• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணம் பண்ணிப் பார்.. அதே மாதிரி.. கல்யாண பங்ஷன் அட்டென்ட் பண்ணிப் பார்!

|

சென்னை: வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். இந்த பழமொழியோடு தொடர்புடைய ஒரு புதுமொழி தெரியுமா ? அது வேறு ஒண்ணும் இல்லீங்க. 'கல்யாண பங்ஷன் அட்டென்ட் பண்ணிப் பார்' என்பதே. கல்யாண களேபரங்கள் அந்தளவிற்கு மக்களை நோகடித்து வருகின்றன.

சுற்றமும், நட்பும் கூடிக் கலந்து உறவுகளைப் புதுப்பிக்கும் நிகழ்வுகளாகத்தான் திருமணம் போன்ற விழாக்கள் இவ்வளவு காலமும் நடைபெற்று வந்தன.

going to attend a marrige is a tediuos thing nowadays

''என் மாமா வீட்டு கல்யாணத்தில் சின்ன வயசில் என்னோடு மூணாம் வகுப்பு படிச்ச பிரண்டை எதிர்பாராமல் பார்த்தேன். மணிக்கணக்கில் பழசையெல்லாம் பேசிக்கொண்டோம்''

'' கல்யாணம் போன்ற பங்ஷன்களை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். கல்யாணத்தில்தானே அத்தனை சொந்தக்காரங்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும், ஆசை தீர பேச முடியும். ஒவ்வொருத்தரையும் நாம தேடிப்போய் பார்க்க முடியுமா என்ன!''

இதுபோன்ற டயலாக்குகளை நம்மில் பலரும் கேட்டிருக்கக் கூடும். அந்தளவிற்கு சொந்த பந்தங்கள் கூடி குதூகலிக்கும் உறவுச் சங்கமமாக திருமணங்கள் இருந்தன. அளவான விருந்தினர்கள், அசத்தலான ஏற்பாடுகள், ஓடி ஓடி உபசரிக்கும் உறவுகள் என கல்யாணங்களில் சந்தோஷம் பொங்கி வழிந்த நாட்கள் உண்டு. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

திருமணங்களை, தங்களது செல்வாக்கை பறைசாற்றும் ஆடம்பரத் திருவிழாக்களாகவே பலரும் இப்போது நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பரின் அலுவலகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். தாம்பாளத் தட்டில் பழங்கள் இத்யாதிகளுடன் திருமண அழைப்பிதழையும் வைத்து, நண்பரிடம் அவரின் நண்பர் ஒருவர் கொடுத்தார். நம்ம நண்பரும் அதைப் பெற்றுக்கொண்டார். வந்தவர் யார் என்பது எனக்கு சுத்தமாகத் தெரியாது. ஆனால் திடீரென எனது பக்கம் திரும்பியவர், 'நீங்களும் அவசியம்(!) வாங்க'' என்றபடி ஒரு அழைப்பிதழை எனது கையில் திணித்தார். வேறு வழியின்றி வாங்கிக் கொண்டேன்.

going to attend a marrige is a tediuos thing nowadays

இது ஒரு உதாரணம்தான்.

பிள்ளையார் கோயிலில் சுண்டல் விநியோகிப்பது போல ஏறத்தாழ இந்த மாதிரிதான் இப்போது திருமண அழைப்பிதழ் விநியோகம் நடைபெறுகிறது.

அரசியல் கட்சிகள், கூட்டங்களுக்கு ஆட்களைத் திரட்டி கெத்து காட்டுகிறதல்லவா... கிட்டத்தட்ட அதே மனநிலையில் பலர் மாஸ் கட்ட நினைக்கிறார்கள். '' உங்க அண்ணன் வீட்டு கல்யாணத்தை விட குறைஞ்சது 50 பேராவது அதிகமா நம்ம வீட்டு பங்ஷனுக்கு வர்ற மாதிரி ஏற்பாடு பண்ணுங்க'' என கணவர்களிடம் கறார் காட்டும் மனைவிகளையும் பல குடும்பங்களில் பார்க்க முடிகிறது.

பிட் நோட்டீஸ் கொடுப்பது மாதிரி சகட்டுமேனிக்கு எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுப்பவர்கள், தேவையான ஏற்பாடுகளைச் செய்வதில் கொஞ்சமும் அக்கறை காட்டுவதில்லை. விளைவு.... சர்வ குழப்பம்! திருமணத்திற்கு வருபவர்களை மண்டப வாயிலிலிருந்து திருமண வீட்டார் கைகூப்பி வரவேற்பதுதான் முறை. ஆனால் போட்டோ, வீடியோவுக்கு போஸ் கொடுப்பதில் பிசியாக இருக்கும் திருமண வீட்டாருக்கு வந்தாரை வரவேற்க எங்கே நேரம் இருக்கிறது! நாமாக ஆஜர் போட வேண்டியதுதான். சில திருமணங்களில் வரவேற்பதற்காக வாடகை பெண்களை அமர்த்துவதும், யார் எவர் எனத் தெரியாமல் எல்லோரையும் பார்த்து அந்தப் பெண்கள் ரோபோ போல சிரிப்பதும்... காலக் கொடுமை!

