முதல்வர் மு.க ஸ்டாலின் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் - எதிரிகளை வெல்வாரா
முதல்வர் மு.க ஸ்டாலின் ஜாதகத்தில் ராஜயோக அமைப்பும், பவுர்ணமி யோகமும் கூடியிருப்பதாலேயே அவரால் அபரிமிதமான வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர முடிந்துள்ளது.
சென்னை: அரசாளும் யோகம் அரசியல்வாதிகள் அத்தனைபேருக்கும் கிடைத்து விடாது. அனைவராலும் அரசியல் கட்சிக்குத் தலைவராகி விட முடியாது. மிகப்பெரிய கட்சிக்கு தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் உள்ள மு.க.ஸ்டாலின் ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன. அந்த யோகங்களே அவருக்கு அரசாளும் யோகத்தை கொடுத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் எந்த வீட்டில் அமர்ந்துள்ளன. எந்தெந்த கிரகங்களின் பார்வைகள் யோக அமைப்பை கொடுத்துள்ளன என்று பார்க்கலாம்.
முதல்வர் ஸ்டாலின் சிம்ம லக்னம், சிம்ம ராசியில் பிறந்துள்ளார். லக்னத்திற்கு மூன்றாம் வீடான துலா ராசியில் சனி உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். ஆறாம் வீடான மகர ராசியில் ராகு, ஏழாம் வீடான கும்ப ராசியில் சூரியன், எட்டாம் வீடான மீன ராசியில் புதன் செவ்வாய், ஒன்பதாம் வீடான மேஷ ராசியில் குரு சுக்கிரன், கடக ராசியான 12ஆம் வீட்டில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
மு.க ஸ்டாலின் மாசி மகத்திற்கு அடுத்த நாளில் பூரம் நட்சத்திரத்தில் பிறந்ததே சிறப்பான யோகம்தான். சந்திரன் சிம்ம ராசியில் அமர்ந்து லக்னாதிபதி சூரியனை பார்வையிடுகிறார். சிம்ம ராசியில் உள்ள சந்திரனுக்கு குருவின் பார்வை கிடைக்கிறது.

ஆட்சி அதிகாரம் தரும் யோகம்
சூரியனும் சந்திரனும் நேரெதிர் கேந்திரங்களில் சஞ்சரிக்க ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டுள்ளனர்.
சிம்ம லக்னம் லக்னத்தில் சந்திரன், நேர் எதிரே சூரியன் பவுர்ணமி யோகம் பெற்றிருக்கிறார் மு.க ஸ்டாலின். அரசியல், அதிகாரம் மிக்கவர்கள் பவுர்ணமி யோகத்தில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள். மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார் ஸ்டாலின். பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் பிறந்துள்ளார்.
சிம்ம லக்னம், லக்னாதிபதி சூரியன் சுபத்துவம் பெற்றுள்ளது சிறப்பு. லக்னாதிபதி சுபத்துவம் பெற்றிருக்க, லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த சனிபகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இதுவும் சிறப்பான அமைப்புதான். குரு லக்னத்தை பார்வையிடுவது மேலும் சிறப்பு.

கிரகங்களின் சஞ்சாரம்
சுக்கிரனும் குருவும் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுபத்துவம் பெற்று சஞ்சரிக்கின்றனர். அப்பாவினால் அரசியல் யோகம் கிடைத்தது. புதன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். சந்திரனுக்கு எட்டில் புதன் பயணித்தால் அந்த நீச்சம் பெற்ற நிலை அடிபட்டு விடுகிறது. தசாநாதன் சனி மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். குரு, சுக்கிரன் பார்வை உச்சம் பெற்ற சனிபகவானுக்கு கிடைத்துள்ளது. ஆறில் உள்ள ராகு பகவான் எதிரிகள் வெல்லும் அமைப்பை கொடுத்துள்ளது. ஏழாம் அதிபதியும் உச்சம் பெற்றுள்ளார். அற்புதமான திருமண வாழ்க்கை அமைந்துள்ளது.

