வாஸ்து தோஷம் நீங்கி சந்தோஷம் பெருகனுமா? பிருந்தாவன துவாதசியில் துளசி பூஜை செய்யுங்கள்!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: நாளை பிருந்தாவன துவாதசி எனப்படும் துளசிமடதுவாதசி அனுஷ்டிக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவின் அம்சம் நிறைந்துள்ள துளசிச் செடி, விஷ்ணுவின் மனைவி. இவளுக்கு, பிருந்தா என மற்றொரு பெயரும் உண்டு. பிருந்தா, கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானவள். பிருந்தையாகிய துளசிதேவி, மகாவிஷ்ணுவை மணந்து கொண்ட நாள் ஐப்பசி மாத சுக்லபட்ச துவாதசி திதி. ஆகவேதான், அன்றைய தினத்துக்கு 'ப்ருந்தாவன துவாதசி ' என்று பெயர். எந்த ஒரு பொருளைத் தானம் செய்யும் போதும், அந்தப் பொருளுடன் துளசியையும் சேர்த்து தானம் செய்வதால், கொடுக்கும் பொருளின் அளவும் மதிப்பும் கூடுகிறது என்கிறது சாஸ்திரம்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசி தேவிக்கும் திருமணம் நடந்த தினமாக கொண்டாடப்படுகிறது. ஆந்திரா,கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இந்தப் பண்டிகை மிக விமரிசையாக நடைபெறுகிறது. குறிப்பாக, கர்நாடகாவில், 'சிக்க தீபாவளி(சின்ன தீபாவளி) என்றே கூறுகின்றனர். வீடெங்கும் விளக்குகள் ஏற்றி, வாணவேடிக்கைகளுடன் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.

விஷ்ணு புராணம் மற்றும் தேவி பாகவதம் கூறும் துளசியின் கதை:

விஷ்ணு புராணம் மற்றும் தேவி பாகவதம் கூறும் துளசியின் கதை:

தர்மத்துவஜன் என்னும் அரசன், மாதவி என்னும் அரசகுமாரியை மணந்தான். அவனுக்கு, அவன் புண்ணிய பலன்களின் பயனாக, கார்த்திகை மாதம், பௌர்ணமியுடன் கூடிய வெள்ளிக்கிழமையன்று, ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் அம்சமாக, ஒரு பெண் குழந்தை பிறந்தது. அழகே உருவான அந்தக் குழந்தைக்கு 'துளசி' என்று பெயரிட்டனர்.

துளசி, பத்ரிவனம் சென்று, ஸ்ரீமந் நாராயணனையே கணவனாக அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு தவம் செய்யலானாள். ஒரு காலில் நின்றபடி, இருபதினாயிரம் வருஷம் கடும் தவம் செய்தாள். அக்காலத்தில், மனிதர்களுக்கு ஆயுட்காலம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது . பழங்களையும் நீரையும் மட்டும் அருந்தி முப்பதினாயிரம் வருஷங்களும், இலைகள் மட்டுமே சாப்பிட்டு நாற்பதினாயிரம் வருஷங்களும், காற்றையே உணவாகக் கொண்டு பத்தாயிரம் வருஷங்களும் தவம் செய்தாள்.

பிரம்மன் அவள் தவத்துக்கு மெச்சி, அவள் முன் தோன்றினார்.

பிரம்மன் அவள் தவத்துக்கு மெச்சி, அவள் முன் தோன்றினார்.

துளசி பிரம்மாவிடம், "நான் சென்ற பிறவியில், கோலோகத்தில், கோபிகையாய் இருந்தேன். ஸ்ரீ கிருஷ்ணரது பிரியத்துக்கு உகந்த மனைவியாகி இருந்தேன். அதனால், ராதை என் மீது கோபம் கொண்டு, பூவுலகில், மானிடப்பெண்ணாக பிறக்குமாறு சபித்து விட்டாள். ஆனால் என் நிலை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணர், என் மீது இரங்கி, பிரம்மதேவனின் அனுக்கிரகத்தால், அவருடைய அம்சமான கணவனையே அடைவேன் என்று அருளினார். ஆகவே, ஸ்ரீமந் நாராயணனையே நான் கணவனாக அடைய அருளவேண்டும்" என்று வேண்டிக்கொண்டாள்.

