For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசு பணி- ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்த மண்டல் கமிஷன் உருவானது எப்படி?டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்த மண்டல் கமிஷன் உருவான வரலாறு தொடர்பான விரிவான தகவல்களை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சுக்கா... மிளகா... சமூகநீதி? என்ற தலைப்பில் டாக்டர் ராமதாஸ் எழுதி வரும் தொடரில் இடம்பெற்றுள்ளதாவது:

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களை அடையாளம் காண்பதற்காகவும், அவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காகவும் காகா கலேல்கர் ஆணையம் அமைக்கப்பட்ட போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வகுப்புவாரி இடப்பங்கீடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

காகா கலேல்கர் குழு அறிக்கை 1955-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட போதே, அதை அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தது குறித்து முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். காகா கலேல்கர் ஆணையத்தின் அறிக்கைக்கு அப்போதே முடிவுரை எழுதப்பட்டு விட்டது. இது காகா கலேல்கர், அவருடன் அறிக்கையை தாக்கல் செய்வதற்காக பிரதமர் ஜவகர்லால் நேருவை சந்திக்கச் சென்ற ஆணையத்தின் உறுப்பினர் உத்தரபிரதேசத்தை சேர்த்த சிவ் தயாள்சிங் சவுராசியா மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சமூகநீதி சக்திகள் சிலருக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்கள் காகா கலேல்கர் குழுவின் அறிக்கையை ஜவகர்லால் நேரு நிச்சயமாக செயல்படுத்துவார் என்று தான் நம்பியிருந்தனர்.

Dr Ramadoss writes on Mandal Commission and 27% Reservation

அவர்களின் நம்பிக்கைக்கு காரணம் காகா கலேல்கர் ஆணையத்தை அமைத்ததே ஜவகர்லால் நேரு என்பது தான். ஆனால், அந்த ஆணையமே நெருக்கடியில் தான் அமைக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியாது. பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகிய மூன்று வகுப்பினரும் பிற்படுத்தப்பட்ட தன்மை கொண்டவர்கள் என்பதால் அவர்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என்பது தான் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் விருப்பம் ஆகும்.

அவர்களில் பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வரையறைகள் வகுக்கப் பட்டு, அதன்படி இடப்பங்கீடு வழங்கப்பட்டு விட்டது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டுமானால், அரசியலமைப்பு சட்டத்தின் 340-ஆவது பிரிவின்படி ஆணையம் அமைக்கப் பட்டு பிற்படுத்தப்பட்டோர் அடையாளம் காணப்பட வேண்டும். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்படாததைக் கண்டித்து 10.10.1951 அன்று மத்திய சட்ட அமைச்சர் பதவியிலிருந்து அம்பேத்கர் விலகினார். அம்பேத்கர் விலகியதற்கு மேலும் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இது தான் மிகவும் முக்கிய காரணமாகும். அதனால், பிற்படுத்தப்பட்ட மக்களிடம் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் காகா கலேல்கர் ஆணையத்தை நேரு அமைத்தார். விருப்பமின்றி அமைத்த அந்த ஆணையத்தின், தமக்கு விருப்பமில்லாத பரிந்துரைகளை நிறைவேற்ற மனமில்லாததால் அறிக்கையை கிடப்பில் போட்டு விட்டார்.

Dr Ramadoss writes on Mandal Commission and 27% Reservation

அதன்பின் ஜவகர்லால் நேரு ஆட்சியில் இருந்த கிட்டத்தட்ட 10 ஆண்டுகளும் காகா கலேல்கர் ஆணைய அறிக்கை தூசு தட்டப்படவில்லை. அவருக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தியிடமும் இது தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும், அவற்றை இந்திரா காந்தி கண்டுகொள்ளவில்லை. காகா கலேல்கர் ஆணைய அறிக்கை செயல்படுத்தப் படாததை அப்போதைய தமிழகத் தலைவர்கள் எவரும் கண்டிக்கவில்லை. அதனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்பது தொடுவானமாக நீண்டு கொண்டே சென்று கொண்டிருந்தது. 1975-ஆம் ஆண்டு நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்ட போது, பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை முற்றிலுமாக அகன்றுவிட்டது. அந்த நேரத்திலும் தமிழகத்திலிருந்து ஒரு குரல் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்திக் கொண்டிருந்தது. அந்த குரலுக்கு சொந்தக்காரர் மார்க்சீய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் பெரியவர் ஆனைமுத்து அவர்கள்.

நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்த நிலையில் 22.05.1976 அன்று பிரதமர் இந்திராகாந்திக்கு அவர் ஒரு கோரிக்கை மனு அனுப்பினார். ''இந்திய அரசமைப்பு சட்டத்தின் 15(4), 16(4) ஆகிய பிரிவுகளின்படி பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடப்பங்கீடு வழங்கி நிர்வாக ஆணை பிறப்பிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் பெரியவர் ஆனைமுத்து கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், இந்திரா கண்டுகொள்ளவில்லை.

