதில்லை. இதனால் அவரிடம் சிகிச்சை பெற்று குணம் கண்டவர்கள் அவர் மீது அதீத பற்று வைத்துள்ளனர். அவரிடம் சிகிச்சை பெற்று குணம் கண்ட பலர் விழாவிற்கு வந்திருந்தனர். மேலும் எனது இலக்கிய நண்பர்களும் ஊடகத் துறை நண்பர்களும் வந்திருந்தனர். இந்த அடிப்படையில் ஐநூற்று ஐம்பது பார்வையாளர்களுக்கு மேல் வந்திருந்தமை மனமகிழ்வுக்குரிய ஓரு விடயமாக இருந்தது.

நிறைந்து வழிந்த கூட்டம்

நிறைந்து வழிந்த கூட்டம்

கேள்வி: ஐநூற்றி ஐம்பது பேருக்கு மேல் வந்திருந்தனர் என்று நீங்கள் எந்த அடிப்படையில் உறுதியாகக் கூறுவீர்கள்?

பதில்: நல்லதொரு கேள்வி சுகா, இதனை நான் ஆதாரபூர்வமாகவே கூறுகின்றேன். ஏனெனில் கொழும்பு ஜே.ஆர். ஜயவர்தனா கலாசார நிலைய பிரதான மண்டபத்தில் சுமார் 400 பேர் அமரக் கூடிய ஆசனங்களே உள்ளன. இதற்கு மேலதிகமாக நாங்கள் 150 ஆசனங்களை வெளியிலிருந்து வாடகைக்கும் பெற்றிருந்தோம். அவற்றை பிரதான மண்டபத்துடன் இணைந்த மண்டபத்திலிட்டு ஸ்க்ரீன் காட்சி மூலமாக திரையில் நிகழ்வுகளை ஒளிபரப்ப ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். எனவே ஐநூற்றி ஐம்பது கதிரைகள் மண்டபத்தில் இருந்த போதிலும் கூட ஆசனங்களின்றி பலர் நின்று கொண்டிருந்ததை நீங்களும் கண்டிருக்கலாம்.

அத்துடன் வெளியீட்டு விழாவுக்கு வந்த அனைவருக்கும் சுவடு எனும் நூலொன்றை இலவசமாக விநியோகித்தோம். சுவடு ஐநூறு பிரதிகளே அச்சிடப்பட்டன. அவையனைத்தும் வருகை தந்தவர்களுக்கு வழங்கி பிரதிகள் முடிந்ததினால் பலருக்கு எம்மால் வழங்க முடியவில்லை. இதனை வைத்துப் பார்க்கும் போது நிச்சயமாக ஐநூற்றி ஐம்பது பேருக்கு மேல் வந்தனர் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

இதுதான் என் கடைசி விழா

இதுதான் என் கடைசி விழா

கேள்வி: மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா, இன்னுமொரு விழா நடத்தும் போது இதைவிட அதிக மக்கள் வெள்ளம் வர பிரார்த்திக்கின்றேன் என என் கேள்வியைத் தொடர முன்பே புன்னியாமீன் அவர்கள் குறுக்கிட்டார்கள்.

''உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி சுகா.. ஆனால் ஒரு முக்கிய தகவலையும் இவ்விடத்தில் கூறவிரும்புகின்றேன். என் வாழ்வில் இனியொரு நூல் வெளியீட்டு விழாவினை நடத்தும் எண்ணம் எனக்கில்லை. கொழும்பு ஜே.ஆர். ஜயவர்தனா கலாசார நிலையத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழா எனது தனிப்பட்ட நூல் வெளியீடுகளின் இறுதியான வெளியீட்டு விழாவாக இருக்கலாம்''.

கலாபூசணம் புன்னியாமீனின் இந்தப் பதில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. ''இது இறுதியான வெளியீட்டு விழாவென்று ஏன் ஐயா அத்தகைய முடிவிற்கு வந்தீர்கள்?''

பதில்: வெளியீட்டு விழாவை நான் நடத்த நடத்த மாட்டேன் என்பது என் இறுதியானதும், உறுதியானதுமான முடிவாகும். காரணம் ‘ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா' வெளியீட்டு விழாவிற்கு எந்த ஓர் அரசியல்வாதியையும் அழைக்காது கல்விமான்களை மாத்திரமே அதிதிகளாக அழைத்திருந்தேன்.