பிரம்மாவும், "துளசி, ஸ்ரீ கிருஷ்ணருடைய மேனியிலிருந்து உண்டான, சுதர்மன் என்ற கோபாலன், உன்னை மணக்க வேண்டுமென்று விரும்பினான். அவனும், ராதையால் சபிக்கப்பட்டு, பூலோகத்தில், மனுவின் வம்சத்தில், 'சங்கசூடன்' என்ற பெயருடன் பிறந்திருக்கிறான். அவனை நீ மணப்பாய். பின்னர், நீ விரும்பியவாறு, ஸ்ரீமந் நாராயணனையே அடைவாய். நீ செடியாகி, எல்லா புஷ்பங்களிலும் சிறந்தவளாகவும், விஷ்ணுவுக்கு பிரியமானவளாகவும் இருக்கப்போகிறாய். பிருந்தாவனத்தில் பிருந்தாவனி என்ற பெயருடன் விளங்கப்போகும் உன்னைக் கொண்டு, அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் பூஜிப்பார்கள்" என்று வரமருளினார். துளசி, ராதையிடம் தனக்குள்ள பயத்தைப் போக்க வேண்டுமென கேட்க, பிரம்மனும், பதினாறு அக்ஷரங்கள்(எழுத்துக்கள்) உள்ள ராதிகா மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.

துளசி, அந்த மந்திரத்தை தியானித்துக் கொண்டு இருக்கும் போது, ஜைகிஷவ்யர் என்பவரிடமிருந்து உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தை புஷ்கர க்ஷேத்திரத்தில் தியானித்து, மந்திர சித்தி பெற்ற சங்கசூடன், பிரம்மனுடைய கட்டளையின் படி, அங்கு வந்தான். துளசி தனித்திருப்பதைப் பார்த்து, அவள் யார் என்று வினவினான். துளசியும், தான் வந்திருக்கும் விவரத்தைக் கூற, சங்கசூடன் தான் யார் என்பதையும், பிரம்மனுடைய கட்டளையின் பேரிலேயே அவளைத் தேடி வந்திருக்கும் விவரத்தைக் கூறி, தன்னை மணக்குமாறு வேண்டினான். துளசியும் சம்மதிக்கவே, காந்தர்வ முறையில் அவளை மணந்து கொண்டான்.

துளசி மிகச் சிறந்த பதிவிரதையாக விளங்கினாள். அவள் பதிவிரதா சக்தியானால், எங்கு சென்றாலும் சங்கசூடனுக்கு வெற்றியே கிட்டியது. கடும் தவத்தின் பயனாக, துளசியின் பதிவிரதா தன்மைக்கு எப்போது பங்கம் நேரிடுமோ அப்போதே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டுமென வரமும் பெற்றான். அவன் கழுத்தில் அவனைக் காக்கும் மந்திரக் கவசம் மின்னியது.

மூவுலகங்களையும் வென்றான் சங்கசூடன். தேவர்களை துரத்தியடித்தான். அவனால் துரத்தப்பட்ட தேவர்கள், வைகுண்டம் சென்று ஸ்ரீமந் நாராயணனைச் சரணடைந்தனர். அவர்,' சங்கசூடனை வெல்லக் கூடியவர், சங்கரர் ஒருவரே, ஆகவே, நீங்கள் அவரைச் சரணடையுங்கள். தேவர்களின் நன்மைக்காக, நான் சங்கசூடனின் பத்தினியின் பதிவிரதா தன்மைக்கு பங்கம் ஏற்படச் செய்வேன்' என்று வாக்களித்தார்.

தேவர்கள் சந்திரபாகா நதிக்கரைக்குச் சென்று, சிவனாரைத் துதித்தார்கள். சிவனார் அவர்கள் முன் தோன்றினார். சங்கசூடனுடன் போர்செய்ய ஒப்புக் கொண்டார். சித்திரரதன் என்ற கந்தர்வனை அழைத்து, சங்கசூடனிடம் தான் யுத்தம் செய்ய வருவதாகத் தெரிவிக்குமாறு பணித்தார். சித்திரரதன், பன்னிரண்டு வாசல்களை உடையதும், மிகுந்த கட்டுக்காவல் உடையதுமான சங்கசூடனது வாசஸ்தலத்தை அடைந்தான். அங்கு முதல் வாசலில் காவல் செய்து கொண்டிருந்த பிங்களாக்ஷன் என்பவனிடம், தான் வந்திருக்கும் விவரத்தைக் கூற, அவனும், சித்திரரதனை சங்கசூடனிடம் அழைத்துச் சென்றான்.

