Qdenga: இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி கியூடெங்கா! கடையநல்லூரில் சோதனை முயற்சி!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான கியூடெங்கா (Qdenga), சோதனை முயற்சியாக அப்பகுதி மக்களுக்கு செலுத்தப்படுகிறது. இது டெங்கு வைரஸுடன் எதிர்த்து போராடும் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே இதன் தாக்கம் அதிகம் இருந்தது, தற்போது மழை தொடங்கிய நிலையில் பாதிப்பு எப்படியிருக்குமோ என அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

Dengue Vaccine

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் இதுவரை 21,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் பலியாகிவிட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டு அங்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

வடகிழக்கு பருவமழை

தற்போது வடகிழக்கு பருவமழை வேறு தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக அரசு டெங்குவை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கொசு ஒழிப்பு தடுப்பு பணிகளையும், தினசரி காய்ச்சல் முகாம்களையும் நடத்தி வருகிறது.

டெங்கு வைரஸ் எப்படி உருவாகிறது

மேலும் டெங்கு வைரஸ் எப்படி உருவாகிறது, எந்த வகை கொசுக்களால் வைரஸ் உடலினுள் செல்கிறது, டெங்கு வராமல் தடுப்பது எப்படி? அப்படியே வந்தாலும் உயிரிழக்கும் அபாயத்தை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வுகளையும் அரசு ஏற்படுத்தி வருகிறது.

டெங்கு அறிகுறிகள்

டெங்கு காய்ச்சல் வந்தால் 103 டிகிரி பாரன்ஹீட் வரை காய்ச்சல், தலைவலி, வாந்தி, சிறுநீரில் ரத்தம், பல் ஈறுகளில் ரத்தம் கசிதல், உடலில் அரிப்பு, ஆங்காங்கே சிவப்பாக வீங்குதல் உள்ளிட்டவை அறிகுறிகளாகும்.

ஏடீஸ் கொசுவை தடுப்பது எப்படி?

பொதுவாக டெங்கு காய்ச்சல் பகலில் கடிக்கப்படும் ஏடீஸ் வகை கொசுக்களால் ஏற்படும். இவரை பெரும்பாலும் தேங்கியுள்ள தண்ணீரில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இதனால்தான் டயர்கள், தண்ணீர் தொட்டிகள், பூத்தொட்டிகள், உடைந்த பக்கெட்டுகள், உரல் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்கவிடக் கூடாது.

டெங்கு வைரஸ் எத்தனை வகைப்படும்?

பொதுவாக டெங்கு வைரஸ் 4 வகைகளை கொண்டது. DENV-1, DENV-2 , DENV-3 மற்றும் DENV-4 ஆகிய 4 வகைப்படும். இதில் மிகவும் மோசமானது 2ஆம் வகைதான். இதுதான் உயிரிழப்பை ஏற்படுத்தும். இப்படி ஆண்டுதோறும் டெங்குவுக்காக மக்கள் பாதிக்கப்படுவது, உயிரிழப்பதை தடுக்கும் விதமாக இந்தியாவின் முதல் தடுப்பூசி கியூடெங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

யார் தயாரிப்பது?

ஜப்பான் நாட்டை சேர்ந்த மருந்து நிறுவனம் இந்த தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டீஸ் (Dr Reddy's) மருந்து நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்கிறது. கடந்த ஜூலை மாதம் இந்த தடுப்பூசிக்கான ஒப்புதலை இந்திய மருந்துகள் கட்டுப்பாடு வாரியம் அளித்தது. இந்த ஊசியை 4 வயது குழந்தைகள் முதல் 60 வயது முதியவர்கள் வரை பயன்படுத்தலாம். இந்த தடுப்பூசி 2027 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவருக்கு 3 மாதம் அல்லது 6 மாத இடைவெளிகளில் 2 டோஸ்களை போட வேண்டும்.

தடுப்பூசியின் விலை

இந்த மருந்தின் விலை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் இதன் விலை ஒரு டோஸ் ரூ 2000 முதல் ரூ 3000 வரை இருக்கலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் கியூடெங்கா தடுப்பூசி சோதனை முயற்சியாக தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் எத்தனையோ ஊர்கள் இருக்க, ஏன் கடையநல்லூரில் சோதனை முயற்சி தொடங்குகிறது என்பதை பார்க்கலாம்.

கடையநல்லூரில் ஏன் சோதனை?

டெங்கு தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பது கடையநல்லூர் பகுதியாகும். இதனால்தான் இங்கு சோதனை முயற்சி நடைபெறுகிறது. நோய் பரவல் அதிகம் உள்ள இந்தப் பகுதிகளில் மக்களுக்கு தடுப்பூசி போட்டால் அது எவ்வாறு செயல்படுகிறது, அதன் ஏற்புத் திறன், பக்கவிளைவுகள் ஏதேனும் வருகிறதா போன்ற விவகாரங்களை அறிந்து கொள்ள இந்த சோதனை முயற்சி நடைபெறுகிறது.

அப்போது கண்டறியப்படும் நடைமுறை சவால்களை எதிர்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். டெங்கு தடுப்பூசியில் வீரியம் குறைந்த 2ஆம் வகை டெங்கு வைரஸின் வடிவத்தை கொண்டு உருவாக்கப்பட்டு உடலில் செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி என்றால் என்ன?

மொத்தம் உள்ள 4 வகைகளில் 2ஆம் வகைதான் உயிரிழப்பை ஏற்படுத்தும். இதனால் இந்த வைரஸை தடுப்பூசியில் பயன்படுத்தியுள்ளார்கள். இந்த தடுப்பூசியில் உள்ள வைரஸ் உடலுக்குள் சென்றதும் ஏதோ அன்னிய பொருள் (foreign body) உள்ளே நுழைந்துவிட்டதாக கருதி நமது நோய் எதிர்ப்பு மண்டலம் ஆன்டிபாடிகளை உருவாக்கும். எதிர்காலத்தில் உண்மையிலேயே அந்த குறிப்பிட்ட வைரஸ் கிருமி நம் உடலில் நுழைந்துவிட்டால் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ள ஆன்டிபாடிகள் அவற்றை அடையாளம் கண்டு அதை எதிர்த்து போராடும்.

இந்தியாவின் தடுப்பூசி

இதற்கிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் பனாசியா பயோடெக் ஆகியவை இணைந்து டெங்கி அல் (Dengi All) எனும் தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கும் கியூடெங்காவுக்கு வேறுபாடுகள் உள்ளன. டெங்கி அல், கடந்த 2024 ஆம் ஆண்டு 3ஆவது நிலை மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெங்கு தடுப்பூசியை தயாரிக்க பயன்படும் டெங்கு வைரஸ் மாதிரிகள் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்திடம் பல ஆண்டுளுக்கு முன்பு உருவாக்கியது. இதை பயன்படுத்திதான் இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+