• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாழப் பறக்கும் காக்கைகள் 14 - எந்தக் கடவுளும் மன்னிக்க மாட்டார்

By Shankar
|

-கதிர்

Kathir

உன்னை கொல்லப் போகிறேன் என்று சொல்லிவிட்டு எந்திர துப்பாக்கியால் குழந்தையை சுட்டு கொல்பவனை நீங்கள் எந்த வகையில் சேர்க்க முடியும்?

மிருகம் என்பீர்கள். காட்டுமிராண்டி எனலாம். எதுவும் பொருந்தாது. தமிழில் மட்டுமல்ல, உலகத்தின் எந்த பாஷையில் தேடி பார்த்தாலும் சரியான வார்த்தை கிடைக்காது.

Thaazha Parakkum Kaakkaigal - 14

அதனால்தான் அவை தமக்கு தாமே பெயர் சூட்டிக் கொண்டன. தலிபான்.

குழந்தைகள் குதூகலமாக ஆடிப் பாடி விளையாடுவதை பார்ப்பதே இன்பம். சிரிக்கும் குழந்தையின் போட்டோவைப் பார்த்தாலே மனதில் கவலை மறைந்து விடும். 'டேபிள், சேருக்கு பின்னால ஒளிஞ்சுகிட்டு இருக்கும். ஒரு இடம் விடாம தேடி வெளீல இழுத்துப் போடு. ஒரு குழந்தையும் உயிரோட வீட்டுக்கு திரும்பக் கூடாது!' என்று கொலைகார தலிபான் கோஷ்டியின் தலைவன் உத்தரவு பிறப்பிக்கிறான் என்றால் அவன் மனம் எவ்வளவு மோசமாக அழுகிக் கிடக்கிறது, பாருங்கள். சிக் மைண்ட்.

பிணம் போல அசையாமல் கிடந்ததால் தப்பிப் பிழைத்த ஒரு சிறுவன் சொன்னான் அல்லவா?

‘விடியோ கேமில் சுடுவது போல அவர்கள் நீளமான எந்திர துப்பாக்கிகளால் சுட்டபோது அது நிஜம் என்பதையே நம்ப முடியவில்லை. குண்டு பாய்ந்து ரத்தம் கொப்பளிக்க என் கிளாஸ்மேட்ஸ் வரிசையாக சரிந்து விழுந்ததைப் பார்த்தபோதுதான் இது வீடியோ கேம் அல்ல என்று மூளையில் உறைத்தது. ஓட நினைத்த போது என் இரண்டு கால்களிலும் மூட்டுக்கு கீழே குண்டுகள் பாய்ந்தன. கீழே விழுந்தேன். ரத்தம் பொங்கி வருவதை பார்த்து கண் இருண்டது. அப்போதுதான் தலைவன் மாதிரி இருந்தவன் உத்தரவு போட்டான். ஒருவன் துப்பாக்கி முனையால் சேர்களையும் டேபிள்களையும் தள்ளிவிட்டு, யாராவது ஒளிந்திருக்கிறார்களா என்று பார்த்தான். பயத்தில் எனக்கு வலிகூட தெரியவில்லை. வாயில் இருந்து என்னை மீறி சத்தம் வந்துவிடுமோ என்ற பீதியில் டையை சுருட்டி வாய்க்குள் திணித்துக் கொண்டேன். எல்லாரும் சடலமாகி விட்டதால் கிளாஸ்ரூம் பயங்கர அமைதியாக இருந்தது. ட்ரில்லிங் மெஷினால் தரையில் துளை போடுவது போல அவன் ஆங்காங்கே பிணங்கள் மீதும் குண்டுகளை பாய்ச்சியபடி நான் கிடந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். சாவு நிச்சயம் என்று தெரிந்துவிட்டதால் கண்களை மூடி மனதுக்குள் ஒன் டூ என்று எண்ண ஆரம்பித்தேன். அவனுடைய பூட்ஸ் உயர்ந்ததுதான் கடைசியாக என் கண்களில் பதிவான காட்சி...'

-கொடூரம் என்ற வார்த்தையை இத்தனை காலமாக பலநூறு முறை பயன்படுத்தி இருந்தாலும் பெஷாவர் தாக்குதலுக்குதான் முழுமையாக பொருந்தும்.

Thaazha Parakkum Kaakkaigal - 14

ஆனால் தலிபான்கள் இந்த காரியத்தை செய்யக்கூடியவர்கள் என்பது முன்பே தெரியும். மலாலாவை இப்படித்தானே கொல்ல முயன்றார்கள்.

மலாலாவின் பெற்றோர் வசிக்கும் ஸ்வாட் பள்ளத்தாக்கு தலிபான்கள் ஆதிக்கத்தில் இருந்த பகுதி. பெண்கள் வெளியே நடமாடுவதையும், வேலைக்கு செல்வதையும், பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதையும் அவர்கள் தடுத்தார்கள். அதை எதிர்த்து குரல் கொடுத்த சிறுமி மலாலா. நம்மூரில் இருந்தால் தெய்வக் குழந்தை என்று பட்டம் சூட்டி காட்சிப் பொருளாக்கி இருப்பார்கள். 2009ம் ஆண்டில் அவள் வயது 11. பெண் கல்வியை ஆதரித்து பிபிசி சைட்டில் பிளாக் எழுதியது அந்த குழந்தை. இறைவன் பெயரை சொல்லியும் புனிதநூல் வாசகங்களை தவறாக அர்த்தப்படுத்தியும் தலிபான் பயங்கரவதிகள் நடத்திய அராஜகத்தை அந்தக் குழந்தையின் வார்த்தைகளில் வாசித்த நாகரிக உலகம் நடுங்கிப்போனது. எதிர்ப்பு சர்வதேச மேடைகளில் ஒலித்ததை ஜீரணிக்க முடியாத தலிபான் கூலிகள், மலாலா பள்ளிக்கு செல்லும் வழியில் வேனை மறித்து அவளை குறி வைத்து சுட்டனர்.

2012ல் இந்த சம்பவம் நடந்தபோதே உலகம் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஆப்கானிஸ்தான் தலிபான்களை ஒழிக்க பாகிஸ்தான் ராணுவத்தின் உதவி அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது. அமெரிக்க படைகளுக்கு உதவ பாகிஸ்தான் தலிபான்களின் ஒத்துழைப்பு அந்த ராணுவத்துக்கு தேவைப்பட்டது. எல்லையோர மலைகளில் மறைந்து வாழும் தலிபான்களை மீறி ஆப்கானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு சப்ளைகள் அனுப்ப இயலாது. இப்படி தலிபான்கள் வளர்ச்சிக்கு தண்ணீர் ஊற்றி உரம் போட்டு பாதுகாப்பும் வழங்கியது பாகிஸ்தான் ராணுவம்தான்.

‘வீட்டு தோட்டத்தில் பாம்புகளை பால் ஊற்றி வளர்க்கிறீர்கள். கேட்டால் அது பக்கத்து வீட்டுக்காரனை பயமுறுத்த என்கிறீர்கள். ஒருநாள் அந்த பாம்புகள் வீட்டுக்காரனையும் கொத்தாமல் விடாது' என்று பாகிஸ்தான் ராணுவத்தையும் அதனிடம் நடுங்கி சாகும் பாகிஸ்தான் சிவிலியன் அரசையும் ஒருமுறை ஓப்பனாக எச்சரித்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன்.

என்ன பிரயோசனம்? ஆப்கானிஸ்தானை ஒட்டிய மேற்கு எல்லையில் பாக் தலிபான்களை வளர்த்துவிட்டு ஆப்கானிஸ்தானையும், இந்தியாவை ஒட்டிய கிழக்கு எல்லையில் லஷ்கர்-இ-தொய்பாவை ஊக்குவித்து இந்தியாவையும் எப்போதும் டென்ஷனில் வைத்திருக்க வேண்டும் என்பது பாகிஸ்தான் அரசின் ஒரிஜினல் பிளான். முன்னதின் பெயர் தேரிக்-இ-தலிபான் பாகிஸ்தான். சுருக்கமாக டிடிபி. பின்னதின் பெயர் சுருக்கம் எல்இட்டி. இந்த அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத். வாயை திறந்தால் விஷம் கொட்டும் மனிதப் பாம்பு.

Thaazha Parakkum Kaakkaigal - 14

பெஷாவர் குழந்தைகள் கொலைக்கு டிடிபி பகிரங்கமாக பொறுப்பு ஏற்ற பிறகும் இவன் கூசாமல் சொல்கிறான், அது இந்தியாவின் கைவரிசை என்று. நரேந்திர மோடி சொல்லி,இந்திய உளவு அமைப்பு ரா ஏற்பாடு செய்த கொலைகளாம். அறிவுகெட்ட முண்டம் என்று பாகிஸ்தான் ஊடகங்களாலேயே வர்ணிக்கப்பட்ட முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபும் அதே அபாண்டத்தை வழிமொழிகிறார்.

இங்குள்ள சிஎன்என்-ஐபிஎன் அறிவாளிகள் கேட்டு வாங்கிய முஷாரஃப் பேட்டியை திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறார்கள். வேறு எந்த நாட்டிலாவது இது சாத்தியமா?