தேவர்களின் அரசைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு அவனிடம் சித்திரரதன் கூற, சங்கசூடன் மறுத்து, மறுநாள், சந்திரபாகா நதி தீரத்தில், சிவனாரை யுத்தத்தில் சந்திப்பதாகக் கூறி அனுப்பினான். சிவனாருடன் சேர்ந்து யுத்தம் செய்வதற்காக, சிவனாரின் கணங்களும், அஷ்டபைவரவர்களும், ஏகாதச ருத்திரர்களும்,அஷ்ட வசுக்களும், துவாதச ஆதித்யர்களும், சூரிய சந்திரரும், தங்கள் வீரர்களுடன் வந்தனர். மூன்று கோடி யோகினிகளுடன், மஹாகாளி பிரத்தியக்ஷமானாள். பூதப்பிரேத பைசாசங்களும், சிவனாருடன் சேர்ந்து போரிட வந்தன.

சங்கசூடன், தான் போரிடப் போவதைப் பற்றித் தெரிவித்தவுடன், துளசி, அதிர்ந்தாள். தான் விடிகாலையில், கெட்ட கனவு ஒன்று கண்டதாகக் கூறி, போருக்குப் போக வேண்டாமென கணவனைத் தடுத்தாள். சங்கசூடன், 'சந்தோஷமும் துக்கமும் பிரிவும் இணைவும், காலத்தினால் நிகழ்கின்றன. இந்தப் போரினால், நமக்குள் பிரிவு வந்துவிடுமோ என்று நீ பயப்படுவது அர்த்தமற்றது. அவ்வாறு நேர வேண்டுமென விதி இருக்குமானால் அதை யார் தடுத்துவிட முடியும்?. விதியை மாற்ற யாராலும் முடியாது. நடப்பது நடக்கட்டும் என்று நம் வேலைகளை நாம் கவனிப்பது ஒன்றே விவேகமான செயல் ஆகும்' என்று அவளைத் தேற்றினான்.

விடிந்ததும் தன் காலைக்கடன்களை முடித்து, தான தர்மங்கள் செய்த பின், தன் மகனை அரியணையில் ஏற்றி, ஆட்சியை ஒப்படைத்து விட்டு,

யுத்தத்திற்கு புறப்பட்டான். சந்திரபாகா நதிக்கரையில், சிவனார் தன் கணங்களுடன் யுத்தத்திற்கு காத்திருந்தார். அவரைக் கண்டதும், சங்கசூடன், தன் ரதத்திலிருந்து இறங்கி அவரைப் பணிந்தான்.

சிவனார், அவனிடம்,' நீ மிகுந்த பலமும், மந்திரசித்திகளும் உள்ளவன். தேவர்களின் அரசால் உனக்கு என்ன வந்து விடப்போகிறது. அதை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடு' என்று அறிவுரை கூறினார். அதற்கு சங்கசூடன், 'தேவர்கள் அசுரர்களுக்கு எதிராகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்குப் பகையாளிகள். ஆனால், தங்களிடம் எப்போதும் எங்களுக்கு பகை இல்லை. நாங்கள் வேண்டும் போதெல்லாம் வரங்களையே அளித்து வந்திருக்கிறீர்கள். ஆனால் இப்போதோ, தேவர்களின் சார்பாக தாங்கள் யுத்தத்திற்கு அழைத்திருக்கிறீர்கள். அவ்வாறு அழைத்த‌ பின்னும், தயங்குவது என் போன்றோருக்கு சரியல்ல. எது நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும். நாம் இருவரும் விரோத பாவத்துடனேயே போரிடுவோம்' என்றான்.

