• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாழப் பறக்கும் காக்கைகள்- 10: காங்கிரஸ்: காமராஜ் முதல் கார்த்தி வரை...

By Shankar
|

-கதிர்

Kathir

காமராஜ் பெயரைச் சொல்லி தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது என்று கொளுத்திப் போட்டிருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.

சர்ச்சையைக் கிளப்பும் என்று தெரிந்தே இந்தக் கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் எதிர்பார்த்த மாதிரியே சர்ச்சை வெடித்துள்ளது.

காமராஜ் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் காங்கிரஸ் காலந்தள்ள முடியாது என்று தங்கபாலு போன்றவர்கள் கண்டித்திருக்கிறார்கள். பல கட்சிகளைப் பார்த்து வந்த திருநாவுக்கரசர் மட்டும்தான், 'கார்த்தியின் கருத்து சரி; அதை சொன்ன விதம் மட்டும் தவறு' என ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

கார்த்தி பேசிய இடம் சத்தியமூர்த்தி பவன் என்பதாலும், அங்கே நடந்தது இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் என்பதாலும் யாரும் ஊதிவிட தேவையில்லாமல் விஷயம் உடனே பற்றிக் கொண்டது.

முன்னாள் நிதியமைச்சரின் மகன் பேசியதன் சாராம்சம் இதுதான்:

'பழைய பெருமை பேசி தேர்தலில் இனி வெற்றி பெற முடியாது. எதிர்காலம் பற்றி பேசினால்தான் மக்களிடம் எடுபடும். காமராஜ் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று திரும்பத் திரும்ப பேசுகிறீர்கள். காமராஜ் ஆட்சி என்றால் என்ன? அது எப்படி இருந்தது? அந்த ஆட்சியைப் பார்த்தவர்கள் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள்? எனக்கு காமராஜ் ஆட்சியை தெரியாது. நான் பார்த்ததில்லை. ஆகவே இன்றைய தலைமுறைக்கு புரியும்படி கருத்துச் சொல்லுங்கள். எதிர்காலத்துக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை மக்களிடம் சொல்லி ஓட்டு கேளுங்கள். காலத்துக்கு தக்கபடி மாறுங்கள்'.

karti chidambaram

இதுதான் கார்த்தி சிதம்பரத்தின் உபதேசம்.

வாஜ்பாய் ஆட்சியைக் கொண்டு வருவேன் என்று மோடி பேசவில்லை. எம்ஜியார் ஆட்சியை ஏற்படுத்துவேன் என்று ஜெயலலிதா கூறவில்லை. அண்ணா ஆட்சியை அமைப்பேன் என கருணாநிதி சொல்லவில்லை. எனது ஆட்சியில் என்ன செய்தேன், இனி என்ன செய்வேன் என்பதைச் சொல்லிதான் மற்ற தலைவர்கள் ஓட்டுக் கேட்கிறார்கள் என்பதையும் கார்த்தி கைநீட்டிக் காட்டியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் உறுப்பினர் அட்டையில் காமராஜ் படம் போட தேவையில்லை, சோனியா, ராகுல் படங்களே போதும் என்று மேலிடம் எடுத்த முடிவால் அதிருப்தி அடைந்து வாசன் வெளியே வந்தார் என்று ஞானதேசிகன் சொன்னார்.

'என்னது, காமராஜ் படத்தையே நீக்க சொன்னாரா சோனியா?' என்று தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளித்து வாசன் பின்னால் வரிசையில் நிற்க ஓடி வருவார்கள் என அவர் எதிர்பார்த்து இருக்கலாம்.

காமராஜ் மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் அபிமானமும் மதிப்பும் அளப்பற்றது எனும் நம்பிக்கை அதற்கு காரணம்.

அப்படிப்பட்ட பின்னணியில், கார்த்தி இப்படி தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட துணிச்சலைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதே சமயம் கோஷ்டி அரசியல் கொடி பறக்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை இருந்துவரும் எதிர்ப்பில்லாத முகவரி காமராஜ் மட்டுமே. அதையும் கீழே போட்டால் தூக்கிப் பிடிக்க எதுவும் இருக்காதே என்ற கவலையையும் ஒதுக்கிவிட முடியாது.

கார்த்தி சுட்டிக் காட்டியது போல மற்ற கட்சிகளின் தலைவர்கள் தங்களையே முன்னிறுத்தி ஓட்டு கேட்கிறார்கள். அடுத்த முதல்வராக வரப் போவது நானே என்று பல தலைவர்கள் அதீத நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மறுமலர்ச்சி திமுகவின் பொதுச்செயலாளர் மட்டுமே அதுபோன்ற ஆசைகள் எதையும் வளர்த்துக் கொள்ளாமல் ஒவ்வொரு தேர்தலிலும் ஒருவர் முதல்வராக உழைப்பது என்ற தியாக உணர்வுடன் உலா வருகிறார்.