மும்பை அட்டாக்கின் மூளையாக செயல்பட்டவன் ஜகியுர் ரஹ்மான் லக்வி. ஒரு அஜ்மல் கசாபையும் அவனுக்கு துணையாக சில முரடர்களையும் மூளைச் சலவை செய்து மும்பைக்கு அனுப்பியவன். இவன் மேலே சொன்ன எல்இடி சயீதின் சீடன்.

இந்தியாவுக்கு ஆதரவாக வல்லரசுகள் குரல் கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்ட லக்விக்கு பயங்கரவாத வழக்குகளுக்கான பாகிஸ்தான் தனி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி இருக்கிறது.

பெஷாவர் சம்பவத்தால் கொதித்துப் போயிருக்கும் பொதுமக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டுமே என்று சர்வகட்சி கூட்டம் கூட்டினார் பிரதமர் நவாஸ் ஷெரிப்.

ஆவேசமாக பேசினார்கள் தலைவர்கள். தலிபான்களுடன் பேச்சு நடத்தப் போவதாக போனவாரம் அறிவித்த இம்ரான் கானால் கூட மக்களின் உணர்ச்சிகளுக்கு எதிராகப் பேச முடியவில்லை. ‘இனி நாம் நல்ல தலிபான், கெட்ட தலிபான் என்று வித்தியாசம் பார்க்கப் போவதில்லை. எல்லா தலிபான்களையும் ஒழிப்போம்' என்று நவாஸ் அறிவித்தார்.

அரசுக்கு தண்ணிகாட்டியே பழக்கப்பட்ட ராணுவத்தின் தளபதி ரஹீல் ஷெரிப் கூட, ‘தீவிரவாதிகளை ஒழித்தே தீருவோம். முதல் கட்டமாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் மூவாயிரம் தீவிரவாதிகளை தூக்கில் போடுமாறு நவாஸ் ஷெரீபிடம் சொல்லிவிட்டேன்' என்று ட்விட்டரில் கர்ஜித்தார். பிரதமருக்கு தளபதி கட்டளையா என்று மலைக்காதீர்கள். அதுதான் பாகிஸ்தான்.

இதெல்லாம் நடந்ததற்கு பிறகுதான் மும்பை அட்டாக் தீவிரவாத தலைவனுக்கு ஜாமீன் கொடுத்திருக்கிறது ஸ்பெஷல் கோர்ட். குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்த நேரத்தில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உயிர் பயம் யாரை விட்டது?

தீவிரவாதிகளை வளர்த்துவிடுபவன் ஒருநாள் அதற்கான விலையை கொடுத்துதானே தீரவேண்டும்? பாக் ராணுவத்துக்கு எதிராக பாக் தலிபான் திரும்பிவிட்டது. லஷ்கரும் தன்னை வளர்த்துவிட்ட ராணுவத்துக்கு எதிராக திரும்பும் நாள் தொலைவில் இல்லை.

தீப்பொறி சயீத் தன் விஷ நாக்கை சுழற்றி ராணுவத்தை விமர்சிக்க ஆரம்பித்தால் ஊடகங்கள் அதை மக்களிடம் கொண்டு செல்ல தயாராக நிற்கும்.

அரசியல்வாதிகளின் ஊழல் தாங்கமாட்டாமல் ராணுவமே மேல் என்று சாய்ந்த பாகிஸ்தான் மக்கள் நமது தளபதிகளும் இப்படித்தானா என்று விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்படுவார்கள்.

காஷ்மீரை அடையும் கனவு ஒருக்காலும் பலிக்காது. குண்டுவெடிப்புகளால் இந்தியாவை பணியவைக்க முடியாது. வங்கதேச பிரிவினைக்கு பழிக்குப் பழியாக சீனாவுடன் கைகோர்த்து இந்தியாவை துண்டுபோட நிச்சயம் முடியாது. இந்த உண்மைகளை பாகிஸ்தானின் அதிகார வர்க்கம் முழுமையாக ஏற்றுக் கொண்டால்தான் அந்த நாட்டுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற மக்களும் அவர்களின் நாடும் நாசமாய் போகட்டும் என்று எந்த இந்தியனும் பிரார்த்திக்க மாட்டான்.

கள்ளம் கபடம் தெரியாத 132 குழந்தைகள் துடிக்கத் துடிக்க சிந்திய ரத்தம் வீணாக அனுமதித்தால் எந்தக் கடவுளும் நமக்கு பாவமன்னிப்பு வழங்க மாட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The fourteenth episode of Thaazha Parakkum Kaakkaigal is analysing cruel attack of Thaliban terrorists on Peshaval school children.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more