• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெளனமாய் அழுகிறேன்!

By Staff
|

அலை ஓய்ந்தது- மன

அலைகள் ஓயவில்லை.

குடிக்க நீரின்றி அல்லல் பட்டோம்

நீர் குடித்ததால் இன்று அவதிப்பட்டோம்.

இப்பேரழிவை எண்ணிப் பார்க்க முடியவில்லை

இறந்தவர்களை எண்ணியும் பார்க்க முடியவில்லை.

Tsunamiசுனாமி- நீ என்ன எமனின் பினாமியா?

வலைவீசி மீன் பிடித்தோரை - பாச

வலைவீசி இழுத்து விட்டாயே

ராட்சத அலைகள் எங்கள் மனதை

ரண அலைகளாய் பாதித்து விட்டது.

ஊர்களை அழித்து விட்டது

வேரோடு சாய்த்து விட்டது.

மாதா கோயிலில் மனித சடலங்கள்

தொழப் போனவர்களையும் தொலைத்து விட்டது.

கடற்கரைக்கு உலா சென்றோரை

கல்லறைக்கு அனுப்பி விட்டது.

விடியலில் நடைபயின்றோரை

வீடுதிரும்பாமலே ஆக்கிவிட்டது.

வெளிநாட்டில் இருந்து கொண்டு

உள்ளுக்குள் கதறுகிறேன்

தொலைக்காட்சிக்குள் என்

துக்கக் கண்களைப் பதிக்கிறேன்.

வீதியெங்கும் சடலங்கள்- இது

விதி செய்த சடங்குகள்.

குழந்தையின் மரணத்தால் கதறும்

தாயின் துக்க சடலங்கள்

மணல் துடைத்து முகம் தேடும்

மரணக் கொடூரங்கள்.

உப்பு நீரில் உப்பிய பிணங்கள்

கட்டடங்கள் இடிப்பில மாட்டிய உடல்கள்

கடலோரம் ஒதுங்கிய கணக்கில்லா சவங்கள்

புதர்களுக்குள் சிக்கிப் பிய்ந்த உடல்கள்.

உருக்குலைந்த வாகனங்கள்

ஓடும் மிஞ்சா வீட்டின் தடயங்கள்

ஆடு மாடு மீனினங்கள்

மரம் செடிகள் பறவை இனங்கள்...

எத்தனை அழிவு எத்தனை பிழிவு...

தப்பிய மக்களின் துக்க ஓலங்கள்

இடிந்த வீட்டில் எத்தனை தேடல்கள்

புலம் பெயரும் மனிதக் கூட்டங்கள்

பின்னால் செல்லும் வளர்ப்புப் பிராணிகள்.

ஒற்றை சவக்குழியில் ஒருநூறு பிணங்கள்

அகற்றப்படாமல் ஆயிரம் பிணங்கள

போதும்.. போதும்... போதுமம்மா போதும்

புத்தம் சரணம் கச்சாமி

தொலைக்காட்சியில் தான் கண்கள்

தொக்கி நிற்கின்றன

தெரிந்தவர்கள் முகம் - அதில்

தெரிந்துவிடக் கூடாதென்று

தெரியாத கடவுளையும் வேண்டுகிறேன்.

ஓடி ஓடி உதவுகின்ற

கரங்களையெல்லாம் வணங்குகின்றேன்

கட்சிப் பூசலின்றி ஜாதி பேதமின்றி

சேவை செய்யும் என்தமிழரைப் போற்றுகின்றேன்.

பிணத்தில் நகை தேடுபவனையும்

இடிந்த வீட்டில் பணம் தேடுபவனையும் மன்னிக்கின்றேன்

கண்டிப்பாய் அவனும் ஒரிரு பிணங்களையாவது

அகற்றியிருப்பான் - மானுடன் இன்னும் மரிக்கவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் தெரியவில்லை

ஒட்டுமொத்த குடும்பமும் அழிந்துவிட்டதென

ஒற்றையாய் நின்று ஓலமிடும் - இங்குள்ள என்

இந்திய இலங்கை சகோதரர்களை ஆறுதல் செய்ய

வார்த்தைகளுக்கு நான் யாரிடம் கையேந்துவது?

எல்லோரும் ஓர் நாள் இறப்பது உலக நியதிதான்

எல்லாரும் ஒரே நாளில் இறப்பது என்ன நியதி?

இறந்தவர்களுக்கு அழுவதா? இருப்பவர்களை தேற்றுவதா?

மனம் பொறுக்காமல் மெளனமாய் அழுகின்றேன்.

- யாதுமானவள், குவைத்.(li.pachaiappan@pwclogistics.com)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X