For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உழவர் பெருமக்களை வணங்கி பொங்கலை கொண்டாடுவோம்

Google Oneindia Tamil News

சென்னை: தைத் திங்கள் முதல் நாள் தமிழர் போற்றும் பெருநாள் பொங்கல் திருநாள். பழையன கழிய புதியன புகுத்த போகி, புத்தரிசியில் புது பானையில் பொங்கல், பால் கொடுக்கும் தேவதைக்கு பசும்பொங்கல், தமிழர்க்கு குறள் தந்த வள்ளுவனுக்கு ஒரு நாள், என்று வரிசையாய் நல்ல நாள். அனைத்தும் பண்டிகை நாள். அனைவரையும் கொண்டாடும் நாள். அனைவரையும்? அனைவரையும்? ... இல்லையே, எங்கோ இடிக்கிறதே, முக்கியமான எதையோ விட்டிருக்கிறோமே...

நாடு நலம் பெற இந்திரன் காரணமில்லை என்று உண்மை உணர்ந்து கோவர்தன மலைக்கு பூஜை செய்தான் கிருஷ்ணன். அவன் வகுத்த பாதையில் வாழும் நாம், அவன் உரைத்த கீதையை வணங்கும் நாம், பூஜைக்குரிய முதன்மையானவரை விட்டு விட்டோமே!!

Pongal special story

சூரிய பகவான் - சரி, புது அரிசி - சரி, மாடுகள்- சரி, ஆனால் இவரை விட முக்கியமானவர் - உழவர்.

"உழவர் திருநாள்" என்று பெயருக்கு மட்டும், ஆனால் உழவர் அனைவரையும் அழ வைத்து கொண்டிருக்கிறோம்; உழுது உயிர் காக்கும் உத்தமர்களை தொழுது வணங்க வேண்டிய நாம் அவர்கள் அழுவதை கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம், "அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்" என்று வசனம் பேசுகிறோம்; ஆனால் அவர்கள் வாழ்க்கை தரம் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறதா, அவர்கள் எந்த வித பாதிப்புகளில் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று நாம் என்றும் கவலை படுவதில்லை.

விளை நிலங்களில் துளை போட்டு எரிவாயு எடுப்பது அவர் பிரச்னை, மீளா கடன் தொல்லைகள் அவர் பிரச்னை, பெருமழை பயிர்களை அழித்ததா அவர் பிரச்னை, கடும் வறட்சியால் பயிர் விளைவில்லையா - அவர் பிரச்னை, பெட்ரோல் விளை ஏற்றத்தால், நுகர் பொருள் விலை, கொள்விலை குறைவா, ஏற்றமா அவர் பிரச்னை, எல்லாமே உழவர் சம்பந்தப்பட்ட பிரச்னை, இதுதான் நாம் எல்லோருடைய மனப்பான்மையும், அந்த அவர்கள் பாதிக்கப்பட்டால் உணவு கிடைக்காமல் நாம் வாழ்க்கை பாதிக்கும் என்று ஒரு நாளும் சிந்திப்பதில்லை.

டாக்டர் தம் பிள்ளைகளை டாக்டர் ஆகவே விரும்புவார்கள், வக்கீல் தம் பிள்ளைகளை வக்கீல் அகா விரும்புவார்கள், என்ஜினீயர்கள் தம் பிள்ளைகள் என்ஜினீயர்கள் ஆவதை விரும்புவார்கள், ஆனால் ஒரு விவசாயி தம் மகனை விவசாயி ஆக்க ஒருபோதும் விரும்புவதில்லை , காரணம் - எல்லோரும் அறிந்ததுதான் - விவசாய தொழிலில் - மன்னிக்கவும் விவசாயம் தொழில் அல்ல - அது ஒரு சேவை - லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை, கடன் இல்லாமல், செய்த முதலீடு வந்ததா என்று கணக்கு போடும் தொழிலாகவே விவசாயம் உள்ளது; இன்று வரை உழவர் இந்த தொழிலை தலைதலைமுறையாய் ஒரு சேவையாகவே லாபம் நஷ்டம் மட்டுமே பார்க்காமல் செய்து வருகிறார்கள். அந்த மாமனிதர்களுக்கே இந்த கட்டுரை சமர்ப்பணம்.

சோறு கண்ட இடம் சொர்கம், அப்படியானால் சோறு வளர்ப்பவன் தேவதை அல்லவா. ஆனால் அந்த தேவதைகள் துரதிர்ஷ்டவசமாக கோவணம் கட்டி கால் வயிற்றுக்கும் அரை வயிற்றுக்கும் அல்லல் படுகின்றதே, ஏன்?