மண்டபத்திற்குள் கடும் நெருக்கடியாக இருப்பதால் வந்தவர்களை அடையாளம் காண்பதிலும் பெரும் குழப்பம். ஒருவழியாக அடையாளம் கண்டு, பேச ஆரம்பித்தால் ''டைனிங்கில் இடம் கிடைச்சிடுச்சி... சீக்கிரம் வாங்க'' என நம்மிடம் பேச ஆரம்பித்தவரை யாரோ இழுத்துக்கொண்டு ஓடுகிறார்கள்.

going to attend a marrige is a tediuos thing nowadays

இந்த டைனிங் சாமாச்சாரம் இருக்கிறதே... அப்பப்பா, கொடுமையிலும் மகா கொடுமை அதுதான்!

டைனிங் ஹால் கெப்பாசிட்டி 200க்கும் குறைவாகவே இருக்கும். விருந்தினர்கள் 2 ஆயிரம் பேர் என்றால் நிலைமை என்னவாகும்! பெரும்பாலான திருமணங்களில் சாப்பாட்டிற்கு இடம் பிடிப்பதற்குள் பலருக்கும் வேர்த்து விறுவிறுத்துத் தாவு தீர்ந்துவிடுகிறது. ஒரு இடத்திற்கு இரண்டு பேர் போட்டியிட, ஒரே ரகளைதான். ரயிலில் அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் துண்டு போடுவது போல சிலர் கைக்குட்டைகளை உபயோகித்து 'சாப்பாடு சீட்' ரிசர்வ் பண்ணுவது தனிக்கதை.

சரி இடம் கிடைத்தாகிவிட்டது. அப்புறமாவது நிம்மதியாக சாப்பிட விடுவார்களா என்றால் அதுதான் இல்லை. இலையில் தண்ணீர் கூட தெளித்திருக்க மாட்டார்கள். அதற்குள் திமுதிமுவென ஒரு கூட்டம் சாப்பிட உட்கார்ந்திருப்பவர்களின் பின்னால் அணிவகுத்து நிற்கத் தொடங்கிவிடும். சாம்பாரை முடித்து ரசத்திற்குப் போவதற்குள் பின்னால் நிற்பவர்களின் முகங்களில் எள்ளும், கொள்ளும் வெடிக்கும். 'சீக்கிரம் எழுந்திரிய்யா!' என்பது போல அவர்களது பார்வை இருக்கும். இந்தச் சூழ்நிலையில் ரசமாவது, மோராவது! பாதி வயிறு கூட நிரம்பாத நிலையில் இலையை மடக்குவதைத் தவிர வேறு வழியில்லை. லேட்டஸ்டாக, சாப்பிட உட்கார்ந்திருப்பவர்களின் பின்னால் நிற்பதற்குப் பதிலாக பல இடங்களில் முன்னாடியே முறைத்துக்கொண்டு நிற்பதையும் பார்க்க முடிகிறது.

கல்யாணத்திற்கு வந்துவிட்டு மணமக்களை வாழ்த்தாவிட்டால் எப்படி! சரி வாழ்த்தலாம் என பார்த்தால் அரை கிலோமீட்டருக்கு வரிசை இருக்கும். ஆளாளுக்கு பொக்கே, பரிசுப் பொருட்களை வைத்துக்கொண்டு அங்குலம் அங்குலமாக நகர்ந்தபடி இருப்பார்கள். ஏதேனும் விஐபிக்கள் வந்துவிட்டால் சாதாரண மனிதர்களின் வரிசை ஹோல்ட்-ஆன் ஆகிவிடும். கால்கடுக்க நின்றிருந்தால் மட்டுமே மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்த முடியும். இயலாதவர்கள் யாரிடமாவது கொடுத்தனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை.

பல திருமணங்களில் அழைப்பிதழ் தந்தவர்களையே சந்திக்க முடியாத நிலை ஏற்படுவதுண்டு. ''அப்பா ஸ்டேஜில் நிற்கிறாரு'' என்பார்கள். அங்கே போய் பார்த்தால் ''விஐபியை ரிசீவ் பண்ண போயிருக்காரு'' என்பார்கள். சரி ஃபோனிலாவது ஆளை பிடித்து அட்டன்டென்ஸ் போடலாமென்றால் அது எப்போதுமே பிசியாக இருக்கும்.

ஆக, ஒருவர் வந்ததும் தெரியாமல், போவதும் தெரியாமல், வயிறும் நிரம்பாமல் செல்லக் கூடிய நிலையில்தான் பெரும்பாலான இன்றைய திருமணங்கள் நடக்கின்றன. அப்படியானால் வந்தவர்கள் மணமக்களை மனதார வாழ்த்துவது முக்கியமில்லையா என நீங்கள் கேட்கலாம். ''வாழ்த்தாவது ஒண்ணாவது. கூட்டத்தைப் பார்த்தீங்கல்ல, கலெக்‌ஷனை (மொய்) கேட்டீங்கல்ல'' என்கிறார்கள் மண வீட்டார்.

காலம் கலிகாலம் பாஸ். வேறு எதுவும் சொல்வதற்கில்லை!

- கௌதம்

 
 
 
English summary
Attending a marriage is a big thing nowadays than conducting a marriage.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X