For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகும் ஆரோக்கியமும் சகல ஐஸ்வர்யமும் ரம்பா திருதியை - விரதம் இருந்தால் இத்தனை நன்மையா

Google Oneindia Tamil News

மதுரை: பெண்களுக்கு சகல ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் விரதம்தான் ரம்பா திருதியை!. ஞாயிற்றுக்கிழமை ரம்பா திரிதியை விரதம் கடைபிடிக்கப்படுகிறது. வட இந்தியாவில் இந்த விரதம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. செல்வமும் வளமும் அள்ளித்தரும் அட்சய திருதியை எல்லோருக்கும் தெரியும். ரம்பா திரிதியை ஏன் கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

வைகாசி மாத சுக்ல பட்ச திருதியை திதி ரம்பா திருதியை ஆகும். சில சமயங்களில் ஆனி மாதத்திலும் வருவதுண்டு. கார்த்திகை சுக்ல பட்ச திருதியையிலும் சிலர் இவ்விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். இந்த ஆண்டு இன்று 13.6.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின்பேரில் கௌரிதேவியாகிய காத்யாயனி தேவியை வழிபட்ட நன்னாள் இது என்று புராணங்கள் கூறுகின்றன. இது பற்றி சுவாரஸ்யமான புராண கதையைப் பார்க்கலாம்.

ரம்பா ஊர்வசி மேனகா

ரம்பா ஊர்வசி மேனகா

அரம்பையர்கள் தேவலோகத்தில் மொத்தம் 60,000 பேர் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி போன்ற பலர் இருந்தாலும், ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்றவர்கள்தான் அதிக அழகு கொண்டவர்கள் என நமது புரணங்களும், இலக்கியங்களும் கூறுகின்றன.

அப்சரஸ் உலகம்

அப்சரஸ் உலகம்

அரம்பையர்களுக்கு அப்சரஸ் என்ற பெயரும் உண்டு. அப்ஜம் என்றால் தாமரை. சரஸ் என்றால் தடாகம், குளம் என்று பொருள். அப்சரஸ் என்றால் தடாகத்தில் தோன்றிய தாமரை எவ்வளவு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்குமோ அவ்வளவு அழகு நிரம்பியவர்கள் அரம்பையர்கள் ஆவர். ரம்பை தான் இவர்களின் தலைவியாக கூறப்படுகிறாள். இவர்கள் தங்களுக்கென்று ஓர் இடம் வேண்டும் எனவும், தாங்கள் என்றும் இளமை மாறாமல் இருக்க வேண்டும் எனவும் சிவனிடம் வரம் வேண்ட, அவரும் அவ்வரங்களை அளித்து, அவர்களுக்காக "அப்சரஸ்' எனும் லோகத்தையும் உருவாக்கி கொடுத்தார். இவர்கள், சிவ பூஜை செய்வதுடன், யாழ் இசை மீட்டுவதிலும் நடனம் ஆடுவதிலும் பாடல்கள் பாடுவதிலும் வல்லவர்களாய் விளங்கினர்.

தேவ சபையில் நடனம்

தேவ சபையில் நடனம்

ஒருமுறை தேவசபையில் ரம்பை, ஊர்வசி, மேனகை இவர்களுக்கிடையே நடந்த நடனப் போட்டியின்போது, தேவலோக பேரழகி என்ற தனது பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள எண்ணிய ரம்பை, அரங்கமே அதிரும்படி ஆக்ரோஷமாக ஆடினாள். அப்போது அவள் அணிந்திருந்த நெற்றிப் பொட்டும் பிறைச் சந்திரனும் கீழே விழ, நிலைகுலைந்தாள். இந்தக் காட்சியைக் கண்ட ஊர்வசியும் மேனகையும் ரம்பையைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர். தங்களது ஆட்டத்தை நிறுத்திவிட்டு வெளியேறினர். அவர்களின் செய்கையை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதிய ரம்பை, கீழே விழுந்த அணிகலன்களை எடுத்துக் கொண்டு, அழுதபடியே அரங்கை விட்டு வெளியேறினாள்.

இந்திரன் ஆவேசம்

இந்திரன் ஆவேசம்

அன்று இரவு, ரம்பைக்குத் தூக்கம் வர மறுத்தது. சபையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி எண்ணிக் கண்ணீர் சிந்தினாள். மறுநாள் முதல் வேலையாக, தூக்கம் தொலைத்த கண்களுடன் இந்திரனைச் சந்தித்தாள்.
'நேற்று அவையில் எனக்கு ஏற்பட்ட அவமானத்துக்குப் பிராயச்சித்தம் வேண்டும். நடந்த சம்பவத்தால் 'முதல் அழகி' என்ற அந்தஸ்து என்னை விட்டுப் போய்விட்டதோ என்று அச்சம் கொள்கிறேன்' என்று கண்ணீர் பெருக பேசினாள் ரம்பை. ரம்பையை முறைத்துப் பார்த்த இந்திரன், ' உன்னுடைய ஆட்டம்தான் பேயாட்டமாகி அரங்கையே அதிரவைத்துவிட்டது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கலைகளின் அரசி கலைவாணி, அதைக் காணச் சகிக்காமல்தான் உனது பிறைச் சந்திரனைக் கழற்றியதோடு, நெற்றிப் பொட்டையும் அகற்றி விட்டாள். அதனால், இன்னும் சில ஆண்டுகளுக்கு உன்னுடைய அழகிப் பட்டமும் நர்த்தன முறையும் அரங்குக்கு வராமலேயே இருக்கட்டுமே..!' என்று ஆவேசப்பட்டுப் பேசினான்.