இருப்பினும் இவ் விழாவிற்கு வருகை தந்த பார்வையாளர்கள் எண்ணிக்கையையும், விற்பனையான பிரதிகளின் எண்ணிக்கையையும் அதனால் நான் பெற்ற அன்பளிப்புகளையும் என்னால் இனி எட்ட முடியாதிருக்கும். எனவே தான் இனி வெளியீட்டு விழாக்கள் நடத்துவதில்லை என்று முடிவெடுத்தேன். ஆனால் இடைக்கிடையே சில கௌரவிப்பு விழாக்களை சிந்தனை வட்டம் நடத்தும்.

மறக்க முடியாத நிகழ்ச்சி

மறக்க முடியாத நிகழ்ச்சி

கேள்வி: இந்த விழாவின் போது பார்வையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு பிரதிகள் வாங்கியதை அவதானிக்க முடிந்தது. இது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: விழாவின் போது பார்வையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு புத்தகங்கள் வாங்கிய நிகழ்வானது நாங்கள் திட்டமிடாத நிகழ்வாக இருந்த போதிலும் கூட உலா நாயகன் நௌபர் அவர்களின் மீது வருகை தந்தவர்களில் அனேகர் வைத்திருந்த அபிப்பிராயம் காரணமாக அவர் கைகளாலே புத்தகங்களைப் பெற அவர்கள் விரும்பினர். முதற்பிரதி, சிறப்புப் பிரதியென பெயர் குறிப்பிடாது விடினும் கூட உலா நாயகன் நௌபர் அவர்களின் மீது கொண்ட மதிப்பின் காரணமாக நல்உள்ளங்கள் ஓரு லட்சம் ரூபாய், எழுபத்தையாயிரம் ரூபாய், ஐம்பதாயிரம் ரூபாய்..... என பெருந்தொகை பணத்தைத் தந்து நூலினை கொள்வனவு செய்தமை மறக்கமுடியாத நிகழ்வாகவே இருக்கின்றது.

உண்மையிலேயே இலங்கையில் நடைபெற்ற இலக்கிய விழாக்களில் இது ஒரு வித்தியாசமான நிகழ்வாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அச்சிடப்பட்ட பிரதிகளில் அரைவாசிக்கு மேல் விழாவன்றே விற்பனையானமையும், இரண்டாம் பதிப்புக்கு தற்போது ஏற்பாடுகளைச் செய்து வருகின்றமையும் மன நிறைவைத் தருகின்றது.

சிந்தனை வட்டத்தின் கெளரவிப்பு விழாக்கள்

சிந்தனை வட்டத்தின் கெளரவிப்பு விழாக்கள்

கேள்வி: இது வரை தங்களது சிந்தனை வட்டம் நான்கு கௌரவிப்பு விழாக்களை நடத்தி இலங்கையில் பல சிரேஸ்ட பிரஜைகளை கௌரவித்துள்ளதை அறிகின்றோம் ஐயா. இது பற்றி சற்று குறிப்பிட முடியுமா?

பதில்: நிச்சயமாக சிந்தனை வட்டத்தின் நூறாவது வெளியீடான இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை நூலினை நவம்பர் 11, 2000 திகதியன்று கண்டி சிட்டி மிஸன் மண்டபத்தில் சுமார் இருநூறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் முன்னிலையில் வெளியிட்டேன். அவ்விழாவின் போதும் நான் அரசியல்வாதிகளை அழைக்கவில்லை. அப்போதைய பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாகீர்த்தி பேராசிரியர் எஸ். தில்லைநாதன், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் க.அருணாசலம், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி துரை மனோகரன் பிரபல சட்டத்தரணி ஏ.எம். ஜிப்ரி ஆகிய தமிழறிஞர்கள் இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இவ்விழாவின் போது பிரபல எழுத்தாளரும் மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியருமான டொமினிக் ஜீவா, பிரபல மூத்த பெண் வானொலி அறிவிப்பாளரான (காலம் சென்ற) இராஜேஸ்வரி சண்முகம், தமிழ் இலக்கியக் காவலரும் பிரபல வெளியீட்டாளருமான சிறீதரசிங், பன்னூலாசிரியரும் கலாசார அமைச்சின் முன்னையநாள் ஆலோசகருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் ஆகியோருக்கு விருது வழங்கி பொன்னாடை போர்த்தி பரிசில்கள் வழங்கி கௌரவித்தோம். அத்துடன் 2002ம் ஆண்டு மார்ச் மாதம் உடதலவின்னையில் வைத்து மூத்த வானொலி அறிவிப்பாளர் ஜனாப் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களையும் சிந்தனை வட்டம் கௌரவித்து பெருமையுற்றது.