1977-ஆம் ஆண்டு மக்கள் நாயகர் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கம் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக பெரும் கிளர்ச்சிகளை நடத்தியது. அந்த தேர்தலில் இந்திரா காந்தியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைத்து எதிர்கட்சிகளும் ஜனதாக் கட்சியின் தலைமையில் தேர்தலை சந்தித்தன. அந்த தேர்தலில், ஜனதாக் கட்சி சார்பில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான குழு தயாரித்து வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,''1977-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனதாக் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 25 முதல் 33% வரை இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது பிற்படுத்தப்பட்ட மக்களிடையே இட ஒதுக்கீடு குறித்த புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஆனால், அந்த நம்பிக்கையும் நீர்க்குமிழியைப் போல விரைவாகவே உடைந்து போனது. 24.03.1977-இல் ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் எந்த அரச பதவியையும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருந்ததால், இந்திரா காந்தி ஆட்சியில் துணைப்பிரதமராக இருந்து, அவரால் இழைக்கப்பட்ட அவமானங்களை சகித்துக் கொள்ள முடியாமல் காங்கிரசிலிருந்து விலகி, காங்கிரஸ் (ஓ) என்ற போட்டி அமைப்பை நடத்தி, தேர்தலுக்கு முன்பாக ஜனதாவில் இணைந்திருந்த மொரார்ஜி தேசாய் பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால், ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேர்தலின் போது அளித்திருந்த வாக்குறுதியை மறந்து போனார். கிட்டத்தட்ட 21 மாதங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அவர் சிந்திக்கவே இல்லை.

அந்த நேரத்தில் வட புலத்திலிருந்து ஒரு குரலும், தென்புலத்திலிருந்து ஒரு குரலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு என்று ஒலித்துக் கொண்டிருந்தன. வடபுலத்துக் குரல் ராம் அவதேஷ் சிங் என்ற தலைவருடையது. இவர் பின்னாளில் எனது நண்பரானார். எனது சமூக நீதிப் போராட்டங்களுக்கு துணை நின்றார். நான் பிகார் போனால் அவரது இல்லத்துக்கு செல்வதும், அவர் தமிழகம் வந்தால் எனது இல்லத்துக்கு வருவதும் வாடிக்கையாகும் அளவுக்கு நாங்கள் குடும்ப நண்பர்கள் ஆனோம்.

தென்புலத்திலிருந்து ஒலித்த குரல் ஆனைமுத்து அய்யாவுடையதாகும். பின்னாளில் மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டதில் இந்த இருவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்நாட்டிலிருந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தால் தில்லி அரசின் காதுகளுக்கு அது கேட்காது என்பதால் 27.04.1978-இல் ஆனைமுத்து அவர்களும், அவரது தோழர்களும் தில்லி புறப்பட்டு சென்றனர். தில்லியில் அவர்கள் முதன்முதலில் சந்தித்தது யாரைத் தெரியுமா?

பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் என்பவரைத் தான்.

இவர் தான் பின்னாளில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர். இவர் பிகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். 1972 முதல் 1980 ஆம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராக இருந்தவர். 1978-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதியும், மே மாதம் 10-ஆம் தேதியும் மண்டலை ஆனைமுத்து சந்தித்து பேசிய போது பின்னாளில் அவர் தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட போகிறார் என்பது அவருக்கும் தெரியாது; ஆனைமுத்துவுக்கும் தெரியாது. இன்னும் கேட்டால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்றாலும் கூட, அவர்களுக்காக இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் சிந்திக்கவில்லை. ஆனைமுத்து அவர்கள் தான் 1928-ஆம் ஆண்டு முதல் தென்மாநிலங்களில் இடப்பங்கீடு வழங்கப்பட்டு பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேறி வரும் நிலையில் வட மாநிலங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவதை எடுத்துக் கூறி அதற்கு எதிராக போராடத் தூண்டினார். அதனால் மண்டலின் மனதில் இடஒதுக்கீட்டு உணர்வு மிகவும் ஆழமாக பதிந்தது.

அதன்பின், மே 6-ஆம் தேதி ராம் அவதேஷ் சிங்கை ஆனைமுத்து அவர்கள் தில்லியில் சந்தித்தார். இருவருக்கும் அதுதான் முதல் சந்திப்பு. ராம் அவதேஷ் தந்தை பெரியார் மீது பற்று கொண்டவர். பெரியாரின் பிராமண எதிர்ப்புக் கொள்கைகள் குறித்து ஒரு நூலில் எழுதியதற்காக இவர் மீது அவர் சார்ந்த சோசலிசக் கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. அதுமட்டுமின்றி, அதன் காரணமாகவே அவரை தந்தை பெரியாரின் சாதியான 'நாயக்கர்' என்ற பெயரிட்டு கிண்டலாக அழைத்தனர். ஆனாலும் பின்னாளில் இதற்காகவே அவரை பாராட்டும் அளவுக்கு சமூகநீதிக் கொள்கைகளில் தீவிரம் காட்டினார். இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை என்று ஆனைமுத்து விளக்கிப் பேசியதைக் கேட்ட அவர், அடுத்த நாளே உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட மாநாட்டுக்கு அழைத்துச் சென்று உரையாற்ற வைத்தார். அதன்பின் பிகாரில் 31 நாட்கள் பரப்புரை பெரும்பணி மேற்கொள்ள வைத்தார்.

