எதிரிகள் தொல்லையா...நரசிம்மரை இப்படி வழிபடுங்கள்... எந்த ரூபத்திலும் வந்து காப்பாற்றுவார்
மதுரை: வைஷ்ணவர்களின் முதன்மை கடவுளாக நரசிம்மரை வழிபட்டு வருகின்றனர். தன்னை நம்பும் பக்தர்களை காக்க எந்த ரூபத்திலும் வருவார் என்பதால் நரசிம்மர் வழிபாடு என்பது இன்றைக்கு நம்பிக்குரியதாக இருக்கிறது. நரசிம்ம ஜெயந்தி மே 15ஆம் தேதியன்று விரதமிருந்து மாலை நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
நரசிம்மர் மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். பக்தன் பிரகலாதனுக்காக அவதரித்தார் நரசிம்மர். இரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை ரட்சிக்க தூணில் இருந்து சிங்க முகமும், மனித உடலும் கலந்த மாறுபட்ட வடிவில் ஆக்ரோஷமாக அவதரித்தார். நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.
யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோப நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்று நரசிம்மரின் முக்கியமான ஒன்பது வடிவங்கள் இருக்கின்றன. இவைத் தவிர பஞ்சமுக நரசிம்மர், விஷ்ணு நரசிம்மர், ருத்ர நரசிம்மர் போன்ற பல வடிவங் களிலும் விஷ்ணுவின் ஆலயங்களில் நரசிம்மர் அருள்பாலிப்பதைப் பார்க்கலாம்.

ஸ்ரீ நரசிம்மர்
சிங்க முகமும், மனித உடம்பும் கலந்த மாறுபட்ட வடிவில், அகோபிலம் என்னும் மிக உயர்ந்த மலைப்பகுதியில், பவநாசினி நதிக்கரையில் மகாவிஷ்ணு நரசிம்மராக அவதாரம் எடுத்தார். யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தில் இந்த அவதாரம் நிகழ்ந்தது. இந்த ஆலயம் தற்போதைய ஆந்திர மாநிலத்தில் உள்ளது.

மகாவிஷ்ணுவின் அவதாரம்
நரசிம்மம், மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். நான்காவது என்பது தர்மம், அர்த்த, காம நிலைகளைக் கடந்து மோட்சநிலையை அடைவதனைக் குறிக்கும். மோட்சத்தையே சுலபமாகத் தரும் நரசிம்மர், பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் உடனே வழங்கிடுவார்.

நரசிம்மர் வழிபாடு
நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மம் என்றால் ஒளிப்பிளம்பு என்று அர்த்தம். நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்தவை. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் முழு அருளுக்குப் பாத்திரமாகலாம் என்று மங்களகிரி புராணம் கூறுகிறது.

நரசிம்மருக்கு நைவேத்தியம்
நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம். நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம். சர்க்கரைபொங்கல், பானகம் , நீர்மோர் போன்றவைகளை படையலிடலாம்.

நரசிம்மர் மூல மந்திரம்
நரசிம்மரின் இந்த மூல மந்திரத்தை 108 முறை சொல்லி செவ்வரளி உள்ளிட்ட சிவப்பு நிற மலர்களையும், துளசி பயன்படுத்தி நரசிம்மரை அர்ச்சனை செய்து வணங்குவது நல்லது.
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்,
ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்,
பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்

புகழ் கிடைக்கும்
இந்த ஆண்டு மே 15ஆம் தேதி நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக்கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர்,ஸ்ரீலட்சுமி நரசிம்மரை போற்றி துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார். நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் சூரியன் அந்திப்பொழுதான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும். நரசிம்மர் ஜெயந்தி நாளில் வழிபட எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது நிச்சயம்.