August Matha Palan 2025: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கிடைக்கும் பலன்கள்.. முழு விவரம் இதோ
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியில் சுக்கிரன், குரு இணைவால் திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் தேடி வரும். இனிமையான பயணம், மகிழ்ச்சியான பயணங்கள் அமையும். பெயர், புகழ், அங்கீகாரம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வேலை ஒப்பந்தம், வியாபார ஒப்பந்தம், வெளிநாடு யோகம், மல்டிநேஷனல் நிறுவனத்தில் வேலை போன்றவை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் கவனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் ஏதாவதொரு பிரிவை சந்திப்பீர்கள். பண வரவு அபரிமிதமாக இருந்தாலும் ஏதாவதொரு பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் பெரிய யோகத்தைக் கொடுக்கும். புதிய கார், சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் நீங்கும்.
பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், வேலைவாய்ப்பு கிடைக்கும். தீய நண்பர்களின் பழக்க வழக்கம் ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. காதலில் ஏமாறுவதற்கான வாய்ப்புள்ளது. நல்ல வியாபாரம், தொழில் யோகம் உண்டாகும். பெண்களுக்கு பெயர், புகழ் கூடும் மாதமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு நிறைய விதமான லாபங்கள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். மூத்த சகோதரனுக்கு உதவிகள் செய்வீர்கள். கணவன், மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. யாரோ ஒருவர் தூண்டிவிடும் வாய்ப்புள்ளதால் மிகவும் கவனம் தேவை. பண வரவு உண்டாகும். காதல் திருமணங்கள் நடக்கும் யோகம் உள்ளது.
மாணவர்களுக்கு தடைகள் வரும் என்பதால் குலதெய்வத்தை வழிபடுவது நல்லது. உங்களுக்கு கெடுதல் நினைப்பவர்களால் நன்மைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் கவனம் தேவை. பயணங்களின்போது பாதுகாப்பாக இருப்பது நல்லது. அரசாங்க வேலை, அதிகார வேலை கிடைக்கும் யோகம் உண்டு. மூத்த சகோதரர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
பூர்வீக சொத்துகள் தொடர்பான விஷயங்களில் யோகம் ஏற்படும். சிலருக்கு திடீரென வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும். வெளிமாநிலங்களில் குடிபெயரக்கூடிய அமைப்பு, வெளிமாநிலங்களில் வேலைக்குச் செல்லும் அமைப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. திருச்செந்தூர் முருகனை வழிபடுவது மாற்றங்களையும், ஏற்றங்களையும் தரும்.
தனுசு
தனுசு ராசியினர் புதிதாக நட்பாக பழகுபவர்களிடம் கவனம் தேவை. வியாபார ரகசியங்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சனி வக்கிரமாக இருப்பதால் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பட்டாவது வாங்குவீர்கள். அசையும், அசையா சொத்து வாங்கும் யோகம் உண்டு. பயணங்களின் போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. விலையுயர்ந்த பொருள்களை வீட்டில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. திருடு போவதற்கான வாய்ப்புள்ளது.
வெளிநாட்டில் வசித்திருப்பவர்கள் சொந்த வீடு வாங்குவது உகந்தது இல்லை. புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். நல்ல பணியாளர்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. திருமணத்துக்கான வரன்கள் கூடி வரும். வரன்கள் விஷயத்தில் கிடைக்கிற வரனை அவசரமாக தேர்ந்தெடுக்காமல் தீர விசாரித்து திருமண பேச்சுவார்த்தையை தொடங்குவது நல்லது.
சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். அரசு அலுவலர்கள், அதிகாரிகள் பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. பதவி உயர்வு கிடைக்கும் ஆனால் இடமாற்றமும் சேர்ந்து வருவதற்கான வாய்ப்புள்ளது. பலருக்கு வேலைமாற்றம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications