For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷார்ஜாவில் நடந்த வைரமுத்துவின் சிறுகதைகள் புத்தக அறிமுக விழா

By Siva
Google Oneindia Tamil News

ஷார்ஜா: ஷார்ஜா புத்தக கண்காட்சியில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய சிறுகதைகள் புத்தகம் அறிமுக விழா நடைபெற்றது.

ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தகத் திருவிழா தொடர்ந்து 34 ஆண்டுகளாக சர்வதேச அளவில் அனைத்துப் பதிப்பாளர்களும், படைப்பாளிகளும் கலந்து கொள்ளும் மிகப் பெரும் புத்தகக் கண்காட்சியாகும்.

இப்புத்தகத் திருவிழாவில் இந்த வருடம் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "வைரமுத்து சிறுகதைகள்" புத்தக அறிமுக விழா 13-11-2015 அன்று இரவு 9 மணியளவில் ஷார்ஜா எக்ஸ்போ சென்டர் மெயின் ஹாலில் நடைபெற்றது. ஷார்ஜா அரசின் சிறப்பு விருந்தினராகக் கவிப்பேரரசு வைரமுத்து இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார். 34 ஆண்டுகளில் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் முழு முதல் தமிழ் நிகழ்ச்சியாக நடைபெற்ற நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Vairamuthu's short story collection launched in Sharjah

அமீரக இந்தியத் தூதரகத்தின் கல்வி மற்றும் ஊடகத் துறை அதிகாரி திருமதி. சுமதி வாசுதேவன் நூலை அறிமுகப்படுத்தி உரையாற்ற, இ.டி.ஏ. அஸ்கான் ஸ்டார் குழும மூத்த செயல் இயக்குநர் திரு. அன்வர் பாஷா முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு நூலின் சிறப்புக்களைப் பற்றியும், கவிப் பேரரசு தமிழுக்காற்றி வரும் தூய தொண்டுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

எழுத்தாளரும், கவிஞருமான கீழக்கரை ஃபஜிலா ஆஸாத் வைரமுத்து சிறுகதைகள் நூலின் சிறப்பம்சங்கள் பற்றிப் பேசும் போது, "இது வைரமுத்துவின் சிறுகதைகள் அல்ல, அவர் தமிழுக்களித்துள்ள விதைகள்" என்றார்.

Vairamuthu's short story collection launched in Sharjah

ஏற்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து இத்தகைய அறிவு விழாக்களைத் தொடர்ந்து தொய்வில்லாமல் நடத்தி, இவ்விழாவில் தாய்த் தமிழ் மொழிக்கு உயர்ந்த அங்கீகாரம் வழங்கியுள்ள ஷார்ஜா மன்னர் மேன்மை தங்கிய ஷேக் சுல்தான் பின் முஹம்மத் அல் காஸிமி அவர்களுக்கு தமிழ்ப் படைப்பாளிகள் அனைவரின் சார்பாக நன்றியைத் தெரிவித்தார்.

கடல் கடந்தாலும் தமிழ் கடக்க மாட்டார்கள் தமிழர்கள் என்பதற்கு ஆயிரக்கணக்கில் இங்கே குடும்பம், குடும்பமாகக் கூடியுள்ள தமிழர்களே சான்று என்றும், தமிழ் ஓர் மொழியல்ல, அது ஓர் கலாச்சாரம், பண்பாடு மற்றும் நாகரீகம் ஆகும் என்றும் கூறினார்.

Vairamuthu's short story collection launched in Sharjah

கதைகள் என்பவை வாசிக்க மட்டும், ஆனால் நல்ல கதைகள் யோசிக்க வைக்கவும் செய்யும் என்றும், ஒன்பது மற்றும் பதிமூன்றாம் நூற்றாண்டுகளுக்கு மத்தியில் வாழ்ந்த அரபு மன்னர்கள் உலகெங்கிலுமுள்ள அறிவான நூல்கள் அனைத்தும் அரபு மொழியிலும் இருக்க வேண்டும் என்று "HOUSE OF WISDOM - ஞான வீடு" என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருந்ததையும், இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் மூலம், மங்காமல் அந்த மரபு இன்றும் தக்க வைக்கப்படுவதையும் எடுத்துரைத்தார்.

ஏற்புரைக்குப் பின் அரசியல், இலக்கியம், தன் சுயசரிதை, கதை பற்றிய திறனாய்வு, திரைப்படப் பாடல்களில் தனித் தமிழ் என்று பார்வையாளர்களின் பல்வேறு வகையான கேள்விகளுக்கு கவிப்பேரரசு சுருக்கமாகவும், சுவையாகவும் பதிலளித்தது நிகழ்ச்சியை மெருகேற்றியது.

Vairamuthu's short story collection launched in Sharjah

கவிப்பேரரசுவின் புத்தகங்களை வாங்கிய நூற்றுக் கணக்கான மக்கள் குடும்பங்களோடு வரிசையில் காத்து நின்று, புத்தகங்களில் அவர் கையொப்பம் பெற்றுக் கொண்டு, அவரோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டு சென்றதும், அனைவருக்கும் அயராது கையொப்பமிட்டுத் தந்தது மட்டுமல்லாமல், தனித்தனியே அவர்களோடு நேரம் ஒதுக்கி கவிப் பேரரசு புகைப்படம் எடுத்துக் கொண்டதும், நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய் அமைந்தது.

அபுதாபி இந்தியன் சோஷியல் சென்டர் முன்னாள் தலைவர் நடராஜன், துபாய் சமூக ஆர்வலரும் தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளருமாகிய அரிகேசவ நல்லூர் எஸ்.எஸ். மீரான், ஹாங்காங் முனைவர் அய்யூப், மீனா குமாரி பத்மநாபன், மோகன் பிள்ளை, ப்ரின்ஸ் என்ற இளவரசு, அமுதரசன், அல் அய்னிலிருந்து கீழக்கரை முபாரக் முஸ்தஃபா, அல் ரீம் குழும இயக்குநர் செய்யத் அபுதாஹிர், வசந்த பவன் ரவி, கொரடாச்சேரி ஜாஹிர் ஹுஸைன், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் கவிப்பேரரசு கையால் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

Vairamuthu's short story collection launched in Sharjah

இந்நிகழ்ச்சிக்கு அமீரகம் வாழ் அனைத்து தமிழ்ச்சங்கங்கள், ஊடகங்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆகியோருடன் அரிகேசவ நல்லூர் எஸ்.எஸ். மீரான் சிறப்பான ஒருங்கிணைப்பு செய்திருந்தார். வானொலி தொகுப்பாளர்கள் நடராஜன் மற்றும் சனா ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

விழா வெற்றிகரமாக அமைய ஊடக அனுசரணை செய்த ஸலாம் எஃப்.எம். நிறுவனத்தார், 89.4 எஃப்.எம். நிறுவனர் ராம், நிகழ்ச்சி தொகுப்பாளர் நாகா, தட்ஸ் தமிழ்.காம் நிறுவனத்தார் மற்றும் ஆசிரியர் கான், கீழக்கரை டைம்ஸ் இணையதள ஆசிரியர் மற்றும் அமீரக தினகரன் நிருபர் கீழக்கரை ஹமீது யாஸின் ஆகியோருக்கு விழா ஏற்பாட்டளர்கள் நன்றி தெரிவித்தனர். ஷார்ஜா புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப் வர்கீஸ் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்.

English summary
Lyricist Vairamuthu's short story book introduction function was held in Sharjah on november 13th. Vairamuthu himself graced the occasion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X