பயங்கரமான யுத்தம் துவங்கியது. ஒரு சமயம், யுத்தத்தில் இடைவேளை ஏற்பட்ட போது, விஷ்ணு ஒரு முதியவர் உருவம் எடுத்துக் கொண்டு, சங்கசூடனை அடைந்து, தான் கேட்பதை அவன் தட்டாது தர வேண்டுமெனக் கேட்டார். அவனும் ஒப்புகொள்ளவே, அவன் கழுத்திலிருந்த மந்திரக் கவசத்தைக் கேட்டார். சங்கசூடனும் கொடுத்து விட்டான். அதை பெற்றுக் கொண்டு, சங்கசூடனின் உருவத்தை எடுத்துக் கொண்டு, விஷ்ணு சங்கசூடனின் அரண்மனைக்குச் சென்றார்.

கணவனைக் கண்டதும், துளசி ஓடி வந்து பணிந்து வரவேற்றாள். சங்கசூடன் உருவில் இருந்த விஷ்ணு அவளிடம், தான் யுத்தத்தில் ஜெயித்து விட்டதாகவும், சிவபெருமான் விருப்பப்படியே, தேவர்களுக்கு அவர்களது அரசைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறினார். துளசி மிக மகிழ்ந்தாள். தன் கணவனுக்கு உபசாரங்கள் செய்யத் துவங்கினாள். இருவரும் ஆனந்தப்பட்டனர். துளசியின் நிலை அறிந்து சிவபெருமான், சங்கசூடனுடன் உக்கிரமாக யுத்தம் செய்யலானார். பிரளய கால அக்னி போல் ஜ்வலிக்கும் சூலாயுதத்தை அவன் மீது பிரயோகிக்க, சஙக்சூடன், இரு கரங்களையும் கூப்பி இறைவனைத் தியானித்தான். சூலாயுதம், சங்கசூடனின் தலையைத் துண்டித்தது.

துளசியின் அந்தப்புரத்தில், துண்டிக்கப்பட்ட தலை துளசியின் முன் வந்து விழுந்தது. அதைக் கண்ட துளசி துடித்தாள். மாயாசக்தியின் காரணமாக, அவளுக்கு அவள் வாங்கி வந்திருந்த வரங்கள் யாவும் மறந்திருந்தன.

தன் அருகில், தன் கணவன் உருவத்தில் இருந்த விஷ்ணுவிடம், "நீ என் கணவன் இல்லை. என்னை மோசம் செய்த நீ யார் என்பதைச் சொல்" என்று ஆத்திரத்தோடு வினவினாள். விஷ்ணு அவளுக்குத் தன் திருவுருவைக் காட்டினார். துளசியின் கண்களில் கண்ணீர் மழை பொழிந்தது. மனம் கொதித்து, 'என்னை வஞ்சித்த நீ, கல்லாகப் போவாய்' என சபித்தாள்.

விஷ்ணு, அவளைப் பார்த்து, 'நீ முன்னர் என்னைக் கணவனாக அடைய வேண்டுமெனத் தவம் செய்தாய்.சங்கசூடனும், முற்பிறவியில் உன்னை அடைய விரும்பினான். பிரம்மன் வரம் தந்தபடி, முதலில் சங்கசூடனை மணந்தாய். இப்போது உன் தவத்திற்கு பலன் தர வேண்டிய தருணம். நீ இந்த சரீரத்தை விட்டு, என்னை அடைவாய். உன் உடல் கண்டகி நதியாகி மனிதர்களைப் புனிதப்படுத்தும். உன் உரோமங்கள், துளசிச் செடியாகி, எவ்வுலகிலும் நிலைபெறும்.

துளசிச் செடியிருக்கும் புண்ணியத் தலங்களில், நானும் தேவர்களும் தங்கியிருப்போம். ஆயிரம் குடம் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதைக் காட்டிலும், ஒரு குடம் துளசித் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்வதே எனக்கு மிக விருப்பமாகும். துளசி மாலையைத் தரிப்பவர்கள், லக்ஷம் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுவார்கள்.