ஜெயலலிதா தேர்தலில் நிற்க வாய்ப்பில்லாத நிலையில் பன்னீர் செல்வம் மீண்டும் முதல்வராக வரலாம் என்று அதிமுகவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கருணாநிதிக்கு இன்னும் ஒருமுறை முதல்வராகும் யோகம் இருப்பதாக அவரது கட்சியினர் கூறுகிறார்கள்.

அன்புமணிக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக ராமதாஸ் நம்புகிறார். மோடி மந்திரம் வேலை செய்தால் தமிழிசைக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம் என்று பிஜேபியில் சிலர் கவலைப்படுகிறார்கள். தப்பித் தவறி காங்கிரஸ் ஜெயித்துவிட்டால் இன்னார் தலைமையில் ஆட்சி அமையும் என்று சொல்ல அங்கே யார் இருக்கிறார்கள்?

நல்ல ஆட்சி என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தது காமராஜ் ஆட்சி என்பது மிகையான கருத்தல்ல. நிச்சயமாக தமிழகத்தின் பொற்காலம் அது. ஆகவேதான், திராவிடக் கட்சிகளின் ஆட்சியை மாறி மாறி அனுபவித்து வரும் தமிழக மக்களிடம், காமராஜ் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த வாய்ப்பு தாருங்கள் என காங்கிரஸ் கேட்டு வருகிறது.

அரை நூற்றாண்டு காலமாக இந்த கோஷத்தை தொடர்ந்து ஒலித்தாலும் தமிழக மக்கள் கண்டுகொள்ளவே இல்லை. கார்த்தி சொன்னதுபோல காலம் மாறிவிட்டது.

காமராஜ் முதல்வராக இருந்தது 1954 முதல் 1963 வரையில். அப்போது விவரம் தெரிந்தவர்களாக இருந்தவர்கள் எத்தனை பேர் இன்று இருக்கிறார்கள். 80 வயதுக்கு மேற்பட்டவர்களை சென்சஸ் ஆவணங்கள் மூலம் அடையாளம் கண்டு பேட்டியெடுக்க சென்றால் அவர்களில் எத்தனை பேரால் ஞாபகப்படுத்த இயலும்?

nehru

முதல்வர் ஜெயலலிதாவை முன்னாள் ஆக்கிய நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பைக் கேட்டவர்கள், 1991க்கும் 96க்கும் இடையே அப்படி என்ன நடந்தது என்று ஆச்சரியத்துடன் விசாரித்தார்கள். 18 ஆண்டுகளாக நடந்த வழக்கின் விவரம் பலருக்கு தெரியவில்லை. 'பப்ளிக் மெமரி இஸ் நொடோரியஸ்லி ஷார்ட்' என்பார்கள்.

எல்லா நாட்டிலும் அதே. இந்த லட்சணத்தில் காந்தி காமராஜ் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்பது கார்த்தி போன்ற இளைஞர்களுக்கு காமெடியாகத் தெரிவதில் வியப்புக்கு இடமில்லை.

அப்படியானால் என்ன செய்யலாம்?

காமராஜ் என்பவர் யார் என்று தமிழக மக்களுக்கு மறு அறிமுகம் செய்யலாம். காமராஜ் இந்த மாநிலத்துக்கு என்ன செய்தார், முதல்வராக எப்படி செயல்பட்டார், அதிகாரிகளை எப்படி வேலை வாங்கினார், அவரது சொந்த வாழ்க்கை எப்படி இருந்தது, சொத்து வாங்கிக் குவித்தாரா, சொந்தக்காரர்கள் நண்பர்கள் அவரைச் சுற்றியிருந்து சுகவாழ்வு அனுபவித்தார்களா, மத்திய அரசின் உதவிகளை எப்படிப் பெற்று தமிழகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்தார், சொகுசுக் கார்கள் பின்தொடர வீதிகளில் அணிவகுப்பு நடத்தி பொதுமக்களை வெயிலில் வாடவிட்டாரா, எவருமே தன்னை அணுக வழியில்லாமல் கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் தன்னை அடைத்துக் கொண்டாரா, மாற்றுக் கருத்து வெளியிட்ட எதிர்க் கட்சியினர் வீடுகளைச் சோதனையிட காவல் துறையை ஏவினாரா, விமர்சனம் செய்த பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்காதே என்று தடுத்தாரா, முக்கியமான பதவிகளில் ஜால்ராக்களை நியமித்து ஜனநாயக கட்டமைப்பை கேலிக் கூத்து ஆக்கினாரா...