ஒரு உருப்படாத திரைப்படத்திற்கு 100 ரூ , 200 ரூ என்று தயங்காமல் கொடுத்து பார்க்கும் நாம், "தக்காளி பழம் அநியாயம் 20 ரூ ஒரு கிலோ " என்று வாயிலடித்து வாங்குகிறோம்; அந்த 20 ரூபாயில் அதை விளைய செய்த விவசாயிக்கு 4 ரூ சேர்ந்தால் அதிகம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அந்த ஒரு தக்காளி பழம் நம் கையில் வந்து சேர ஒரு விவசாயி எத்தனை நாள் சேற்று நிலத்தை உழுது, விதை நட்டு, உரமிட்டு, புழு பூச்சி அண்டாமல் உயிர் கொல்லி மருந்துகளை தன் உடல் நலம் நினைக்காமல், தெளித்து, அந்த நிலமே தவமாய் கிடந்து அண்டை அயல் செல்லாமல்; அடர்மழையிலும், குளிரிலும், சுடவியிலிலும் அது மடிந்து விடாமல் பாதுகாத்து, அதற்கு வடிவம் கொடுத்து, இடைத்தரகளிடம் மல்லாடி ஒரு 4 ரூ பெறுவதற்கு நாம் தரும் பரிசு "அநியாயம்" ;
இது என்ன மர்மம்- புரியவில்லை.

உயிர் காக்கும் உணவு பண்டங்கள்- அரிசி, பருப்பு, பழங்கள், காய்கறிகள் எல்லாம் என்றைக்கும் ஒரு கிலோ நூறு ரூபாய்களை தாண்டியதில்லை, ஆனால் உருவத்திற்க்கு அலங்காரம் கொடுக்கும் உடைகள், உடுப்புகள், செருப்புகள், ஆபரணங்கள் ஆயிரம் ரூபாய்களுக்கு மேல்; எத்தனை ஆயிரங்கள் விலை உயர்கிறதோ, அத்தனை ஆயிரம் மடங்கு உடுத்துபவனின் மதிப்பு உயர்கிறது. எத்தனை ஆபரணங்கள் உடலை அலங்கரிக்கிறதோ அத்தனை அந்த மனிதர்க்கு சமூகத்தில் மரியாதை. புரிபடாத விந்தை _ ஏன் முட்டாள்தனமான சிந்தனை_ அத்தனை கோடி மதிப்புள்ள அந்த மனிதரும் அரிசி, கோதுமையைத்தானே உண்ண முடியும்!! அரிசி, கோதுமை, காய்கனிகள்தானே அவர் உயிர் காக்கிறது, அவைதானே உண்மையில் விலை மடிப்புள்ளதாக இருக்க வேண்டும்!!!
"தங்க தட்டிலும் தவிட்டரிசியைத்தானே உண்ண வேண்டும்" .

இந்த உண்மை எப்போது உணர போகிறோம், இல்லை உணர்ந்தும் அசட்டை செய்கிறோமா?? அதற்காக அரிசி ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்று சொல்லவில்லை, அரிசி உருவாக்குபவனை அரசன் போல இல்லை கடவுள் போல மதிக்க வேண்டாமா? ஆனால் அவனோ கோவணம் கட்டி கடைநிலை மனிதனாக நடத்தப்படுகிறானே!! இது அநியாயம் இல்லையா? உணவு உண்ணும் அனைவரும் - அப்படி என்றல் உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும்- உழவர்களை பாதுகாக்க வேண்டாமா, அவர்கள் வாழ்வாதாரம் சிதையாமல் காப்பாற்ற வேண்டாமா? அரிசி உருவாக்குபவனை ஆண்டி போலவும், ஆபரணம் உருவாக்குபவனை அரசன் போலவும் கொண்டாடும் இந்த கையறு நிலை எப்போது மாறும்?

உண்மையாய் உயிர் காப்பவரை விட்டு, ஆடம்பர வாழ்க்கைக்கு தூரிகை போட்டு இன்னும் எத்தனை நாட்களுக்கு அவர்களுக்கு துரோகம் இழைப்போம்?
ஒரு நாள் வரும், எழுதி வைத்து கொள்ளுங்கள், ஒரு நாள் கண்டிப்பாக வரும்; உணவு பண்டங்கள் வேண்டி உழவனின் காலடிகளை வருடும் ஒரு நாள் வரும். அன்று நமது விலை உயர்ந்த ஆடை, வசந்த மளிகை, ஆபரணங்கள், கட்டி காக்கும் காகிதப்பணங்கள் எதுவும் கை கொடுக்காது. உழவறண்டி தயாரிக்கும் உணவு பண்டங்கள் உயிர் காக்கும் அன்று உண்மை உணரும் நாள் வரும், அந்த உயரிய நாளே உயிர் காக்கும் உழவர் திருநாள். அன்றே உழவு தொழிலுக்கு உண்மையான பொங்கல் நாள். அது வரை இன்று இந்த நல்லுணவை தந்து நமது இன்னுயிர் காக்கும் உழவர் பெருமக்களை வணங்கி பொங்கல் திருநாளை உறவுகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.

வாழ்க உழவு தொழில்
வாழ்க உழவர்கள்
வளர்க அவர்கள் சேவை

- சுஜாதா பூபதிராஜ்

English summary
Here is a special story on Pongal festival. The writer calls the people to honour the farmers on this special day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X