என்னைக் கல்லாக சபித்தது, பலிக்கும். நான் கண்டகி நதிக்கரையில் மலையாக உருவெடுப்பேன். என்னைப் பூச்சிகள் துளைத்து,சிறு சிறு கற்களாக நதியிலே தள்ளும். அவற்றை சாளக்கிராமம் என்ற பெயரில், என் அம்சம் நிறைந்ததாகப் பூஜிப்பார்கள். அதில், ஸ்ரீலக்ஷ்மியோடு நான் சாந்நித்யம் கொண்டிருப்பேன். சாளக்கிராம பூஜை செய்பவர்கள், வேறு யாகம், பூஜை முதலிய செய்ய வேண்டிய அவசியமில்லை. அதுவே அவற்றிற்கு ஈடாகும். ஆனால் அதை வைத்திருப்பவர்கள், மிகுந்த நியமத்தோடு இருக்க வேண்டும் ' என்று கூறினார்.

இதைக் கேட்ட துளசி, தன் தேகத்தை விடுத்து, திவ்ய ரூபத்தோடு ஸ்ரீ விஷ்ணுவின் திருமார்பை அடைந்தாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

போரில் மாண்ட சங்கசூடன், திவ்ய தேகத்தை அடைந்து, கோலோகத்திலிருந்து வந்த விமானத்திலேறிச் சென்றான். அவன் எலும்புகள் பூமியில் சங்கு வடிவங்களாயின.

துளசிக்கும் ஜோதிடத்திற்க்கும் உள்ள தொடர்பு:

துளசிக்கும் ஜோதிடத்திற்க்கும் உள்ள தொடர்பு:

துளசியை ஸ்ரீ மஹா லஷ்மியின் அம்சமாகவும், சீதையின் மறுவடிவமாகவும் புராணங்களில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிடத்திற்கும் துளசிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என ஆராய்ந்தபோது துளசி செவ்வாயின் காரகம் நிறைந்தது என தெரிகிறது. மேலும், ஸ்ரீ மஹாலஷ்மியின் அம்சம் என்பதால் சுக்கிரனின் அம்சமும் நிறைந்திருக்கிறது. எனவே துளசியை வணங்கிணால் செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரனின் அருளாசி கிடைத்துவிடும் எனத்தெரிய வருகிறது.

துளசியின் கார தன்மை, மற்றும் உஷ்ண தன்மை ஆகியவை செவ்வாயின் காரகதுவத்தை பிரதிபளிப்பதாக அமைந்திருக்கிறது. எனவே தான் பாற்கடலில் உறையும் பரந்தாமன் குளிருக்கு எதிராக உஷ்னத்தன்மை கொண்ட துளசியை எப்போதும் அணிந்து அலங்கார பிரியராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்ததின் காரகர் செவ்வாய். ரத்ததை சுத்தம் செய்வதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதிலும், ரத்த கொதிப்பை குறைப்பதிலும் செவ்வாயின் காரகம் நிறைந்த துளசி

மருத்துவம் மற்றும் மருந்துக்களுக்கு காரக கிரகமான புதன். ஸ்ரீ விஷ்னுக்கு பிரியமானது என்பதாலும் ஸ்ரீ தன்வந்திரி பகவான் சிந்திய அமிர்ததிலிருந்து தோன்றியது என்பதாலும் விஷ்னுவை அதிபதியாக கொண்ட புதனின் அம்சமும் நிறைந்திருக்கிறது.

பொதுவாக நறுமணம் மிக்க அனைத்து செடி மற்றும் பூக்களுக்கும் காரகர் சுக்கிர பகவான்தான். துளசி செடி வாசனை நிறைந்த தாவரமாகும். இதனை 'ஆரோமாடிக் ஹெர்ப்' அதாவது வாசனை மிகுந்த மருந்துப்பொருள் என்கிறது தாவரவியல். வாசனை திரவியங்கள் மற்றும் சென்ட் போன்ற பொருட்களுக்கு சுக்கிரனே காரகர் என்கிறது ஜோதிடம். துளசியிலிருந்து எடுக்கப்படும் வாசனை திரவியம் உணவில் நறுமணமளிக்கவும், மருந்து பொருளாகவும், அழகு சாதன பொருட்களிலும் உபயோகிக்கப்படுகிறது. அதிலும் நாம் பார்க்க போகும் செடியின் இலைகள் சுகமளிக்கும் சுக்கிரனின் அனைத்து காரகத்தன்மையும் கொண்டதாக தெரிகிறது. மேலும் மகாலஷ்மியின் அம்சமான துளசியை வைத்திருந்தாலே செல்வத்தின் காரகரான ஸ்ரீ விஷ்னு நம்முடனே இருப்பார் என்றும் அதனால் காசு கொழிக்கும் என்கிறது ஜோதிடம்.