குரு கொடுத்த பதவிகள்
முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்ததில் இருந்தே உயர்நிலையில்தான் இருந்திருக்கிறார். இளம் வயதிலேயே அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர் ஸ்டாலின். சுக்கிர திசையில் பிறந்த ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு திசைகள் வரிசையாக நடைபெற்றுள்ளன. அவருக்கு குரு திசையில் பதவிகள் தேடி வந்தன. 1996ஆம் ஆண்டில் சென்னை மேயராக தேர்வானார். 2009ஆம் ஆண்டில் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.

கட்சித்தலைவர் தமிழக முதல்வர்
சிம்ம லக்னத்திற்கு சனி தசை ஆகாது. மு.க ஸ்டாலினுக்கு சனி திசை ஆரம்பித்ததில் இருந்தே சோதனை காலம்தான். 2011, 2016ஆம் ஆண்டில் மு.க ஸ்டாலின் அதிகாரத்தில் அமர வாய்ப்பு இல்லாமல் போனது. சனி உச்சத்தில் இருந்தாலும் அவரால் முதல்வர் என்ற அதிகாரத்திற்கு வர முடியாமல் உள்ளது. இன்றைக்கு முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். கட்சியிலும் தலைவர் பதவி ஆட்சியிலும் முதல்வர் பதவியிலும் அமர்ந்துள்ளார். சனி தசை சூரிய புத்தி அமைப்பில் தற்போது முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார். சிவராஜயோக அமைப்பு கூடி வந்துள்ளது.

பதவி தரும் யோகங்கள்
பத்தாம் அதிபதி சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் சுப கிரகம் குரு உடன் இணைந்து பயணிப்பதால் வெற்றிகள் தேடி வந்துள்ளது. மிக உயர்நிலை ஜாதக அமைப்பு கொண்ட மு.க ஸ்டாலின் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் அமைந்துள்ளன என்று பார்க்கலாம். ஸ்டாலின் ஜாதகத்தில் மகா பாக்கிய யோகம் அமைந்துள்ளது. இந்த யோகம் உடையவர்கள் பெரும் பாக்கியசாலிகள். ஒரு நாட்டையோ அல்லது ஒரு பகுதியையோ அல்லது ஒரு நிர்வாகத்தையோ நடத்தும் யோகம் உண்டாகிறது. செல்வம் செல்வாக்கு அதிகம் இருக்கும்.

புகழ்,செல்வம்,செல்வாக்கு
வேசி யோகம், குரு சந்திர யோகம், பரிவர்த்தனை யோகம், அஷ்டலட்சுமி யோகம், முக்தி யோகம், செளரிய யோகம், ஆன்மீக யோகம் ஆகிய யோகங்கள் அமையப்பெற்றுள்ளது. இந்த யோகங்களால் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக இருப்பார். உயர் கல்வி, நீண்ட ஆயுள், நிலையான புகழ், மக்கள் மத்தியில் சாதனை செய்பவராகவும் இருப்பர். நல்ல வாழ்க்கைத்துணை நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.
சகல வசதிகளுடன் பலரும் போற்றும் வாழ்க்கை கிடைத்துள்ளது. குருவும், சனியும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேராக பார்த்துக்கொள்வதும் சிறப்பான யோகம்தான். இந்த யோகங்கள் எல்லாம் இணைந்து முதல்வராகும் யோகத்தை மு.க ஸ்டாலினுக்கு கொடுத்துள்ளன.

எதிரிகளே நண்பர்களாவர்
சில மாதங்கள் வரை எதிரிகளாக தூற்றியவர்கள் இன்றைக்கு நண்பர்களாக நாடி வருகின்றனர். ஸ்டாலின் ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் உள்ள ராகு எதிரிகளை வெல்லும் தன்மையை கொடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டசபைத் தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ள ஸ்டாலின் இனி வரப்போகும் தேர்தலிலும் வெற்றிபெறக் கூடிய தசாபுத்தி அமைப்புகளே கூடி வந்துள்ளது.












Click it and Unblock the Notifications