ஆனி திருமஞ்சனம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்.. பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி தேரோட்டம் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். ஆனி திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாளைய தினம் மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.

நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு முறை திருமஞ்சனம் நிகழ்த்தப்படுகிறது. சித்திரை மாத திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாத திருவாதிரை ஆகிய நாட்களில் நிகழ்த்தப்பெறும் திருமஞ்சனங்கள் நடசத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுவன. மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசியில் திருமஞ்சனம் நடக்கும்.

Aani Thirumanjanam is on 26 June, 2023 In Chidambaram, Cuddalore Distict

ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. இவர் ஆதிசேஷனின் அம்சம். இவ்விழா சிதம்பரத்தில் பத்துநாட்கள் சிறப்பாக நடக்கும். அதில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது. தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றம் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் மேள தாளம் முழங்கிட வேத மந்திரங்கள் ஓதிட, தேவாரம், திருவாசகம் பாடிட உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர், கோவில் கொடி மரத்தில் கொடியேற்றனார். இதனைத் தொடர்ந்து தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.

விழாவின் 5வது நாள் உற்சவமான தெருவடைச்சான் உற்சவம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. நேற்றைய தினம் தங்க ரதத்தில் பிச்சாடனர் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேளதாளம் முழங்கிட, வேத மந்திரங்கள் ஓதிட, தனித்தனி தேர்களில் இன்று அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டன.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என கோஷங்களை எழுப்பியவாறு வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இன்று மாலை கீழவீதி தேர்நிலையை அடையும். நான்கு வீதிகளிலும் மண்டகபடிதாரர்கள் சுவாமிகளுக்கு சிறப்பு படையல் செய்தனர்.

Aani Thirumanjanam is on 26 June, 2023 In Chidambaram, Cuddalore Distict

தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணி மேற்கொண்டனர். சிவனடியார்கள் சிவ நடனம் ஆடியபடி சென்றனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனையை நிகழ்த்திச் சென்றனர். பெண்கள் கும்மியடித்து சென்றனர். திருவிளக்கு முன்பு சிவ பக்தர்கள் சிவ வாத்தியங்களை முழங்கி நடனமாடி சென்றனர்.

அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்களும் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக ஒன்றன்பின் ஒன்றாக இன்று மாலை கீழவீதி தேர்நிலையை அடைந்தன. ஆடி அசைந்து வந்த திருத்தேர்தகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு நடராஜரும் சிவகாமியம்மையும் ராஜசபை மண்டபத்தில் தங்குவார்கள். ஜூன் 26ஆம் தேதி அதிகாலையில் திருமஞ்சனம் நடைபெறும். அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் இருவரும் ஆனந்தத் தாண்டவம் ஆடியபடி ஞானசபையான சிற்சபையில் எழுந்தருளுவார்கள். அங்கு கடாபிஷேகம் நடைபெறும். நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை விடையாற்றி உற்சவம் முடிந்தபின் கொடியிறக்கத்துடன் விழா சிறப்பாக நிறைவடையும். தேரோட்டம் நிகழ்வில் பங்கேற்கவும் ஆனி திருமஞ்சனத்தை காணவும் பல்லாயிரக்கணக்கானோர் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர். தேரோட்டத்தையொட்டி, கடலூர் எஸ்.பி., தலைமையில் 1,160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+