For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பாவை - 09

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பாவை - 09

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.

Thirupavai and Thiruvembavai- Dec 12

விளக்கம்:

அழகாய் ஒளிரும் நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிலும் விளக்கெரிய, நறுமணங்கள் மணம் வீச, பார்த்தாலே உறக்கம் வரும் மென்மையான அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்புவாயாக. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரவாதி அவளை மயக்கிவிட்டானா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல் என்று எழுப்புகிறாள் ஆண்டாள். உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும் என்று இந்த பாசுரத்தின் மூலம் ஆண்டாள் விளக்குகிறாள்.

திருவெம்பாவை - 9

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :

உறக்கத்தில் இருந்து அனைத்து கன்னியர்களும் எழுந்து விட்டனர். அனைவரும் ஒன்றாக கூடி நீராடி இறைவனான சிவபெருமானை புகழ்ந்து பாடுகின்றனர். கன்னியரனைவரும் உறக்கத்திலிருந்து எழுந்து கூடிவிட்டனர். ஒருநிலை மனத்துடன் இறைவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். பழமைக்கும் பழமையானவனே! புதுமைக்கும் புதுமையானவனே! உன்னைத் தலைவனாகப் பெற்றோம். உன் சிறப்பு மிக்க அடியவர்களாகிய நாங்கள் உன்னை வணங்குவோம், உன் தொண்டர்களாகிய சிவனடியார்களின் திருவடிகளை வணங்குவோம்; அவர்களிடத்தில் தோழமை கொள்வோம். சிவனடியார்களே எங்களுக்கு கணவராவார்களாக வரவேண்டும். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்; எங்கள் பெருமானே! எங்களுக்கு இவ்வாறு கிடைக்குமாறு அருள் புரியவேண்டும். இதனால் நாங்கள் எந்த குறையும் இல்லாதவர்களாய் இருப்போம் என்று உளமாற மனம் உருகிப் பாடி பாவை நோன்பு நோற்கின்றனர்.

English summary
Margazhi has arrived. Recital of Thirupavai and Thiruvembavai has begun in the temples all over Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X