For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வியன்னா..பெர்லின்..வாஷிங்டன்..!

By Staff
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் மத்திய அரசு எப்படி ஐஏஇஏவிடம் ஒப்பந்தம் செய்யப் போனது.. என இடதுசாரிகளும் பாஜகவும் கூச்சல் போட்டுக் கொண்டிருக்க பிரதமர் மன்மோகன் சி்ங்கும் வெளியுறவு அதிகாரிகளும் உண்மையிலேயே வேறொரு பயத்தில் ஆழ்ந்து போய் இருக்கின்றனர்.

பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்ற பயமா என்று கேட்காதீர்கள்.. அதை எப்படியாவது நிரூபித்துவிடலாம் என்றே காங்கிரஸ் கருதுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் அதிகமாக தலையிடவே இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்கும் வேலையை ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

அவரது தலைமையில் ராகுல் காந்தி, அமைச்சர்கள் சரத் பவார், லாலு பிரசாத் யாதவ், வயலார் ரவி, இரு நாட்களுக்கு முன் காஷ்மீர் முதல்வர் பதவி இழந்த குலாம் நபி ஆசாத் ஆகியோர் எம்பிக்களைத் திரட்டும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இப்படி ஒரு அரசியல் களத்தில் ராகுல் காந்தி குதிப்பது இதுவே முதல் முறையாகும். அரசுக்கு ஆதரவு அளிக்குமாறு பரூக் அப்துல்லாவின் மகன் ஒமருடன் அவர் தான் பேசி வருகிறார்.

லாலுவிடம் தரப்பட்டுள்ள பொறுப்பு சுயேச்சைகளை வளைப்பது. போனைப் போட்டு, ஆளை அனுப்பி தனது பாணியில் சுயேச்சைகளுக்கு மஸ்கா அடித்துக் கொண்டிருக்கிறார் லாலு.

பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சியுடனும் காங்கிரஸ் தரப்பில் சிலர் பேசி வருகின்றனர். சீக்கியரான பிரதமருக்கு எதிராக வாக்களித்தால் கெட்ட பெயர் வரும் என்பதால், பாஜக கூட்டணியில் இருந்தாலும் இதுவரை எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளது அகாலிதளம்.

இப்படியாக தனது அரசியல் பிரச்சனைகளை மற்றவர்கள் கவனித்துக் கொள்ள, பிரதமர் முழுக்க முழுக்க அணு ஒப்பந்த விஷயத்தில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

எல்லோரும் ஐஏஇஏ.. அய்யயோ என்று கத்திக் கொண்டிருக்க, NSGல் (Nuclear supply group) இந்த ஒப்பந்தத்தை சேதாரமில்லாமல் காப்பாற்றுவது எப்படி என்ற பயம் தான் பிரதமரிடம் மண்டிக் கிடக்கிறது.

ஐஏஇஏ ஒரு ஐ.நா. அமைப்பு. 1957ல் உருவாக்கப்பட்டது. இதில் இந்தியா உள்பட 144 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்புக்கு ஒரு இயக்குனர்கள் குழு உண்டு (Board of governors). இந்தக் குழுவில் 35 நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

இவர்கள் செப்டம்பரில் கூடும் ஐஏஇஏவின் General Conference கூட்டத்தின்போது நடத்தப்படும் தேர்தலில் தேர்வு செய்யப்படுகிறார்கள். 144 நாடுகளின் பிரதிநிதிகள் இவர்களை தேர்வு செய்வர். ஐஏஇஏவின் தலைமையகம் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ளது.

இந்தியாவின் சார்பில் ஐஎப்எஸ் அதிகாரியான டி.பி.ஸ்ரீநிவாசன் ஐஏஇஏ இயக்குனர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேற முதல் படி ஐஏஇஏ தான். இந்த ஏஜென்சி போடும் பாதுகாப்பு நிபந்தனைகளை இந்தியா அமலாக்க வேண்டும்.

அந்த வகையில் தான் முதலில் ஐஏஇஏவிடம் ஒரு ஒப்பந்தத்துக்கு இந்தியா தயாராகி வருகிறது. இதற்காக இந்த அமைப்பின் இயக்குனர் குழுவில் உள்ள நாடுகளிடம் இந்தியா தனது வரைவு ஒப்பந்தத்தை (Draft proposals) தாக்கல் செய்தது.

(நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்துவிட்டுத் தான் இந்த வரைவு ஒப்பந்தத்தை ஐஏஇஏவிடம் தருவோம் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இடதுசாரிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தபோதே.. இதை ஐஏஇஏவிடம் தந்துவிட்டார் பிரதமர். இதனால் தங்களுக்கு மட்டுமல்ல, முகர்ஜிக்கும் பிரதமர் நோஸ் கட் செய்துவிட்டார் என்பது இடதுசாரிகளின் புதிய புகார்.

மேலும் ஐஏஇஏவிடம தந்த நமது வரைவு ஒப்பந்தம் எப்படி சில அமெரிக்க Think tank-களின் இணையத் தளத்தில் 7ம் தேதியே வெளியானது என்பதற்கும் மத்திய அரசிடம் பதிலில்லை. அவற்றில் ஒப்பந்த விவரம் வெளியானதையடுத்தே இந்திய வெளியுறவு அமைச்சகததின் தளத்தில் நேற்று அது வெளியிடப்பட்டது என்கிறார்கள் காம்ரேடுகள் கோபத்துடன்..)

இந்தியாவின் வரைவு ஒப்பந்தத்தை ஐஏஇஏ ஆய்வு செய்து, திருத்தங்கள் சொன்னால் அதையும் செய்து, எந்தெந்த அணு உலைகளை ஐஏஇஏவின் கண்காணிப்பில் விடப் போகிறோம் என்பதையும் நாம் விளக்கியாக வேண்டும்.

இந்த வேலைகளை முடித்த பின், ஐஏஇஏ இயக்குனர் குழு, ஒப்பந்தத்துக்கு முன் வரும். ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு ஐஏஇஏவின் இயக்குனர் குழு தங்களது General Conference கூட்டத்தில் அனுமதி பெற வேண்டும். (இந்தக் கூட்டம் அடுத்த மாதம் கூடவுள்ளது.. இப்போது புரிகிறதா பிரதமர் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என்று..!)

ஐஏஇஏவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இந்தியா ஏதோ இப்போது தான் பேச ஆரம்பித்திருப்பதாகக் கருத வேண்டாம். இடதுசாரிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் கடந்த 2 வருடங்களாக ஐஏஇஏ டைரக்டர் ஜெனரல் முகம்மத் அல் பாரடாயுடன் பல சுற்று பேச்சு நடத்திவிட்டனர் இந்திய அணு சக்தித்துறையின் டாப் விஞ்ஞானிகளான டாக்டர் ஆர். சிதம்பரமும் டாக்டர் அனில் ககோட்கரும்.

மேலும் ஆண்டுதோறும் ஐஏஇஏவின் General Conference கூட்டத்தில் பங்கேற்கும் இந்தியக் குழுவுக்கு தலைமை ஏற்பது இந்திய அணு சக்திக் கமிஷனின் தலைவராக இருப்பவர் தான். இப்போது இந்தப் பதவியில் இருப்பவர் ககோட்கர் தான். இதனால் ஐஏஇஏ இயக்குனர் குழு- டைரக்டர் ஜெனரல் ஆகியோருடன் இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஏற்கனவே பேசி வைத்துள்ளது இந்தியா.

ஆனாலும், ஐஏஇஏவில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு நாடுகளும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளும் இதே போன்ற ஒரு ஒப்பந்தத்தை ஏன் பாகிஸ்தான்-இஸ்ரேலுடன் செய்யக் கூடாது என கேள்வி எழுப்பலாம்.

இதைத் தாண்டித்தான் ஐஏஇஏவில் இந்த ஒப்பந்தம் தப்பிக்க வேண்டும்.

இதையடுத்து இந்தியா நேராக போக வேண்டிய இடம், ஆஸ்திரியாவின் அண்டை நாடான ஜெர்மனி. இங்கு தான் NSG நாடுகளிடம் இந்தியா பேசியாக வேண்டும்.

