மகாளய பட்ச காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்கள் - மறக்காமல் அன்னதானம் கொடுங்கள்
பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர். புரட்டாசி மாதம், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே மஹாளய பட்சமாகும். இன்று முதல் மஹாளய பட்ச காலம் ஆரம்பமாகிறது.
மதுரை: மஹாளய பட்ச காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது.நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த அவர்களுக்கும், முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பணமுறை அமைந்துள்ளது.
பித்ருக்களை நாம் அவமதித்தால் அல்லது அவர்களை உதாசீனம் செய்தால் அவர்கள் நம்மை சபித்து விடுவார்கள் என்பதும், ஆதனால் நாம் குடும்ப வாழ்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பதும் இந்துகளின் ஐதீகம்.

தென்புலத்தார் என்போர் இறந்த எமது மூதாதையினராவர். அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் ஆசி நம்மை வாழவைக்கும் என்றும், அவர்களை வாழ்த்தி அவர்களின் ஆசியைப் பெறுவது மானிடனாகப் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நமது கடமை என்றும் வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
மானிட வாழ்க்கையில் மக்கள் செல்வம் முக்கியமானதாகும். பிள்ளைப் பாக்கியம் இல்லாத குடும்ப வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகின்றது. அதனால் விவாகமாகியும் அதிக நாட்களுக்கு பிள்ளைச் செல்வம் இல்லாதவர்களும், நோயுள்ள பிள்ளைகளைப் பெற்றவர்களும் ஜோதிடரை நாடிச் செல்வது வழக்கம். பித்ரு தோஷம் இருந்தால் அது பிள்ளைகளைப் பாதிக்கும் என்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தானம் செய்தால் குறைபாடு நீங்கி பிள்ளைச் செல்வம் கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் சொல்வார்கள்.
இந்த பித்ரு தோஷமானது நாம் முற்பிறப்பிலோ அல்லது இப்பிறப்பிலோ நம்மை அறியாது பித்ருக்களை அவமதித்தமையால் ஏற்பட்டவையே ஆகும். அவ்வாறான குறைபாடுகள் வாழ்க்கையில் ஏற்படாதிருக்கவே பித்ரு வழிபாடு செய்யப்படுகின்றது.
புரட்டாசி மாதம் பித்ருக்களுக்கு உரிய மாதமாக கணிக்கப்பெற்றுள்ளது. எனவே அந்தக் காலத்தில் மகாளய-பித்ரு வழிபாட்டுகள் செய்து பித்ருக்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளை பெறுகின்றோம்.
இறந்த நமது முன்னோர்களுக்காகச் செய்யப்படுவது பிதிர் வழிபாடு.
இந்த மகாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பது ஐதீகம். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ தர்ப்பணம் அளிக்க
வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அதை பெற்றுக்கொள்ளும் முன்னோர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள்.
தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் திதி செய்யாதவர் கூட, மறக்காமல் மகாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
வசிஷ்டமகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன்,அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மகாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். மகாளய பட்ச காலத்தில் எல்லா நாட்களிலும் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், வயதானவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும். முழுப்பலன்களைப் பெறுவார்கள் என்கின்றனர் ஜோதிடர்கள். இந்த ஆண்டு மகாபரணி புரட்டாசி 8ஆம் தேதியன்று வருவதால் அன்றைய தினம் மறக்காமல் திதி தர்ப்பணம் தர வேண்டும்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமானபூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமானபூஜைகளைச் செய்ய வேண்டும்.
மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. ஆகவே தவறாது சிராத்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும். மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள், பலகாலமாக பித்ரு ஆராதனைகளைச் செய்யாத பாவத்துக்கு ஆளானவர்கள் ராமேஸ்வரம் புண்ணியத் தலத்துக்குச் சென்று தில ஹோமம் செய்வது மிகவும் அவசியம். இந்த தில ஹோமம் வேதம் அறிந்த ஆச்சார்யர்களால்தான் செய்ய வேண்டும் என்பது முக்கியம்.
திலம் என்றால் எள் என்று அர்த்தம்.வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம். தில ஹோமம் எனப்படுவது பச்சரியும் எள்ளும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களைத் தரும். திருமண தடைகள் நீங்கும், கடன் தொல்லைகள் தீரும்.
மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்தில் இருந்து நம்மைத் தேடி வரும் முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து அவர்களின் பசியைப் போக்குவதோடு பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கு உணவு கொடுப்பதனால் நம்முடைய பல தலைமுறைக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
வாழ்கையில் நாம் மனிதபிறவியில் செய்த பாவங்கள் பல அவற்றில் பெரிய பாவம் என்னவென்றால் அது நாம் நம் முன்னோர்களுக்கு செய்யத் தவறிய கடமைகள், அப்படிப்பட்டக் கடமைகளை செய்யத்தவறியதன் காரணமாக மீண்டும் பிறவியெடுத்து இந்த பிறவியில் நம் தாய் தந்தையருக்கும் நம் தாத்தா பாட்டிகளுக்கு செய்யும் கடமைகளை சிறப்பாக செய்து முன்னோர்களுக்கு தவறாது சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்வதனால் நாம் நமது பிதுர் தோஷம் என்னும் நீத்தார் கடன் தீர்த்தல் ஆகும். மகாளய பட்சம் என்னும் காலத்தில் நம்மை காண வரும் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெறுவோம்.












Click it and Unblock the Notifications