குழந்தை நீதி கதைகள்: பொக்கிஷ பெட்டியில் இருந்தது தேளா? தங்கமா?
சென்னை: Kids story in Tamil: ஹாய் செல்லகுட்டிஸ், எப்படி இருக்கீங்க. தீபாவளியை சிறப்பா கொண்டாடுனீங்களா? யாரெல்லாம் பட்டாசு வெடிச்சீங்க, ம்ம் பலகாரம் சாப்பிட்டீங்களா? சரி இன்னைக்கு என்ன கதைன்னு படிச்சே தெரிஞ்சிக்கலாம். வாங்க கதைக்குள்ள போகலாம்.
முன்னொரு காலத்துல பாபு ஒரு ஊருக்கு சும்மா சுத்தி பாக்குறதுக்கு போனான். அவனுக்கு அந்த ஊரை அந்த ஊர் மக்களை மிகவும் பிடித்து போக நாம இங்கயே வீடு வாங்கி இருந்திடலாம்னு முடிவு பண்ணுனான். பாபு அவனுடைய சேமிப்பை எடுத்துக்கொண்டு அவனுக்குனு ஒரு வீட்டை தேடினான். அப்போதான் அந்த ஊரிலேயே ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி வசதியாக வாழ்ந்து வந்த சங்கரய்யா அவருடைய முன்னோர்கள் வீட்டை விற்பதற்காக யோசித்து கொண்டிருந்தார்.

சங்கரைய்யா, பாபுவிடம் வீட்டை விற்க முடிவு செய்தார். சங்கரைய்யாவிற்கு தலைக்குமேல் கடன் ஏறியதால் அவரது கடைசி சொத்தான அவரது முன்னோர்கள் கொடுத்த வீட்டையும் விற்று விட்டு குடும்பத்துடன் அந்த ஊரை காலி செய்தார். வீட்டை விற்ற பணத்தை வைத்து கடன்களை அடைத்துவிட்டு எஞ்சிய பணத்தில் வேறு ஊரில் வாழ முடிவு செய்து கிளம்பினார்கள்.
பாபு அந்த பழைய வீட்டை சரி செய்ய ஆரம்பித்தான். அந்த வீட்டின் ஒரு பகுதியை கடையாக மாற்றினான். வீட்டை சரி செய்யும்போது அவனுக்கு ஒரு பெட்டி கிடைத்தது. அது கொஞ்சம் பழைய காலத்து பெட்டிகளின் வகையறாவில் இருந்தது. நன்றாக பொதிந்து முத்திரை பதித்து வைத்திருந்தது. பாபு அதில் என்ன இருக்கும் என்ற ஆர்வத்தில் திறந்தால் சட்டென ஒரு தேள் அவனை கொட்டியது. கையில் இருந்த பெட்டியை தவறவிட்டான். அந்த அறை முழுக்க தேள்கள் அங்கும் இங்கும் தெறித்து ஓடின. அந்த பெட்டியில் வேறு எதுவுமே இல்லை. இதை எதற்காக புதைத்து வைத்துள்ளார்கள் என எண்ணினான்.
அவன் கண் மூடி திறப்பதற்குள் அத்தனை தேள்களும் அந்த பெட்டிக்குள் மீண்டும் சென்றன. பாபு பெட்டியை அப்படியே மூடி வைத்துவிட்டு அங்கிருந்து சென்றான். அவனது திருமணம் முடிந்து கொஞ்ச நாட்கள் ஆனது. இருந்தாலும் அவனுக்கு தேள்களை ஏன் இப்படி பாதுகாத்து வைத்துள்ளார்கள் என்ற எண்ணமே அதிகமாக இருந்தது. அந்த ஊரில் இருந்த ஒரு வயதானவரை சந்தித்து நடந்தவற்றை கூறினான்.
அவரும் அது, முன்னோர்கள் தங்களது வாரிசுகள் பிற்காலத்தில் கஷ்டப்பட்டால் உதவும் என்பதற்காக தங்கள் முறைப்படி சில தங்க பொற்காசுகள், நகைகள் போன்றவற்றை எடுத்து ஒரு பெட்டியில் இப்படி வைப்பார்கள். அதை தங்கள் வாரிசுகளிடமும் சொல்லி விடுவார்கள். ஒருவேளை கடன் சுமையால் சங்கரய்யா அதை மறந்திருக்கலாம் என்று சொன்னார் அந்த வயதானவர். அப்படியென்றால் இதை சங்கரய்யா வாரிசுகள் தவிர வேறு யாராலும் உபயோகிக்க முடியாதா என்றான் பாபு. அந்த பெரியவரும் ஆமாம், அவரது ரத்த உறவுகள் கண்களை தவிர வேறு எல்லாருடைய கண்ணுக்கும் அது தேளாகத்தான் தெரியும் என்றார்.
சங்கரய்யா, பாபுவிடம் வீட்டை விற்கும்போது அவரது கண்களில் வழிந்த கண்ணீரை நினைத்து வருந்தினான். இதை அவர்களுக்கு சேர்க்க எண்ணினான். ஆனால் அவர்கள் பற்றிய எந்த தகவலும் அவனிடமும் இல்லை, வேறு யாருக்கும் தெரியவில்லை. அதனால் பாபு நான்கு தேள்களை அந்த பெட்டியில் இருந்து எடுத்து வந்து தனது கடையின் நாலாபுறமும் வைத்தான்.
ஊர் மக்கள் அவனை திட்ட ஆரம்பித்தார்கள். இப்படி தேள்களை வெளியே வைத்தால் உன் கடையில் யார் வந்து வாங்குவார்கள், பயந்து ஓடிவிடுவார்கள் என்றனர். பாபு எதையும் காதில் வாங்கி கொள்ளவில்லை. தேள்கள் எதுவும் செய்யாததால் மக்களும் சகஜமாக மாறினார்கள். இந்த விஷயம் ஊரெங்கும் பரவியது. பாபுவிற்கு குடும்பம் குழந்தைகள் என சந்தோசமாக இருந்தாலும், அந்த புதையலை சங்கரைய்யாவிடமோ இல்லை அவர்களது வாரிசுகளிடமோ சேர்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது.
பாபு அவனால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்து வந்தான். அதனால் அவனிடமும் அந்த அளவுக்கு வருமானம் புரளவில்லை. ஒரு நாள் சிறுவன் ஒருவன் பாபுவின் கடைக்கு வந்தான். ஐயா உங்களை பற்றி பலரும் பேச கேள்வி பட்டிருக்கிறேன். எனது படிப்பை வறுமையின் காரணமாக எனது வீட்டில் நிறுத்தி விட்டார்கள். எனக்கு படிக்க ஆசையாக இருக்கிறது. உங்களால் முடியும் என்று சொன்னார்கள், உதவி செய்யுங்கள் என்றான். பாபு முன்பு போல் இருந்தால் கண்டிப்பாக அவனுக்கு உதவி இருப்பான். தற்போது அவனது சூழலும் சொல்லி கொள்ளும்படி இல்லை. அதனால் சிறுவனிடம் மன்னித்துக்கொள் இப்போது என்னால் முடியாது என்றான்.
சிறுவன், ஐயா நீங்கள் உதவுவீர்கள் என்று நம்பி வெகு தூரத்தில் இருந்து வந்துள்ளேன் என்றான். பாபுவிற்கு சங்கடமாக இருந்தது, இருந்தாலும் தன்னால் முடியாது என்பதை எடுத்து சொன்னான். சட்டெனெ சிறுவன் கோபமாக, கடையில் இப்படி நாலாபுறமும் தங்கத்தை வைத்து கொண்டு ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள், நீங்கள் உதவுவீர்கள் என்று சொன்னார்கள், அதெல்லாம் பொய்யா என்றான். பாபு ஒரு நிமிடம் தலைசுற்றி நின்றான்.
என்னது தங்கமா? உன் பேர் என்ன என்றான் பாபு. சங்கர் என்றான் சிறுவன். இந்த ஊரை பற்றி உனக்கு எதுவும் தெரியுமா? என்றான் பாபு. ஆமாம் என் தாத்தா ஊர் இதுதான் என்றான் சிறுவன். பாபுவிற்கு மகிழ்ச்சி கொப்பளிக்க, அப்போ சங்கரய்யாவின் பேரனா நீ ? என்றான். ஆமாம் வறுமையின் காரணமாக ரொம்ப காலங்களுக்கு முன்னாடி இங்கிருந்து நாங்கள் போனதாக எங்கள் தாத்தா கூறி இருக்கிறார். அவர் இறந்ததும் மிகவும் வறுமையில் சிக்கியதாக எனது அப்பாவும் கூறினார் என்றான் சிறுவன்.
பெரிய பாரமே குறைந்தது போல் உணர்ந்த பாபு, அந்த பெட்டியை எடுத்து சிறுவனிடம் கொடுத்தான். அதை திறந்த அவன் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான். அந்த பேட்டி முழுக்க தங்க நகைகள், காசுகள் என சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது. அவன் தேள்களை கண்டு மகிழ்ந்த பாபுவிற்கு புரிந்தது, அவனது பூர்வீக சொத்து அவனை சேர்ந்தது என்று. பாபு சிறுவனிடம் இது உன் தாத்தாவிற்கு சொந்தமானது, இந்த வீட்டை அவர் எனக்கு விற்கும்போது நான் அதை கண்டெடுத்தேன், ஆனால் என்னால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒருவழியாக இதை உங்களிடம் சேர்த்தது எனக்கு மகிழ்ச்சியை மன நிம்மதியை கொடுத்துள்ளது என்றான்.
சிறுவனும் பாபுவிற்கு நன்றியை கூறிவிட்டு தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ் தொடங்கினான்












Click it and Unblock the Notifications