இதுபோன்ற கேள்விகளை எழுப்பி உரிய பதிலையும் சேர்த்து இளங்கோவன் ஒரு பிரகடனம் செய்யலாம்.

evks

அதாவது, தமிழக மக்கள் மீண்டும் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினால், முதல்வராக வருபவர் மட்டுமல்ல, ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் ஒரு காமராஜாக செயல்படுவோம் என்ற உத்தரவாதத்தை அவர் அளிக்கலாம்.

நமக்கென்னவோ இளங்கோவனை அவ்வாறான ஓர் இக்கட்டில் மாட்டி வைக்கவே கார்த்தி விரும்புவதாக தெரிகிறது. காமராஜுக்கு பிறகும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. பக்தவத்சலம் முதல்வராக இருந்தார்.

இயற்கையான காரணங்களாலும் செயற்கையான காரணங்களாலும் மக்கள் மத்தியில் அறவே மதிப்பிழந்த கட்சியாக காங்கிரஸ் மாறிப்போன காலகட்டம்.

காமராஜுக்கும் பதவி அதிகாரம் போன்றவற்றில் நாட்டம் கிடையாது என்பதால், மீண்டும் ஆட்சிக்கு வர அவர் எந்த முயற்சியிலும் சீரியசாக இறங்கவில்லை. இந்திராவுக்கு எதிராக சென்று இன்னும் செல்வாக்கு இழந்து, பின்னர் அதே இந்திராவுடன் சமரசமாகி நாடாளுமன்ற உறுப்பினராகி எமர்ஜென்சி காலத்தில் தன் இயலாமையை நொந்துகொண்டு மனமொடிந்த பறவையாக விண்ணுலகம் சென்றார் காமராஜ்.

kamarajar

ஆகவே, காமராஜுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் செய்த தவறுகளை இளங்கோவன் பட்டியலிட்டு, அந்த தவறுகளை தான் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்யலாம். அந்த ஆட்சியாளர்கள் செய்யத் தவறிய விஷயங்களையும் பட்டியலிட்டு, அவற்றையெல்லாம் ஆட்சிக்கு வந்த இத்தனை மாதங்களில் நிறைவேற்றுகிறேன் என உறுதிமொழி அளிக்கலாம்.

இரண்டையும்விட முக்கியமான ஒன்று இருக்கிறது. கட்சி பெரும்பான்மை பலம் பெற்றாலும் முதல்வராக வரவேண்டியவர் யார் என்பதை மேலிடம் தீர்மானிக்கும் என்ற ஜனநாயக விரோத செய்லுக்கு தமிழக காங்கிரஸ் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

சிறப்பான குடும்ப பாரம்பரியமும் சீரான நடத்தையும் நெடிய அனுபவமும் அசாத்திய துணிச்சலும் கொண்ட இளங்கோவன் ஆனாலும் சரி, குடும்பப் பின்னணி தவிர்த்த குறிப்பிடத் தக்க தகுதிகள் ஏதுமற்ற கார்த்தி சிதம்பரம் ஆனாலும் சரி, கட்சி வெற்றி வாகை சூடும் பட்சத்தில் இன்னார்தான் முதல்வராக பதவி ஏற்பார் என்பதை தேர்தல் களத்தில் கால் பதிக்கும் முன்னரே காங்கிரஸ் அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு அறிவிக்கப்பட்ட நபரே தேர்தலில் தோல்வியைத் தழுவினால் தவிர, அந்த ஏற்பாட்டில் எந்த மாற்ற த்தையும் திணிக்க மேலிடம் தலையிடக் கூடாது.

யாருடைய தலைமையில் ஒரு கட்சி தேர்தலைச் சந்திக்கிறதோ, பெரும்பான்மை பெறுகிறதோ, அவருக்கே முதல்பவர் பதவி என்ற மறக்கப்பட்ட மரபுக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும்.

மற்றொரு தேசிய கட்சியான பிஜேபி அதைச் செயல்படுத்த தொடங்கிவிட்ட பிறகு காங்கிரஸ் தயங்க எந்த முகாந்திரமும் இல்லை.

சட்டப்படி இந்த சட்டசபைக்கு இன்னும் 18 மாதங்கள் ஆயுள் பாக்கி இருந்தாலும், ஏறத்தாழ ஓராண்டு முன்னதாக சபையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த அதிமுக தலைமை விரும்புவதாக தகவல்கள் உலா வருகின்றன. அதைக் கருத்தில் கொண்டு, தேர்தல் அறிவிப்பு வரும் வரைக் காத்திராமல் தமிழக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்றே தயாரிக்கத் தொடங்கலாம்.

உண்மையில் தமிழக பிஜேபி அதற்காகத்தான் காத்திருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The 10th chapter of Kathir's Thaazha Parakkum Kaakkaigal analyses the possibilities of Congress Party's emergence as ruling party and bringing Kamaraj's rule again in Tamil Nadu

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more