முசாபர்நகர் கூட்டத்தில் பங்கேற்றதற்கு அடுத்த நாளில், அதாவது 1978-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியை சந்தித்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினார். ஆனால், உயர் வகுப்பைச் சேர்ந்த அவரோ அந்த கோரிக்கையை காதில் வாங்காமல் இந்தியை எதிர்த்து போராடும்படி கேட்டுக்கொண்டார். இந்திரா காந்தி உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்தித்து பேசினார். ஆனால், அவை எந்த பயனையும் தரவில்லை.

இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து இராம் அவதேஷ் சிங் அவர்களின் ஏற்பாட்டில் பிகார் மாநிலத்திற்கு சென்ற ஆனைமுத்து அவர்கள், தந்தை பெரியாரின் பிறந்தநாளான 17.09.1978 முதல் 18.10.1978 வரை 32 நாட்கள் மத்திய அரசிலும், பிகார் மாநில அரசிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பரப்புரை மேற்கொண்டனர். இந்த பரப்புரையில் ஆனைமுத்து அவர்களுடன் அவரது இயக்கத்தைச் சேர்ந்த சீர்காழி மா.முத்துசாமி, திருச்சி து.மா.பெரியசாமி, வேலூர் நா.ப. செந்தமிழ்க்கோ ஆகியோரும் பங்கேற்றனர். அவர்களின் பரப்புரை கடுமையான நெருக்கடிகளுக்கிடையே நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ஓர் இடத்தில் பரப்புரை மேற்கொள்வதற்காக புதுப்புது இடங்களுக்கு அவர்கள் செல்வது கடுமையானதாக இருந்தது. ஒவ்வொரு நாளும் உணவு வசதியின்றி, வாகன வசதியின்றி, நல்ல தங்குமிட வசதியின்றி, உதவியாளர் துணையின்றி அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்தனர்.

அக்டோபர் 18-ஆம் தேதியுடன் 32 நாள் பரப்புரை நிறைவடைந்து ஆனைமுத்து குழுவினரை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய இராம் அவதேஷ் சிங், பிகார் மாநிலத்திலும், மத்திய அரசிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி பாட்னாவில் உள்ள பிகார் மாநிலத் தலைமைச் செயலகத்தை முற்றுகை செய்யும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி 19.10.1978 முதல் 31.10.1978 வரை நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்; பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அந்த நேரத்தில் பிகார் மாநிலத்தின் சமஸ்திப்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. அதை எதிர்கொள்ள வசதியாக பிகார் மாநிலத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பிகார் மாநில முதலமைச்சர் கர்ப்பூரி தாக்கூர் அவர்கள் அறிவித்தார். அதற்கான அரசாணை 10.11.1978 பிறப்பிக்கப்பட்டது.

பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரைபிரதமர் மோடி மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை

அதற்கு முன்பாக பிகாரில் இட ஒதுக்கீடு கோரும் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்த போது, அதாவது 1978 அக்டோபர் 25, 26 ஆகிய தேதிகளில் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் எங்குமே பேச முடியாத அளவுக்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ''பிகாருக்குள் நுழையாதே... திரும்பிப் போ'' என்று முழக்கமிட்டனர். அதனால் அவர் மிகவும் வருத்தமடைந்தார்; அதே வருத்தத்துடன் தில்லி திரும்பினார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதாகக் கூறி விட்டு இட ஒதுக்கீடு அளிக்காதது தான் மக்களின் கோபத்துக்கு காரணம் என்று அவர் நினைத்தார். மக்கள் விழிப்புணர்வு பெறத் தொடங்கி விட்டார்கள் என்பதையும் அவர் உணர்ந்தார். அதனால் மக்களின் கோபத்தை போக்க வேண்டும் என்பது குறித்து அவர் சிந்தித்தார். அதன் முடிவில், இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் காண்பதற்காக இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்படும் என்று 20.12.1978&இல் பிரதமர் மொரார்ஜி தேசாய் அறிவித்தார். எந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் இட ஒதுக்கீடு கோரி தம்மை விரட்டியடித்தார்களோ, அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரையே ஆணையத்தின் தலைவராக
நியமிக்கவும் முடிவு செய்தார். அதன்படி பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் ஆணையத்தின் தலைவராக இருப்பார் என்றும் அறிவித்தார். இதற்கான அறிவிக்கை 01.01.1979&இல் வெளியிடப்பட்டது.

இது தான் மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டதன் வரலாறு ஆகும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

English summary
PMK Founder Dr Ramadoss posted the History of Mandal Commission and 27% Reservation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X