மதுரை ஆவணி மூல திருவிழா..கருங்குருவிக்கு உபதேசம்..செப்.4ல் சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலம் திருவிழாவின் முக்கிய அம்சமான சிவனின் திருவிளையாடல் இன்று முதல் தொடங்குகிறது. கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை இன்று நாடைபெறுகிறது.
மதுரை: சிவபெருமானின் திருவிளையாடல்களை மையமாக வைத்து ஆவணி மூலத்திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. 64 திருவிளையாடல்களில் 12 முக்கிய திருவிளையாடல் லீலைகள் இந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெறும். முதல்நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. இதில் சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி மூல திருவிழாவின் போது சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும்.

ஆவணி மூலத்திருவிழா
ஆவணி திருவிழாவில் தான் சுந்தரேசுவரர் நிகழ்த்திய திருவிளையாடல் லீலைகள் நடைபெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து இன்று முதல் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை 12 நாட்கள் 12 திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெறும்.

சிவனின் திருவிளையாடல்
இன்றைய தினம் கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் நடைபெறுகிறது. ஒருவன் முற்பிறவியில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்த நிலையில் சிறிதளவு பாவம் செய்திருந்ததால் மறுபிறவியில் கருங்குருவியாக பிறக்கிறான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் தன் நிலையை எண்ணி வருந்தியபடி அமர்ந்திருந்தது.

கருங்குருவி வழிபாடு
அந்த சமயத்தில் அந்த மரத்தின் கீழே சிலர் மதுரையைப்பற்றியும், அங்குள்ள மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சுந்தரேசுவரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்று பேசி கொண்டனர். இதை கேட்ட கருங்குருவி அங்கிருந்து பறந்து மதுரைக்கு வந்தது. அங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக்குளத்தில் நீராடி இறைவனை தினமும் வணங்கி வந்தது.

இறைவன் உபதேசம்
இறைவனும் அந்த குருவியின் பக்திக்கு மனமிரங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். அப்போது கருங்குருவி இறைவனிடம் எங்கள் இனத்தையே எளியான் என்னும் பெயர் மாற்றி வலியான் என வழங்கும்படி கேட்டது. மேலும் கருங்குருவி இறைவன் வழங்கிய மந்திரத்தை உபதேசித்து முத்திபேறு அடைந்தது என்பது வரலாறு.

பிட்டுக்கு மண் சுமந்த லீலை
ஆகஸ்ட் 30ஆம் தேதி நாரைக்கு மோட்சம் அளித்தல், ஆகஸ்ட் 31 - மாணிக்கம் விற்றல், செப்டம்பர் 1 - தருமிக்கு பொற்கிழி அருளியது, செப்டம்பர் 2 - உலவாக்கோட்டை அருளியது, செப்டம்பர் 3 - பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல் நடைபெறும். செப்டம்பர் 4ஆம் தேதி வளையல் விற்றல், செப்.5 - நரியை பரியாக்கியது, செப்டம்பர் 6 ஆம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை, செப்டம்பர் 7ஆம் விறகு விற்ற படலம் ஆகிய திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை 4 மாதங்கள் மீனாட்சி அம்மன் ஆட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரர் ஆட்சியும் நடைபெறும். செப்டம்பர் 4 ஆம் தேதியன்று இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வு நடைபெறும். அதன் பின்னர் மதுரையில் சுந்தரேஸ்வரர் ஆட்சி தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications