திருச்செந்தூர் ஆவணித்திருவிழா : தீராத நோய் தீர்க்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை: திருசெந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் இலை விபூதி விஷேசமானது. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது போல வேறு எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை. திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா நடைபெறும் இந்த நேரத்தில் பன்னீர் இலை விபூதி குறித்த புராண கதைகளைப் பற்றியும் இலை விபூதியின் சிறப்புகளைப் பற்றியம் பார்க்கலாம்.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் கடற்கரையில் நின்றார் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின. எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம்.

பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுகின்றன.

ஆவணித்திருவிழா
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் காலை மற்றும் மாலையில் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வருகின்றனர். அதேபோல் காலை மற்றும் மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி கோவில் கிரிபிரகாரத்தில் உலா வந்து கோவிலுக்குள் செல்கின்றனர்.

5ஆம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தது. காலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் - வள்ளியம்பாள் எழுந்தருளல், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி கிரிபிரகாரத்தில் உலா வந்து கோவிலுக்குள் சென்றனர். பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. எதிரே நின்ற சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர் சேவை தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமியும், வள்ளியம்பாளும் கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தனர்.

ஆவணித் திருவிழாவில் முக்கியமானது 7ஆம் திருநாளும் 8ஆம் திருநாளும். இந்த நாள்களில்தான் இறைவன் வெள்ளை சாத்தி, சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி என்னும் திருக்கோலத்தில் காட்சி தருவார். அதிகாலை 5 மணிக்குத் திருக்கோயில் 108 மகாதேவர் சந்நிதி முன்பு உருகுசட்டசேவையும், சுவாமி ஷண்முகர், வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளலும் நடைபெற்றது. மாலையில் சிவப்பு சாத்தி கோலத்தில் காட்சி தருவார் சண்முகர். எட்டாம் திருநாளான நாளைய தினம் வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி கோலத்தில் காட்சி தருகிறார். திருவிழா நடைபெறும் இந்த நாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் பன்னிரு இலை விபூதியின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இலை விபூதி பிரசாதம்
இலை விபூதி பிரசாதம் தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.
முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவர். அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.
அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுருக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுருக வேண்டினார்.

அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக்கொண்டதோடு, அதை உட்கொள்ளவும் செய்தார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுருகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலின் சிறப்பு, சுவாமியின் மேன்மை போன்றவைக் குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை படப் பாடியுள்ளார்.
சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் சொல்லி இருக்கிறார்.
திருசெந்தூர் செல்பவர்கள் பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
திருநீற்றை பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும். பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும் என்று ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் 'பத்ர பூதி' என்று ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார்.
'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும். இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார். "என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்து விட்டு மறைந்தாராம். திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.
கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.
தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.












Click it and Unblock the Notifications