ஆருரா தியாகேசா... திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம் - பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
திருவாரூர்: பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிரச்சித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா தியாகேசா முழக்கத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். ஆழித்தேருக்கு முன்புறம் விநாயகர் ,சுப்ரமணியர் தேர்களும் பின்புறம் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வலம் வருவதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சர்வ தோஷங்களையும் நீக்கும் பரிகார தலமாக உள்ள திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித்தேர் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. ஆழித்தேரோட்ட திருவிழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம்.
இக்கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக கொண்டது. ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

ஆழித்தேரோட்டம்
சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய கோவிலாகும். திருவாரூரில் பிறந்தாலும், திருவாரூர் என்ற பெயரை சொன்னாலும் முக்தி கிடைக்கும் என்பார்கள். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.

அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்
பங்குனி மாதத்தில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ் பெற்ற ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆழி என்றால் மிகப்பெரியது என்று பொருளாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அழகும் பிரம்மாண்டமும்
அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 450 டன். "ஆருரா, தியாகேசா" என்ற முழக்கத்துக்கு நடுவில் அசைந்தாடிவரும் ஆழித்தேரின் அழகு காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். ஆழித்தேருடன், கமலாம்பிகை அம்மன் தேரும், சண்டிகேஸ்வரர் தேரும் வடம் பிடிக்கப்படும்.

ஆழித்தேரோட்டம் கோலாகலம்
திருவாரூர் தியாராஜர் ஆலயத்தில் இந்தாண்டு பங்குனி உத்திர விழா கடந்த மாதம் 02 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு விநாயகர் தேரோட்டம் துவங்கியது. அதன்பின்னர் காலை 7 மணி அளவில் தியாகராஜர் சுவாமி எழுந்தருளிய ஆழித்தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரை தொடர்ந்து கமலாம்பாள், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்கள் வரிசையாக சென்றன.
குவிந்த பக்தர்கள்
ஆசியாவிலேயே மிகப்பெரிய திருத்தேரான ஆழித்தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர். தேரின் முன்பகுதியில் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி உள்ளிட்ட பொம்மைகளுடன் சேர்த்து அலங்கரிக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான ஆழித்தேர் தியாகராஜர் சாமியுடன் கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் ஆடி அசைந்துவலம் வரும் அழகைக் காண கொரோனா அச்சத்தையும் மீறி ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஆழித்தேராட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.