துளசி இல்லாத ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவமே கிடையாது. குழந்தைகளின் சளி, இருமல் பிரச்னைகளுக்கு, துளசி போல் சிறந்த மருந்து கிடையாது. துளசி இலைகளை நசுக்கி பிழிந்து, இஞ்சிச்சாறு, தேனுடன் கலந்து கொடுத்தால், நெஞ்சு கபம் காணாமல் போய் விடும். தொண்டை நோய்கள் மற்றும் சுரம், சளி இருமல் போன்ற நோய்களை குறிப்பது காலபுருஷனுக்கு இரண்டாம் வீடாடன ரிஷபமும் சுக்கிரனும் ஆகும்.

துளசியின் காய்ந்த இலைகளை கொண்டு சுவை மிகுந்த மருத்துவகுணம் கொண்ட தேநீர் தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீர் சுவை மற்றும் நறுமணம் கொண்டதாக இருப்பதோடு சுறுசுறுப்பை அளிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. தேநீர் போன்ற பானங்களின் காரகர்கள் சுக்கிரன் மற்றும் செவ்வாய் தானுங்கோ!

சிறுநீரக நோய்களை குறிப்பிடுவது காலப்புருஷனுக்கு ஏழாம் வீடு மற்றும் சுக்கிரனின் வீடான துலா ராசியும் அதன் அதிபதியும் ஆகும். பேசில் எனப்படும் துளசி இலைகள் சிறுநீரக வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுநீரக செயல்பாடு சீர்குலையும்போது உடலிலுள்ள அசுத்தங்கள் வியர்வை வழியாக வெளியேறுவதால் தோல்நோய்கள் ஏற்படுகிறது. செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரஹங்களின் காரகம் பெற்ற தோல் நோய்களுக்கு துளசி மருந்தாகவும் அமைந்தது விந்தையிலும் விந்தையாகும்

மாங்கல்ய தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் போக்கும் துளசி:

மாங்கல்ய தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் போக்கும் துளசி:

பெண்களுக்கு செவ்வாய் தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷத்தை போக்க துளசிக்கு தினமும் நீர் வார்த்து மஞ்சள் குங்குமம் வைத்து ஊதுபத்தி ஏற்றி விடியற்காலை வணங்கி வர தோஷங்கள் நீங்குவதோடு திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

வாஸ்து தோஷம் போக்கும் துளசி மாடம்:

வாஸ்து தோஷம் போக்கும் துளசி மாடம்:

துளசி வீட்டில் ஏற்படும் வாஸ்து தோஷம் போக்குவதிலும் முக்கியதுவம் பெருகிறது. வாஸ்து என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பூமி காரகர் செவ்வாய் தான். அத்தகைய செவ்வாயின் காரகத்துவம் நிறைந்த துளசி செடியை துளசி மாடத்தில் கிழக்கு திசையில், தரைமட்டத்தில் வைத்தால், பெண்களின் ஆரோக்கியம் நன்கு அமையும். வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நற்பலனே. துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக்கூடாது. ஆண்டு முழுவதும், பசுமையாக இருக்கும் செடி மற்றும் மரங்களை வைத்து, வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
hulasi or Basil is one of the most sacred of plants revered by people of all faiths, if not for its use in the worship of Lord Maha Vishnu, for its medicinal properties. When Lord Krishna proclaims in the Bhagavad Gita that He is satisfied with a leaf, a flower or a drop of water, the significance of the Thulasi leaf in the worship of the Lord becomes clear. Called Brinda, she attracts Krishna who loves to reside amongst the Thulasi plants in Brindavana. Thulasi is worshipped on the twelfth day of the new moon in the month of Ippasi /Karthikai. The day is called Uttana Dvadasi or Brindavana dvadasi. On this day, lighting a ghee lamp near the Thulasi plant, decorating it with flowers and offering our prayers to Thulasi devi will bring us immense happiness and joy and ultimate union with Lord Krishna.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற