For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வென்றது நீதான்- பேரா. நெடுஞ்செழியன்

By Staff
Google Oneindia Tamil News

மண்ணுள மொழியும் நாடும்
மலர்ந்திடா முன்னம் எங்கள்
கண்ணுள மணியாய்த் தோன்றி
காட்சிகள் அறிவு நூல்கள்
விண்ணுள கதிரைப் போல
மேதினி ஒளிரும் வண்ணம்
எண்ணிலா வகைகள் தந்து
இயற்றமி ழனாய் வாழ்க !
கான்தரும் மூங்கில் தந்து
கவின்குழல் தன்னில் தோன்றும்
தேன்தரும் இனிமை அந்தச்
சீறியாழ்ப் பாணன் மீட்டும்
வான்தரும் அமிழ்தம் போல
வளர்ந்திடு பண்ணும், பாட்டும்
ஊன்தரும் உயிரில் ஒன்றி
ஓப்பிலா இசையும் ஆனாய் !
பாடலின் திறம் நல்ல
பண்களின் ஒழுங்கும் ஒன்றாய்க்
கூடலின் பயனைக் காட்டும்
குரலிசைச் சிறப்பும் தேர்ந்த
ஆடலாம் நாட்டி யத்தின்
அருங்கலை அனைத்தும் எங்கள்
நாடகத் தமிழாய் ஞால
நடப்பினை விரியச் செய்தாய் !

அளவைநூல் கொன்னு லென்னும்
அறிவுசால் துறைகள் கற்புக்
களவியல் வகைகள் காட்டும்
காதலின் ஒழுக்கம் நல்ல
உளவியல் வான நூல்கள்
உயர்ந்தநல் இலக்கணங்கள்
அளவிலா தமைந்து எம்மை
அறிவினில் உயரச் செய்தாய்.
ஆர்த்திடும் வீரர் கூடி
அயலவர் நடுங்கும் வண்ணம்
போர்த்திறம் காட்டும் எங்கள்
புறத்திணை புலவர் தங்கள்
நாத்திறம் காட்டிப் பாடும்
நலமிகு பாடாண் என்னும்
சீர்த்திறம் அனைத்தும் பெற்ற
செம்மொழி உலகில் ஏது?
பொருள் எனில் அணுவாம் ஒன்றில்
பொருந்துவ தாலே அஃதாய்ப்
பொருள் எனில் அகமாம் மற்றும்
போர்முறை நெறிகள் கூடம்
பொருள் என வழங்கும் என்றும்
பொருத்தமும் தொடர்பும் அற்றப்
பொருளிலாச் சொற்கள் இல்லை
புகன்றவர் உண்போல் யாரோ?
அறத்தொடு நிற்கும் எங்கள்
அகத்திணை மரபுக் கீடாய்ப்
புறத்துள மொழிகள் பெற்ற
புதுமைகள் ஏதும் உண்டோ?
சிறப்புடை எழுத்தும் சொல்லும்
சீர்மிகு பொருளும் என்றே
திறத்தினால் வகுத்த பாங்கு
தேடினும் கிடைக்கு மாமோ?
அறிவுடன் பொருந்தும் வாழ்க்கை
அறம்பொருள் இன்பம் என்னும்
செறிவுடை நெறிகள் காட்டும்
தேர்ந்தநல் முப்பால் மற்றும்
பொறிபுலன் கடந்த தூயன்
புகன்றதொல் காப்பி யத்தின்
நெறிகளுக் கீடாய் இந்த
நீள்நிலம் பெற்ற துண்டோ?

பிறமொழிக் கலப்பே இல்லாப்
பெற்றிமை குடும்பம் என்னும்
உறவுள மொழிகள் தோன்றும்
உயிர்ப்புள தன்மை ஓங்கும்
திறமுடை ஆற்றல் காலம்
சிதைத்திட இயலா நல்லச்
செறிவுடை வளமை காத்துச்
செம்மொழி ஆனாய் வாழ்க !
என்றும்நீ புதுமை மாறா
இளநலம்காட்ட லாலே
என்றுநீ பிறந்தாய் என்று
இன்னும்யாம் அறிந்தோ மில்லை !
இன்றுபோல் நேற்றுங் கூட
இனப்பகை இருந்த போதும்
வென்றது நீதான்

- பேரா. நெடுஞ்செழியன்([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X