• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

நினைத்துப் பார்க்கிறேன்

By Staff
|

அவன் காசுதேடி வளைகுடா வந்தவன். காசு மட்டுமே வாழ்க்கை இல்லைதான். ஆனால் காசே இல்லாமல் வாழ்க்கை என்ற வார்த்தையைக் கூடஎவராலும் உச்சரிக்க முடியாதே. வளைகுடா கடலில் உப்பு அதிகம். இவன் போன்றவர்களின் கண்ணீரே காரணமாய் இருக்குமோ என்னவோ?

ஒருமாத விடுமுறை என்பதுதான், ஒரு முழு வருடத்திற்கும் இவன் கொள்ளும் ஒரே நிஜமான உறக்கம். அந்த உறக்கத்தின் கனவுகளாய் வந்தஎத்தனையோ இனிப்பான விஷயங்கள் பிறகெல்லாம் இவன் உயிரையே ஆக்கிரமிக்கும்.

தன் விடுமுறையை இரட்டிப்பாய் நீட்டித்து இம்முறை மணமுடித்த இவனுக்கு மோகம் முப்பது நாள் என்பது ஒரு தப்பான தகவல். பிரிவை நினைத்தே பிரியம்பீறிட்ட இவன், மோகம் முந்நூறு வருஷம் என்று சத்தியம் செய்கிறான்.

பிரிந்துவந்த அன்றே தன் புது மனைவிக்கு இவன் எழுதிய முதல் கடிதமாய் இக் கவிதை விரிகிறது

நெத்தியெங்கும் பூப்பூக்க

நெஞ்சமெங்கும் தேன்வடிய

முத்துமுத்துக் கண்மயங்க

முந்தானை தான்விலக

புத்தம்புதுச் சுகங்கோடி

பொங்கித்தினம் நீவடிக்க

அத்தனையும் என்னுயிரை

அதிசயமாய்த் தொட்டதடி

கொஞ்சல்மொழித் தேன்குடமே

கொத்துமல்லிப் பூச்சரமே

மிஞ்சியிட்ட முதல்நாளே

மிச்சமின்றித் தந்தவளே

கொஞ்சநஞ்சம் இருந்தாலும்

கொஞ்சிமெல்ல நானெடுக்க

பஞ்சணைக்கோ நொந்திருக்கும்

படுக்கையறைச் சிவந்திருக்கும்

மச்சான் என் மனம்போல

மல்லிகைப்பூக் கூந்தலுடன்

அச்சாக மயிலைப்போல்

அழகாகக் காலெடுத்து

உச்சிநிலா முகக்கனியில்

உதடுகளோ துடிதுடிக்க

பச்சைவனத் தென்றலெனப்

பக்கத்தில் வந்தாயே

என்னருகில் நீவந்தால்

என்னென்ன செய்வதென்று

எண்ணியவென் எண்ணங்களை

எப்போதோ மறந்துவிட்டு

எண்ணாத எதையோநான்

எப்படியோ துவக்கிவைக்க

என்னினிய பூங்கொடியே

எல்லாமும் நீ ரசித்தாய்

மன்மதனோ நானாக

மானேநீ ரதியாக

என்னென்ன சுகமுண்டோ

எல்லாமும் நாம்கண்டு

பொன்னாகப் பூவாகப்

பூத்தோமே சிரித்தோமே

இன்றுன்னைப் பிரிந்தவனாய்

இருக்கின்றேன் உயிரில்லை

மண்மீது பொழியாத

மழைமேகம் மேகமல்ல

தென்னையினைத் தழுவாத

தென்றலுமோர் தென்றலல்ல

கண்ணுக்குள் விரியாத

கனவும் ஓர் கனவல்ல

உன்னருகில் இல்லாவென்

உயிரும் ஓர் உயிரல்ல

கனவுகளில் வரச்சொல்லி

கடிதம் நான் எழுதுகின்றேன்

நினைவுகளில் உனையேந்தி

நெடுந்தூரம் நடக்கின்றேன்

இனிக்காத இவைபோன்ற

எத்தனையோ ஆறுதலால்

மனத்தீயைத் தணித்த வண்ணம்

மரணத்தைத் தவிர்க்கின்றேன்

ஈராறு மாதங்கள்

எப்படியோ ஓடிவிடும்

மறுகணமே பறந்துவந்து

மனைவியேயுன் கைகோர்த்து

சிறுகன்றைப் போல்துள்ளிச்

செவ்வானாய்ச் சிவந்திடுவேன்

கருவான நம்முயிரைக்

கைகளிலே ஏந்திநிற்பாய்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X