திருப்பதி ஏழுமலையானுக்கு ஆனி வார ஆஸ்தானம்... பட்டு வஸ்திரம் மங்கல பொருட்கள் பரிசளித்த ஸ்ரீரங்கநாதர்
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் எடுத்துச் செல்லப்பட்டது.
திருச்சி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இருந்து பட்டு வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
முகலாய மன்னர்களின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம் அவர்களிடம் கிடைக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி 1ஆம் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை நேற்று எடுத்து செல்லப்பட்டது. முகலாய மன்னர்களின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம் அவர்களிடம் கிடைக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி 1ஆம் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அனைத்தும் கோவில் ரங்கவிலாஸ் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் மங்கல பொருட்கள் அடங்கிய தட்டினை யானை மீது வைத்தும், மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தனர்.
இதையடுத்து வஸ்திர மரியாதைகளுடன் இன்று காலை புறப்பட்டு திருப்பதிக்கு எடுத்து சென்றார்கள். இவர்கள் ஆடி முதல் தேதியன்று திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்து விட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள். இந்தநிகழ்ச்சியில் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது இதனையொட்டி மூலிகைகளால் கோவிலை சுத்தப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து உற்சவர் சிலைகளும் தற்காலிகமாக தண்ணீர் புகா வண்ணம் மூடப்பட்டது. பின்னர் ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமப்பூ போன்ற மூலிகை பொருட்களுடன், புனித வாசனை திரவிய நீர் கொடிமரம், மேற்கூரை, சன்னதிகள் உள்பட, கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடைபெற வசதியாக அனைத்து பூஜைகளும் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்த நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சனம் முடிந்தபின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications