சந்திர கிரகணம்.. ஸ்ரீரங்கம் ரங்கநாதர்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களில் 12 மணி நேரம் நடை அடைப்பு
சென்னை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நடை 12 மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5.30 மணிக்கு மேல் கோவிலுக்கு வருபவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானவியலின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும் கிரகணம் பற்றிய கருத்தில் வானவியலும் ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது. வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை.
இன்றைய தினம் ஐப்பசி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாலையிலேயே பல கோவில்களில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில், திருவண்ணாமலை கோவில்களில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் பிற்பகலிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரகணத்தின் போது காளஹஸ்தி கோவிலை மட்டும் மூட மாட்டார்கள். இதற்கு காரணம், இந்தியாவிலேயே இங்கே மட்டும் தான் ராகுவுக்கும் கேதுவுக்கும் பூஜை நடக்கிறது. இறைவன் மீது நவகிரக கவசம் அணிவிக்கப்பட்டுள்ளதால் இங்கு கிரகண நாளில் கோவில் நடை அடைக்கப்படுவதில்லை அதற்கு பதிலாக சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இன்று சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு பிறகு அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சனிக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்றைய தினம் மாலை 5.30 மணியுடன் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் ஆலயத்தில் தினசரியும் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். வெளி மாநில பக்தர்களும் மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். இன்றைய தினம் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 6 மணியுடன் கோவில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதற்கேற்ப தரிசனத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications