For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

By Staff
Google Oneindia Tamil News

Labours
-புன்னியாமீன்

இன்று மே தினம். Day of the International Solidarity of Workers. அதாவது ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

உலக கைத்தொழில் புரட்சியின் பயனாக ஆலைகளின் பெருக்கம், இயந்திரமயமாக்கம், பேரளவு உற்பத்தி ஆகிய காரணிகள் தொழிலாளரை ஒரு வர்க்கமாக ஒன்றுபட வைத்தது. ஒருபுறம் முதலாளிகள் உற்பத்தி முயற்சியில் இலாபம் பெறுகின்றனர். தொழிலாளரிடமிருந்து ஊழியத்தைப் பெறுகின்ற அளவு அவர்களுக்கான உரிமைகள், ஊதியம், சலுகைகள் என்பவற்றை வழங்குவதில் உற்பத்தியாளர் ஆர்வம் காட்டவில்லை. கால்வயிற்றுக் கஞ்சிக்காக தம் உழைப்பை நல்கும் தொழிலாளர் வேறு வழியின்றி முதலாளிகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டனர். இதனால் தொழிலாளர் வாழ்க்கையை சிறுமையும், வறுமையும் ஆட்கொண்டன. அதே நேரம் தொழில் உரிமையாளர்களால் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்யவேண்டுமென தொழிலாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இப்படிப்பட்ட பின்னணியில் கட்டாய வேலைநேரத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளில் குரல்களும் ஆங்காங்கே எழ ஆரம்பித்தன. குறிப்பாக இங்கிலாந்தில் தோன்றிய ஆவண இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியது. இதில் 10 மணி நேர வேலைக் கோரிக்கை முதன்மை பெற்றிருந்தது.

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834ல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.. ஆனால் இப்போராட்டங்கள் தோல்வியில் முடிவடைந்தன.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். மெல்பேர்ன் கட்டிடத் தொழிலாளர்களின் போராட்டம் 8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. மெல்பேர்ன் தொழிலாளர்களின் வெற்றி தொழிலாளர் வர்க்க போராட்டத்தின் மைல்கல்லாக அமைந்தது எனலாம்.

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக எடுத்துரைத்திருந்ததுடன் ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே 1917- ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 1832ல் பொஸ்டன் நகரில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், ரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க முதலாளிகள் ஆரம்பத்தில் இதனைக் கண்டு கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு" என்ற இயக்கம் 1884ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் அடிப்படையில் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர் என கூறப்படுகின்றது. தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.

இந்த எழுச்சி சிக்காகோவிலும் ஏனைய பிரதேசங்களிலும் தொடர்ந்தன. சிக்காகோவில் வேலை நிறுத்தப்போராட்டம் சூடுபிடித்தது. மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்" வாயிலில் 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை தொழிலாளர்கள் நடத்தினர் . ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். இச்சம்பவத்தில் 7 போலீஸாரும், 4 தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஜூன் 21, 1886 ஆரம்பமாகியது. இறுதியில் 7 தொழிலாளர் தலைவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது. 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் '"சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்"" கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

1890 மே 1 இலிருந்து இன்று வரை ஒவ்வொராண்டும் மே 1ம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

தொழிலாளரின் அவர்களது ஆற்றலின் தேவையை உணர்த்த வேண்டிய, போற்ற வேண்டிய இந்நாள் உண்மையான நோக்கத்திலிருந்து தலைகுப்புறப் புரண்டுவிட்டது. தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுப்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற இந்நாளானது இன்று உருவாக்கத்தின் நோக்கத்தையே மறந்து விட்டு ஒரு கேளிக்கை தினமாக மாறி வருவது சிந்திக்க வேண்டியதொரு விடயமாகும்.. தொழிலாளரின் ஒற்றுமையை உறுதிப்படுத்த சபதமேற்கும் இந்நாள் தொழிலாளரின் உரிமைகள் வெற்றிகொள்ள ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப வேண்டிய இந்நாள் பல்வேறு பிரிவினைகளுக்கு உரமூட்டும் நாளாக அமைந்துவிட்ட அவலத்தை நாம் மூன்றாம் உலக நாடுகளின் காணக்கூடியதாக உள்ளது.

உழைப்பாளரின் சக்தியை, ஒற்றுமையை ஓங்கியொலிக்க வேண்டிய இந்நாள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்ட அவல நிலையையே வெளிப்படுத்துகின்றது. இத்தினத்தின் நோக்கம் இன்று புறந்தள்ளப்பட்டு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளதும் ஆள்பலத்தை வெளிப்படுத்தும் தேசிய நாளாக அமைந்துவிட்டது என்றால் அதுவே யதார்த்தம். அதுவே உண்மை. பிள்ளையார் பிடிக்க குரங்கானது என்பது போல் தொழிலாளரின் உரிமை பற்றி குரல் கொடுக்க வேண்டிய மேதின ஊர்வலங்களும், கூட்டங்களும் இன்று அரசியல் ஊர்வலங்களாகவும் அரசியல் மேடைகளாகவும் மாறிவிட்டன.. ஜனநாயக நாடான நமது நாடுகளில் மேதினம் நடத்த, ஊர்வலம் செல்ல, கூட்டத்திற்கு ஆள்திரட்ட பண நாயகமும், மதுநாயகமும் உதவும் பரிதாப நிலையும் காணப்படுகின்றது.

மேதினத்தின் நோக்கத்தையே, அதன் உண்மைத் தாற்பரியத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு அதன் மேல் நின்று ஒப்பாரி வைப்பது போன்றே இன்றைய காலத்தில் மேதினம் கொண்டாடப்படுகின்றது. தொழிலாளர் வர்க்கமே ஒன்றுபட உரிமைகளை வென்றெடு, நிலைநாட்டு என்று குரல் எழுப்ப வேண்டிய பெறுமதிமிக்க இத்தினத்தில் மூன்றாம் உலக நாடுகளின் நவீன சுரண்டல்கள் பற்றியும், நமது நாடுகளின் தொழிலாளர் நிலைபற்றி சிந்திப்பது காலத்தின் தேவையாகும்.

சர்வதேச தொழிலாளர் தினமான மே 1ம் தேதியை அரசாங்க பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ள நாடுகள்:

Albania, Argentina, Aruba, Austria, Bangladesh, Belgium, Bolivia, Bosnia, Brazil, Bulgaria, Cameroon, Chile, Colombia, Costa Rica, China, Croatia, Cuba, Cyprus, Czech Republic, Denmark,Dominican Republic Ecuador, Egypt, Finland, France, Germany, Greece, Guatemala, Haiti, Hungary, Iceland, India, Italy, Jordan, Kenya, Latvia, Lithuania, Lebanon, Malaysia, Malta, Mauritius, Mexico, Morocco, Myanmar (Burma), Nigeria, North Korea, Norway, Pakistan, Paraguay, Peru, Poland, Philippines ,Portugal, Romania, Russian Federation, Singapore, Slovakia, Slovenia, South Korea, South Africa, Spain, Sri Lanka, Serbia, Sweden, Syria, Thailand, Turkey, Ukraine, Uruguay, Venezuela, Vietnam and Zimbabwe.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X