இது தான் ஐஏஇஏவுடனான ஒப்பந்தத்தை விடவும் மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது என்கிறார்கள்.

இந்த சவாலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவும் உறுதுணையாக நின்றாலும், இது அவ்வளவு எளிதான காரியமல்ல.

அணு ஆயுத பரவல் சட்டத்தில் (Nuclear non-porliferation treaty-NPT) கையெழுத்திடாத எந்த ஒரு நாட்டுக்கும் எரிபொருள் தருவதில்லை என்பது தான் NSG அமைப்பின் அடிப்படை விதி.

ஆனால், NPTல் கையெழுத்திடாத இந்தியா தனக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்குமாறு NSG இடம் கோர வேண்டும். ஏன் இந்தியாவுக்கு மட்டும் விலக்களிக்க வேண்டும் என இங்கும் கேள்விகள் எழலாம்.

ஏற்கனவே பாகிஸ்தானும், இஸ்ரேலும் எரிபொருள் வர்த்தகம் தொடர்பாக என்எஸ்ஜியிடம் சென்றபோது அவர்களை 'குதறி' எடுத்துவிட்டனர். இதே நிலை நமக்கும் வரலாம்.

ஆனால், இதி்ல் முக்கிய உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியோருடன் நமக்கு மிகச் சிறந்த நல்லுறவு நிலவுவதால் அவர்களை நம்மைக் காப்பற்றலாம்.

குறிப்பாக ரஷ்யா. நாம் ஐஏஇஏவுடன் செய்து கொண்டுள்ள வரைவு ஒப்பந்தத்தை முன் கூட்டியே என்எஸ்ஜி நாடுகளிடமும் 'சர்குலேட்' செய்யுமாறு இந்தியாவை ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் இந்தியா தொடர்பான என்எஸ்ஜி நாடுகளின் சந்தேகங்களை தீர்க்க தானும் உதவுவதாக உறுதியளித்துள்ளது.

மேலும் அணு ஆயுத பரவல் சட்டத்தில் கையெழுத்திடாவிட்டாலும் ஆயுத பரவல் விஷயத்தில் இந்தியா எவ்வளவு பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டுள்ளது என்பதை என்எஸ்ஜி நாடுகளிடம் அமெரிக்கா விளக்க ஆரம்பித்துள்ளது. இந்த வேலையை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் முல்போர்ட் செய்து வருகிறார்.

இதன்மூலம் என்எஸ்ஜியின் விதிகளில் இருந்து இந்தியாவுக்கு சலுகையை பெற்றுத் தர அமெரிக்கா முயன்று வருகிறது.

ஆனாலும் என்எஸ்ஜி நாடுகள் தரும் எரிபொருளை இந்தியா ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தாது என்பதை உறுதி செய்ய என்எஸ்ஜி சில நிபந்தனைகளைப் போடலாம்.

குறிப்பாக சீனாவிடமிருந்து இந்த நிபந்தனை வரலாம். இந்தியாவுக்கு தரும் சலுகையை ஏன் பாகிஸ்தானுக்கும் தரக் கூடாது என சீனா கேள்வி எழுப்பலாம்.

சீனாவோடு மேலும் சில நாடுகளும் கூட்டணி போட்டுவிட்டால்.. சிக்கல் மேலும் அதிகரிக்கலாம். இதை இந்தியா சமாளித்தாக வேண்டும்.

இதன் பின்னர் இந்த ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குப் போகும்.

அங்கு ஒப்புதல் கிடைத்தால் தான் இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்தே போட முடியும்.

இந்த ஒப்பந்தம் நிறைவேற இத்தனை தடைகள் உள்ளன. கிட்டத்தட்ட 'ஹர்டுல்ஸ் ரேஸ்' மாதிரி.. இனி மிச்சமிருக்கும் பதவிக் காலத்தில், நம் பண வீக்கத்துடன் சேர்ந்து கொண்டு பிரதமரும் தாவித் தாவி ஓடிக் கொண்டே இருக்க வேண்டியது தான்...!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X