சனி வக்ர பெயர்ச்சி 2023: கலையலங்காரம் மறுபடியும் முதல்ல இருந்தா..ஏழரை இன்னும் எத்தனை நாளைக்கு?
சென்னை: கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் வக்ரமடைந்து சற்றே பின்னோக்கி நகர்ந்து மகர ராசிக்கு இன்னும் சில மாதங்களில் செல்லப்போகிறார். சனிபகவான் 5 மாதங்களுக்கு மேலாக மீண்டும் மகர ராசியில் பயணம் செய்யப்போகிறார். ஏழரை சனி முடிந்து விட்டது அஷ்டமத்து சனி முடிந்து விட்டது என்று நிம்மதி பெருமூச்சு விட்டவர்களின் மனதில் இப்போதே மறுபடியும் முதல்ல இருந்தா என்ற எண்ணம் எழ ஆரம்பித்து விட்டது. சனி வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என பார்க்கலாம்.
சனிபகவான்: பொதுவாக சனிபகவான் ராசிக்கு 3,6,10,11 ஆகிய இடங்களில் பெயர்ச்சி ஆகும் போது நற்பலன்களை வாரிவழங்குவார் ஜாதகத்தில் மோசமான திசைகளே நடந்தாலும் இந்த ஸ்தானங்களில் பெயர்ச்சி ஆகும் போது கெடுபலன்கள் நடைப்பெற்றாலும் நன்மைகளை செய்வார். ஜாதகத்தில் தசாநாதனை மீறி செயல்படுவதற்கான உரிமை சனிபகவானுக்கு மட்டுமே உண்டு அதை யாரும் மறக்கவேண்டாம் ஏனென்றால் மற்ற கிரகங்களை விட அதிக காரகத்துவங்களை பெற்றவர் சனிபகவான் ஏனென்றால் அவர்தான் கர்மகாரகன்.

தண்டனைகள்: நல்லவர்களுக்கு நல்ல பலன்களை தருவதற்கு வல்லமை கொண்ட ஒரே கிரகம் சனிபகவான்தான். ஏனென்றால் அவர் ஆயுள்காரகன். விதியின் ருபமாக விளங்கும் சனிபகவான் தனது பெயர்ச்சி காலங்களில் ஜாதகருக்கான நல்ல மற்றும் தீய பலன்களை அவரே தீர்மானித்து பலன்களை தருவார் அதை எவராலும் தடுக்கமுடியாது. 5,9 ஆகிய இடங்களில் சனிபகவான் தனது பூர்வபுண்ணிய கணக்கின் படி பலன்களை வழங்குவார்.
சனி பெயர்ச்சி: ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் 5,9 ஆகிய ஸ்தானங்கள் பலம் பெற்று அதன் அதிபதிகள் நல்ல அமைப்பில் இருந்தால் அந்த இடங்களில் சனிபகவான் தனது பெயர்ச்சி காலங்களில் நற்பலன்களை வழங்குவார் அதுவே 5,9 ஆகிய இடங்கள் கெட்டு அதன் அதிபதிகள் பலமிழந்து பாபத்துவம் அடைந்திருந்தால் சனிபகவான் தனது பெயர்ச்சிகாலங்களில் கெடுபலன்களை செய்வார் அதாவது 5.9 ஆம் இடமும் அதன் அதிபதிகள் நிற்கும் நிலைகளை பொறுத்து பலன்களை சனிபகவான் தனது பெயர்ச்சிகாலங்களில் 5,9ல் வரும்போது பலன்களை தீர்மானித்து வழங்குவார் அதேபோல் ராசிக்கு 12,1,2,4,7,8 ஆகிய இடங்களில் பெயர்ச்சி ஆகும் போது கெடுபலன்களை அதிகமாக செய்வார்.
சனி வக்ர பெயர்ச்சி: சனிபகவான் தனது வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மீண்டும் சில சங்கடங்களைத் தரப்போகிறார். அதே நேரத்தில் இப்போது குரு பெயர்ச்சி நிகழ்ந்திருப்பதால் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் என்பதால் அதிகம் பயப்பட தேவையில்லை. சரி எந்த ராசிக்காரர்கள் மீண்டும் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
மிதுனம்: அஷ்டமத்து சனி முடிந்து விட்டது என நிம்மதி பெருமூச்சு விட்டீர்கள். அவசரப்பட வேண்டாம். இன்னும் சில மாதங்களுக்கு நீங்கள் கவனமாகவே இருக்க வேண்டும். சொந்த தொழில் செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் எல்லாம் உங்களின் பண முதலீடுகளில் கவனமாக இருப்பது நல்லது. அகலக்கால் வைக்காதீர்கள் ஆபத்தாகிவிடும்.
கடகம்: கண்டச்சனி காலம் முடிந்து அஷ்டமத்து சனி வந்து விட்டது. அதற்குள் உடல்நிலை படுத்தும் பாடு மூச்சு விட முடியவில்லை. மீண்டும் கண்டச்சனி என்பதால் அதற்கு இது பரவாயில்லை. வாகன பயணங்களில் கவனமும் நிதானமும் தேவை. குரு பகவானின் பார்வை உங்களை தப்பிக்க வைத்தது. இனி குருவும் இடப்பெயர்ச்சி அடைந்து விட்டால் பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.
துலாம்: அர்த்தாஷ்டம சனி உங்களை அல்லாட வைக்கப்போகிறார். சனிபகவானின் நேரடி பார்வை மீண்டும் உங்கள் ராசி மீது விழப்போகிறது. அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். நிலம், வீடு வாங்கும் போது கவனமும் நிதானமும் தேவைப்படும். தாய் பத்திரங்களை பார்த்து வாங்கமும். வண்டி வாகன பராமரிப்பு செலவு எட்டிப்பார்க்கும் எதற்கும் பணத்தை பத்திரப்படுத்தி வைப்பது நல்லது.
தனுசு: ஏழரை சனி முடிந்து விட்டது இனி எல்லாம் நல்ல காலம்தான் என்று எண்ணிக்கொண்டிருக்க சனிபகவானின் வக்ர சஞ்சாரம் லேசில் விட்டு போகாது போலிருக்கே. மறுபடியும் முதல்ல இருந்தா இன்னும் எவ்வளவு அடிகளை தாங்க வேண்டுமோ என்று பயப்பட வேண்டாம் உங்களை காப்பாற்ற குருபகவான் இருக்கிறார். சனி பகவான் கொடுக்கும் கஷ்டங்களையும் சிரமங்களையும் கேடயம் போல தனது பார்வையால் தடுத்து காப்பார்.

மகரம்: சனி பகவான் பாத சனியாக போகிறார் என்று நினைக்கையில் மீண்டும் ஜென்ம சனியாக வரப்போகிறார். ஏற்கனவே பட்ட பாடுகள் பலவித படிப்பினைகளை கொடுத்திருக்கும். மன தைரியத்தோடு எதையும் எதிர்கொள்ள தயாராகுங்கள். சுக ஸ்தான குரு உங்களுக்கு மன நிம்மதியை தரப்போகிறார்.
கும்பம்: ஏழரை சனி ஆரம்பித்ததில் இருந்தே உங்களுக்கு படாத பாடுதான். கடன் பிரச்சினை கழுத்தை நெரித்தாலும் எதையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறீர்கள். பட்டாலும் புத்தியில்லை. அகலக்கால் வைத்து விட்டு அவதிப்பட்டு வருகிறீர்கள். ஏழரை சனி கொடுக்கும் தண்டனைகள் உங்களுக்கு நல்ல படிப்பினைகளை வழங்கும். உங்களுக்கு சனிபகவான் கொடுக்கும் சங்கடங்கள் போக தினசரியும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.












Click it and Unblock the Notifications