தேற்றான் கொட்டை.. மெலிந்தவரையும் தேற்றும்.. தேறாதவரையும் தேற்றிவிடும் தேற்றான்கொட்டை.. அருமை டிப்ஸ்
சென்னை: பலவீனமானவர்களையும் பலமாக்கும் கொட்டை எது தெரியுமா? உடல் தேறாதவர்களையும் தேற்றக்கூடிய கொட்டைதான், தேற்றான்கொட்டை. இதை எப்படி பயன்படுத்துவது?
தேற்றான் மரத்தினை, தேத்தான் மரம் என்றும் சொல்வார்கள்.. இந்த மரம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.. இந்த மரத்தில் இருந்து பெறப்படுவதே தேற்றான் கொட்டை...

பெரும்பாலும் இதை சித்த மருத்துவத்தில் பயன்படுத்துவார்கள். இந்த விதைகள் உருண்டையாக இருக்கும்.. இந்த மரத்தின் பழங்கள், விதைகளில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
கலங்கிய நீர்: அந்த காலத்தில், குடிநீர் ஆதாரங்களாக விளங்கக்கூடிய குளம், குட்டை, ஊருணிகள் போன்றவற்றில், கலங்கின தண்ணீரை தெளியவைக்கவே, இந்த தேற்றாங்கொட்டை பயன்படுத்தியிருக்கிறார்கள். சேறும் சகதியுமான நீரில், இந்த கொட்டையை இடித்து போட்டுவிட்டால், அந்த நீர் தெளிந்து சுத்தமாகிவிடுமாம்.
பானைகளில்கூட, இந்த தேற்றான்கொட்டையை தேய்த்து, தண்ணீரை ஊற்றி வைப்பார்கள். சிறிது நேரத்தில், அழுக்குகள், கிருமிகள் எல்லாம் நீங்கி, சுத்தமான தண்ணீர் கிடைக்கும். இந்த மரத்தின் காய்கள்தான், தேற்றான்கொட்டை என்பார்கள். இந்த கொட்டை கடினமாக இருக்கும் என்பதால், நேரடியாக பயன்படுத்த முடியாது.. இந்த காய்களை ஊறவைத்து, அந்த ஈரத்திலேயே அதை நசுக்கி, இடித்துதான், பயன்படுத்த முடியும்..
தேற்றான்கொட்டை: இப்போதும்கூட, நாட்டு மருந்து கடைகளில் தேற்றான் கொட்டைகள் கிடைக்கின்றன.. கலங்கல் நீரை தெளிய வைக்க வேண்டுமானால், பானையின் உட்புறமாக, இந்த கொட்டைகளால் தேய்த்து நீர் நிரப்பினால் போதும், தூய்மையான குடிநீர் கிடைத்துவிடும். தண்ணீரை மட்டுமல்ல, உடலையும் தேற்றக்கூடியது இந்த கொட்டை.
உடலிலுள்ள சூட்டை அகற்றக்கூடியது இந்த கொட்டை.. சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு, வயிற்றுக்கடுப்பு போன்ற கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது...
நீரிழிவு நோயாளிகள்: நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த தேற்றான்கொட்டை சிறந்த தேர்வாக உள்ளது.. நீரிழிவால் பாதிக்கப்பட்டு கண் பார்வை, கண் நரம்பு பிரச்சனை இருப்பவர்கள், உடல் மெலிந்திருப்பவர்கள், இந்த பொடியை பயன்படுத்தலாம். இந்த கொட்டையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால், கஷாயம் போல வைத்து குடிக்கலாம். இதனால், நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படும்.
பால்வினை நோயால் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடியது இந்த தேற்றான்கொட்டை.. ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்க இந்த தேற்றான்கொட்டையில் ஸ்பெஷல் லேகியம் தயாரிக்கப்படுகிறது.
கொழுப்பை கரைக்கும் தன்மை இந்த கொட்டைகளுக்கு உள்ளது.. இதனால், இதயநோய், பக்கவாதம் போன்ற அபாய நோய்களும் தடுத்து நிறுத்தப்படுகின்றன.. இதை லேகியமாக செய்து சாப்பிட்டால், உடல் எடை கூடி, பலம் அதிகரிக்கும். சிறுநீரக கோளாறுகளை சரி செய்கிறது.
தேற்றான் கொட்டை பவுடர், தேற்றான் கொட்டை லேகியம், தேற்றான்கொட்டை சூரணம் என்றும் தனியாக கடைகளில் கிடைக்கிறது. இவைகள் ஒவ்வொன்றும் பல்வேறு பலன்களை தரக்கூடியது.. எனவே, முறையான சித்த மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் உட்கொள்ளக்கூடாது.












Click it and Unblock the Notifications