"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - (9)

Posted By:
Subscribe to Oneindia Tamil

- லதா சரவணன்

"All the best meenu !"

"நீயென்ன பண்ணப்போறே?"

"நான் எதையும் தனியா பண்ணப்போறதில்லை? உனக்கு உதவியா இருக்கப்போறேன்."

"சரி... என்று சந்தோஷமாய்த் தலையசைத்தாள் மீனாட்சி..'

Kakithapookkal, new story series

அதேபோல் கல்லூரியிலேயே அவளின் பிராஜெக்ட் பற்றி வியப்பாய் பேசியது. காதில் விழுந்த விமர்சனங்கள் கேலிகள் என எல்லாவற்றையும் அலட்சியம் செய்து துவங்கினாள் மீனாட்சி, அதன் பிறகு சில கட்டுரைகளும் எழுதினாள் அவர்களைப் பற்றிய புத்தகங்களையும் படித்தாள் ஓரளவு புரிந்துகொண்ட பிறகு, எல்லாமே கைகொடுத்தது. ஏற்கனவே மூன்றாம் வருடம் போட்ட திருநங்கைகளின் தலைவனைப் பற்றிய நாடகமும் அரங்கேறி இருந்ததால் காலேஜிலும் அவளின் இந்த முயற்சிக்குப் பலன் கிடைத்தது.

ஸ்கூட்டியைப் பார்க் பண்ணிவிட்டு எதிர்வீட்டின் மேல் பார்வையைத் திருப்பிட ரத்னாவோ கேலியாய்ப் பார்த்தபடியே சென்றாள். "அம்மா" புன்னகையுடன் உள்ளே நுழையும் போது, தாயை அழைத்தபடியே வந்தாள்.

"டயர்டா இருக்கும்மா,,"

"சூடா மெதுபக்கோடாவும், மிக்ஸரும் செய்தேன் கைகால் கழுவிவிட்டு உடைமாற்றி வாடா!"

"ரத்னாவுக்கு...."

"அப்பவே கொடுத்தாச்சு...".

மீனாட்சி தன் அறைக்குள் சென்று உடைமாற்றி வரவும், அம்மாவும் டிபனோடு வரவும், சூடாய் காபியைப் பருகியபடியே "மீனா நானும் ஆன்ட்டியும் கோவிலுக்குப் போறோம்."

"சரிம்மா.. "அம்மா கிளம்பிட தன் அறையின் ஜன்னலைத் திறந்தாள் மீனாட்சி...

நேரம் ஆறரையை தொட்டு இருக்க எதிர்பிளாட் இருளில் மூழ்கி இருந்தது. ஈஸ்வர் இன்னமும் வரவில்லை போலும். வண்டியைக் காணவில்லை. மெல்ல காபியைச் சுவைத்தபடியே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போதே சரக்கென்று ஜீப் நுழைந்து அதிலிருந்து உதிர்ந்தான் ஈஸ்வர். ஒரே விநாடிதான் உடனே வீட்டினுள் நுழைந்து கதவைத் தாளிட்டான். மேலே அவன் அறையில் விளக்கு ஒளிவிடத் துவங்கியது.

எப்போதுமே அவன் இப்படித்தான், வந்து ஒரு மாதமான போதிலும், யாரிடமும் அநாவசியமான பேச்சு இல்லை. உடற்பயிற்சி கூட அறையில்தான் போலும், எப்போதாகிலும்

அரிதாய் பால்கனியில் நிற்பது வழக்கம். அதுதவிர காலையில் வாக்கிங். இதுதான் ஈஸ்வரின் வெளிப்புழக்கம். ஜீப்பில் ஏறும்போதும் இறங்கும்போதும் மட்டுமே அவள் காணமுடியும். இதில் அவள் எங்கேயிருந்து சிரிப்பதும், பேசுவதும் ரத்னாவிற்கு இதெல்லாம் புரிய வாய்ப்பில்லையே? அவள்தான் ஒரு மணி வரை படுக்கையைத் தேய்த்துக் கொண்டு இருப்பாளே ?

அன்பைப் பரிமாறிக்கொள்ளாமல் இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. கற்பனையுலகில் சஞ்சாரிப்பதென அற்புதமானதொரு ஆளுகைதான் காதல். தினம் தினம் அதில் மூழ்கினாலும் மீளத் தோன்றாமல் உள்ளே இருக்கும். காதலின் இதயம் ஒரு படுகுழி! கால்பதிக்கும் வரைதான் பாதுகாப்பு ! கால் பதித்து விட்டால், தேனும், விஷமும் இழையோடும் அந்தச் சேற்றில் பலருக்கு கிடைப்பது விஷமே!

இனிக்கும் தேனைப் பருகி அதன் சுவை மாறுவதற்குள் கசக்கும் விஷமாய் மாறுவதும் உண்டு. விஷத்தை விரும்பி உண்டிட எல்லாரும் நீலகண்டன் இல்லையே ? மீனாட்சி முதன்முதலாய் ஈஸ்வரைச் சந்தித்த நினைவுகளை அசை போட்டாள்....

அது கல்லூரியின் இறுதி வருடம் சரித்திர கல்லூரி என்பதால், பழைய பண்பாடு, வரலாறு என்று ஒரு விழா நடத்தப்பட்டது. அதாவது நலிந்துபோய் தற்போதைய இளசுகள் காண மறுக்கும் அறுவையென்று ஒதுக்கப்பட்டு வருமும் பழைய வரலாற்றுக் கதைகளை நாடகமாய் தொகுக்கப் போட்டி வைக்கப்பட்டது. அந்த விழாவிற்கு தலைமை தாங்கிட வந்தவன் தான் ஈஸ்வர்.

மொத்தம் எட்டு நாடகங்கள். புதினங்களில் இருந்து சில மூவேந்தர்களைப் பற்றியதும், என்று ஒவ்வொன்றம் அருமையாகத்தான் இருந்தது. ஆனால் ஐந்தாவதாக இடம்பெற்ற அந்த நாட்டிய நாடகமே பரிசைத் தட்டிச் சென்றது. அதை நடத்தி அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவளும் மீனாட்சிதான். அன்றைய விழா தினத்தில்! வரவேற்புரை பேசி தலைமையாளரை வரவேற்ற பிறகு நடைபெற்ற நான்காவது நாடகம் வரை நார்மலாகவே இருந்தது. அரவான் களப்பலி என்ற நாடகம் துவங்கப் போகிறது எனவும் அதன் கதைப்பற்றிய எழுச்சியும் எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடையே சலசலக்க மேடையில் திரை விரிந்தது.

(தொடரும்)

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Writer Latha Saravanan's new series Kakithappokkal. The story talks about the life a boy.
Please Wait while comments are loading...