சமூக சேவை செம்மல் பட்டம்

சமூக சேவை செம்மல் பட்டம்

சிந்தனை வட்டத்தின் இருநூறாவது வெளியீட்டு விழா செப்டம்பர் 11, 2005ம் திகதி உடத்தலவின்னை மடிகே ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அஷ்ரப் கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடத்தினோம். முழுநாள் நிகழ்வாக அவ்வழாவில் 135க்கு மேற்பட்ட முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். இப்பெரு விழாவில் ஐ.நா.வைச் சேர்ந்த மூத்த நூலகவியலாளர் என். செல்வராஜா சிரேஷ்ட பத்திரிகையாளர் (மர்ஹ{ம்) எம.பீ.எம்.அஸ்ஹர், மூத்த சிறுகதை எழுத்தாளர் திருமதி நயீமா சித்தீக், மூத்த கவிஞர் அல்ஹாஜ் கல்ஹின்னை ஹலீம்தீன், இலக்கியக் காவலர் ஜனாப் எம்.எம்.எம்.ரஸீன் ஆகியோரை முறையே இலக்கிய வித்தகர் இதழியல் வித்தகர், சிறுகதைச் செம்மணி, இரு மொழி வித்தகர், சமூக சேவைச் செம்மல் ஆகிய பட்டங்களை வழங்கி கௌரவித்தோம்.

தமிழ் சிங்கள இலக்கியப் பாலம்

சிந்தனை வட்டத்தின் 300 வது நூல் வெளியீட்டு விழா டிசம்பர் 28, 2008 இல் வத்தேகெதர அஸ்ஸபா மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் பிரபல பன்னூலாசிரியருமான டாக்டர் தி.ஞானசேகரன், மூத்த எழுத்தாளர் இரா. நாகலிங்கம் (அன்புமணி), தமிழ் சிங்கள இலக்கியப் பாலம் அமைக்கும் பிரபல எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான மடுலுகிரியே விஜேரத்ன மூத்த கவிஞர் ஜனாப் த. மீரா லெவ்பை (அனலக்தர்), ஆசிரியப் பெருந்தகை அல்ஹாஜ் ஐ.ஹாஜிதீன் ஆகியோரை முறையே இதழியல் வித்தகர், எழுத்தியல் வித்தகர், பன்மொழி வித்தகர், கவிப்புனல், ஆசிரியச் செம்மல் ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவித்தோம். இவ்விழாவில் ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் ராஜபாரதி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர் தலைமை வகித்தார். மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வரிசையில் கடந்த பிப்ரவரி 25, 2013 இல் சிந்தனை வட்டத்தின் 350 வது நூல் வெளியீட்டு விழாவின் போது பிரபல எழுத்தாளரும் திறனாய்வாளருமான கே.எஸ்.சிவகுமாரன், பொதுச் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பரோபகாரிகளான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.அரூஸ், அல்ஹாஜ் எஸ்.எம்.அனீப் மௌலானா, சிரேஷ்ட ஊடகவியலாளரும் நவமணி தேசியப் பத்திரிகையின் ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன், உளவளத் துணையின் தன்னலமற்ற சேவை வழங்கி வரும் ஜனாப்.எம்.எஸ்.எம். அஸ்மியாஸ், யமுனா பெரேரா ஆகியோரை முறையே இருமொழி வித்தகர், சேவைச் செம்மல், இதழியல் வித்தகர், சீர்மைச் செம்மல் ஆகிய பட்டங்களை வழங்கி கௌரவித்தோம்.