விரதம் இருந்தால் வரம் கிடைக்கும்

விரதம் இருந்தால் வரம் கிடைக்கும்

'தேவேந்திரா! பதவி உயர்வுக்கும், பட்டத்துக்கும், கௌரவத்துக்கும் தேவருலகில் அதிபதியான நீங்களே என்னை விலகி இரு என்று சொல்லலாமா? இதற்குச் சரியான வழியை- பிராயச்சித்தத்தை எனக்கு இப்போதே சொல்லி, எனது துயரத்தைப் போக்கிட வேண்டும்'' என்று மன்றாடினாள் ரம்பை. அழுது புலம்பும் ரம்பைக்கு ஆறுதல் சொல்ல விரும்பிய தேவேந்திரன், 'பூலோகத்தில், தன் பதியைத் தேடிச்சென்ற பார்வதிதேவி கௌரி அன்னையாக அவதரித்திருக்கிறாள். அவள் ஒரு மகிழ மரத்தின் கீழ் தவக்கோலத்தில் இருக்கிறாள். அந்தத் தேவியை விரதமிருந்து வழிபட்டால், உனக்கு அருள் செய்வாள். உனக்கு நேர்ந்துள்ள களங்கமும் தீரும்' என்று கூற பூலோகம் புறப்பட்டார் ரம்பை.

கௌரிதேவியின் தரிசனம்

கௌரிதேவியின் தரிசனம்

பூலோகம் வந்த ரம்பைக்கு கெளரிதேவியின் தரிசனம் கிடைத்தது. வைகாசி மாதம் அமாவாசைக்கு இரண்டாவது நாளான துவிதியை அன்று, மஞ்சள் பிரதிமையில் அம்பிகையை ஆவாஹனம் செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள் ரம்பை. முறையாக ரம்பை செய்த பூஜையை ஏற்றுக் கொண்ட கெளரிதேவி, மறுநாள் சுந்தர ரூபனான முருகனை மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாக, பொன்மேனியளாகக் காட்சி தந்தார்.

தேவலோக அழகி

தேவலோக அழகி

ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த தேவி, மீண்டும் தேவலோகத்தில் முதல் அழகியாகும்படி அவளுக்கு அருள்புரிந்ததோடு, அவளது அழகும் ஐஸ்வரியங்களும் மேலும் வளர ஆசி கூறினார். மேலும் அவள் மேற்கொண்ட இந்த விரதத்தை அவளது பெயரால் "ரம்பா திருதியை' என்று வழங்கப்படுமெனவும், இதனைப் பெண்கள் அனுஷ்டித்தால் அவர்களது அழகும் செல்வமும் அதிகரிக்குமென்றும் அருளினாள்.

 என்ன பலன் கிடைக்கும்

என்ன பலன் கிடைக்கும்

ரம்பா என்றால் வாழை என்ற அர்த்தமும் உண்டு. எனவே நாலாபுறமும் வாழை மரங்கள் கட்டி, நடுவில் தேவியின் பிரதிமை அல்லது படம் வைத்து நன்கு அலங்கரித்து, பூஜை செய்து, அம்பிகையின் பாடல்களைப் பாடி, நிறைய வாழைப் பழங்களையும் பட்சணங்களையும் நிவேதனம் செய்து, பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் அவற்றை தானம் செய்து பூஜையை நிறைவு செய்வர். பெண்கள் தனியாகவோ கணவருடன் சேர்ந்தோ இந்த ரம்பா விரதம் அனுஷ்டிக்கலாம். இந்த பூஜையினால் நல்ல துணை, நீண்ட ஆயுள், நல்ல குழந்தை, நல்ல வீடு முதலியவற்றை அடைவார்கள் என்கிறது பவிஷ்யோத்தர புராணம்.

மகிழ்ச்சியும் செல்வமும்

மகிழ்ச்சியும் செல்வமும்

திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர். வாரணாசியில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில் திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள் பெற்றனர். திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களிலும் பல அரம்பையர்கள் வழிபாடு செய்து அருள் பெற்றதாக தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன. பாற்கடலில் தோன்றிய இவர்களை வழிபட்டால் மகிழ்ச்சியும் செல்வமும் இளமைத் தோற்றமும் கிட்டும் என்று புராணம் சொல்கிறது.

English summary
The legend or story procedure or method of Rambha Tritiya vrat is mentioned the Skanda Purana. Rambha Trithiya, is observed mainly in North India on the third day of the Shukla Paksha in the month of Jyeshta In 2021, the date of Rambha Tritiya is June 13,2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X