வேதனை தருகிறது

வேதனை தருகிறது

இதுவரை எனது சிந்தனை வட்டத்தால் நடத்தப்பட்ட கௌரவிப்பு விழாக்களின் போது பொன்னாடை போர்த்தல், விருது வழங்கல், பதக்கம் அணிவித்தல், சான்றிதழ் வழங்கல், பரிசுப் பொதிகளை வழங்கல் போன்றவை வருகை தந்த பிரமுகர்களால் நிகழ்த்தப்படும். ஆனாலும் முதல் மூன்று கௌரவிப்பு விழாக்களிலும் கௌரவிக்கப்பட்ட பிரமுகர்கள் ஒருவரேனும் இவ்விழாவிற்கு வருகைதராமை சற்று வேதனையையே தந்தது.

கேள்வி: தங்கள் வெளியீட்டு, கௌரவிப்பு விழாக்களின் போது அரசியல்வாதிகளை அழைக்காமைக்கு யாதேனும் காரணங்களுண்டா?

பதில்: அரசியல்வாதிகள் கலந்துகொள்ளுமிடத்து சில நேரங்களில் எமது விழா நோக்கம் பிழைக்கலாம். சில சந்தர்ப்பங்களில் நாங்கள் அழைக்கும் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமையவே எம்மால் செயல்பட வேண்டி இருக்கும். இதனை நான் விரும்புவதில்லை. எனவே தான் கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் அழைத்து அவர்களை முன்னிலைப்படுத்தி இவ்விழாக்களை நடத்துவதை கொள்கையளவில் நான் கடைபிடித்து வருகின்றேன்.

ஊடகங்களுக்கு நன்றி

ஊடகங்களுக்கு நன்றி

கேள்வி: இவ்விழாவின் போது பெருந்தொகையான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது. அவர்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது?

பதில்: மிகவும் திருப்திகரமாக இருந்தது. விழா நடந்த தினத்திலிருந்து வானொலி, தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள், பத்திரிகைகள் மற்றும் அச்சு ஊடகங்களில் செய்திகளை கொண்டு சென்றனர். இலங்கையில் மாத்திரமன்றி புலம் பெயர்ந்து தமிழ் பேசும் மக்கள் வாழும் கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இணையங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்தன. இதையிட்டு அவர்களுக்கு என் நன்றிகளைக் கூறிக்கொள்ள நான் கடமைப்பட்டுள்ளேன்.

வித்தியாசமான நூல்

வித்தியாசமான நூல்

கேள்வி: சிந்தனை வட்டம் இதுவரை 350 நூல்களை வெளியிட்ட போதும் கூட 350 வது நூல் உளவியல் சார்ந்த ஒரு வித்தியாசமான நூலாக இருந்தது. இத்தகைய நூலை நீங்கள் எழுதி வெளியிடக் காரணமென்ன?

பதில்: நல்ல கேள்வி! இதற்கு சற்று விரிவான முறையிலே நான் பதில் தர வேண்டும். சிந்தனை வட்டத்தின் மூலமாக இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு என பதினைந்து தொகுதிகளை எழுதி வெளியிட்டேன். இவற்றில் 350 பேரைப்பற்றி விரிவாக எழுதி விபரங்களுடன் நான் பதிவு செய்தேன். அத்துடன் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் இணையத்தளங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் அவற்றை ஆவணமாக பதிவாக்கினேன். இருப்பினும் இவற்றின் மூலமாக பல லட்ச ரூபாய்களை நான் இழந்தேன். குறிப்பாக எனது நூல்களில் இடம் பெற்ற சில எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஒரு நூலையேனும் பெறாமல் இருந்தமை வேதனையைத் தந்தது.

தொடர்ந்து என்னால் வெளியிடப்பட்ட நூல்கள் மூலம் நான் பெருந்தொகையான பணத்தினை இழக்க வேண்டி ஏற்பட்டது. இலங்கையில் வெளியீட்டாளர்களும், விநியோகஸ்தர்களும் ஒருவராகவே இருப்பதனால் நூல்களை வெளியிடுபவர்கள் இத்தகைய நிலையை அனுபவித்திருப்பர். இந்நிலையில் மனதளவிலும் பொருளாதார ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சகோதரர் யூ.எல்.எம். நௌபர் அவர்கள் எனக்குத் தந்த உளவளவியல்துணை பரிகாரங்களே மீண்டும் என்னை எழுதத் தூண்டியது.

யூ.எல்.எம். நௌபர் அவர்களின் அணுகுமுறைகளும் அவரின் சுய இயல்புகளும், பண்புகளும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. அவரை ஒரு ஈர நெஞ்சனாகவே நான் கண்டேன். அதன் விளைவாகவே அவரைப் பற்றி விரிவாக ஆராய ஆரம்பித்தேன். இவ் ஆய்வின் விளைவாகவே ஓர் ஈரநெஞ்சனின் உளவியல் உலா உருவானது.

உலகையே பரபரப்பாக்கி விட்ட உளவியல்

உலகையே பரபரப்பாக்கி விட்ட உளவியல்

கேள்வி: ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா எனும் நூலில் உளவளவியலாளர் யூ.எல்.எம். நௌபர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விட உளவியல் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருந்தீர்கள். இது தொடர்பாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் : ஒரு உளவியல் நூல் என்ற வகையில் மன அழுத்தம், மனத்தளர்ச்சி, மனச் சோர்வு, மனமும் மன நோய்களும், மனம், மூட நம்பிக்கைகளும் அவற்றால் ஏற்படும் விளைவுகளும், குழந்தைகளும் மனச் சோர்வும், மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புக்கள், நவீன தொழிநுட்பமும் மன நெருக்கடிகளும் போன்ற தலைப்புகளை விரிவாக ஆராய்ந்தேன். அதே நேரம் இத்தலைப்புகளுடன் இணைந்த பிரச்சினைகளுக்கு உளவளவியலாளர் யூ.எல்.எம். நௌபர் அவர்களின் சிகிச்சை முறைகள் பற்றியும் தொடர்புபடுத்தியிருந்தேன். உண்மையிலேயே மன உளைச்சல்கள் மிக்க இந்த 21ம் நூற்றாண்டில் உளவியல் என்பது மிக முக்கியமானதொரு பரப்பாக மாறிவிட்டது என்பதையும் மறுப்பதற்கியலாது.

3 மாதங்களில் எழுதினேன்

3 மாதங்களில் எழுதினேன்

கேள்வி : ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா என்ற நூல் 572 பக்கங்களைக் கொண்ட ஓர் ஆய்வு நூலாக அமைந்திருந்தது. இந்நூலை எழுதி முடிக்க எவ்வளவு காலம் உங்களுக்கு எடுத்தது?

பதில் : இந்நூலை சரியாக மூன்று மாதங்களில் எழுதி முடித்தேன். என்னால் எழுதப்பட்ட சகல விடயங்களும் நூறு வீதம் ஆதாரபூர்வமானவையே. சுமார் 25 உளவியல் நூல்களுக்கு மேல் படித்தும், சுமார் 500 இணையத்தளங்களுக்கு மேல் பார்வையிட்டும் யூ.எல்.எம். நௌபர் அவர்களினால் சிகிச்சை பெற்ற 126 பேரைச் சந்தித்தும் ஆதாரபூர்வமான தகவல்களைப் பெற்று இந்நூலை எழுதினேன். இரவு பகலாக எழுதினாலும் கூட மூன்று மாதங்களுக்குள் முடித்தமை எனக்கே ஆச்சரியமாக உள்ளது.

எதிர்காலத் திட்டம்

எதிர்காலத் திட்டம்

கேள்வி: இறுதியாக, எழுத்துலகில் உங்கள் எதிர்காலத் திட்டத்தைப் பற்றிக் கூற முடியுமா?

பதில்: நிச்சயமாக, இந்நூலை எழுத எத்தனித்த போது உளவியல் பற்றி பல விடயங்களை நான் படித்துக் கொண்டேன். இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் உளவியல் கற்கை அவசியம் என்ற வகையில் எதிரகாலத்தில் (இறைவன் நாடினால்) உளவியல் தொடர்பான பல நூல்களை எழுதும் எண்ணம் எனக்குண்டு.

English summary
Eelam Tamil writer Punniyamin has give an interview on his latest book release, the function was held in Colombo recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X