தயவு செய்து திரும்ப வந்துடாதே.. காங்கிரஸ் கட்சியை பங்கம் செய்து மீம்ஸ் வெளியிடும் திமுகவினர்
சென்னை: 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு அழைத்தார். அப்போது கூட்டணி செல்லவே டெல்லி நிர்வாகிகள் ஆர்வம் காட்டினார்கள். அதேநேரம் தமிழக நிர்வாகிகள் தயக்கம் காட்டினார்கள். எனினும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் அதிக இடங்கள் கேட்டு பெற விஜய்யை பயன்படுத்தினார்கள். இப்போது வெற்றி பெற்ற மறுநாளே தவெக பக்கம் சாய்ந்துவிட்டனர். இதனால் கொதித்து போயிருக்கும் திமுகவினர், தயவு செய்து திரும்ப வந்துடாதீங்க.. என்று காங்கிரஸ் கட்சியினரை பங்கம் செய்து மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.
2026 சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு இருந்தே, அதாவது விஜய் கட்சி ஆரம்பித்த சில மாதங்களில் இருந்தே எப்படியாவது தவெக பக்கம் போக வேண்டும் என்பது டெல்லி காங்கிரஸ் மேலிடத்தின் ஆசையாக இருந்தது . ஆனால் சின்ன பையன் விஜய், அவரை நம்பி செல்வது சரியாக வராது என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தடை போட்டனர். அதேநேரம் பாதிக்கு பாதி தலைவர்கள் திமுக உடன் கூட்டணி தொடர்வதை விரும்பவில்லை. தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தபடி தான் இருந்தனர்.

திமுகவினர் கோபம்
இதனை பார்த்து கொதித்து போன திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள். இதில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் என்றால் மாணிக்கம் தாகூர் தான். மிக கடுமையான மொழியில் மதுரை திமுகவினர் விமர்சித்தால், பொங்கி எழுந்த மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுக்க தொடங்கினார். மறுபுறம் ஜோதிமணி உள்பட வரிசையாக காங்கிரஸ் நிர்வாகிகள் கோபத்தை வெளிப்படுத்த தொடங்கினார்கள். செல்வப்பெருந்தகை ஒருவரை தவிர பலர் திமுகவை நேரடியாக விமர்சிக்க தொடங்கினார்கள். இதனால் கோபம் அடைந்த திமுகவினர், முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து, காங்கிரஸ் கட்சியை கழட்டி விடுங்கள்.. போகட்டும்.. ஏன் இப்படி என்று கேள்வி எழுப்ப தொடங்கினார்கள்.
கடும் விமர்சனம்
காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் ஆட்சியில் பங்கு கேட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியினை கடுமையான சொற்களால் திமுக நிர்வாகிகள் விமர்சிக்க தொடங்கினார்கள். இதனால் கோபத்தின் உச்சிக்கு போன காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக நினைத்தே பார்க்காத அளவிற்கு விஜய்யை காட்டி அதிக சீட் கேட்டு பேரம் பேசினார்கள். எனினும் இதனை சமார்த்தியமாக சமாளித்த ஸ்டாலின், 28 தொகுதிகள் கொடுத்தார். அதேநேரம் திமுகவினரோ, களத்தில் வேலையே செய்யாமல் பல ஆண்டுகளாக எம்பி, எம்எல்ஏக்களை காங்கிரஸ் பெறுகிறது. இவர்களுக்கு 28 சீட் அதிகம் என்று விமர்சிக்க தொடங்கினார்கள்.
ஸ்டாலின் தடுத்தார்
எனினும் ஸ்டாலின் ஒருவரால் தான் திமுக காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வரை நீடித்தது. அவர் ஒருவர் வேண்டாம், காங்கிரஸ் கட்சிக்கு சீட் 28 சீட் தர முடியாது என்று கூறியிருந்தால், எப்போதோ கூட்டணி முறிந்திருக்கும். அவர் தான் கூட்டணியை அணுசரித்து போனார். ராஜ்யசபா சீட்டும் காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்து விஜய் கட்சியுடன் சேரவிடாமல் சமார்த்தியமாக தடுத்தார்.
தவெக பெரிய வெற்றி
ஆனால் சற்றும் எதிர்பாராத ஒன்றாக விஜய் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளார். பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். பல அமைச்சர்கள் தோற்று போயிருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினே தோற்றுப் போயிருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலருமே இந்த தேர்தலில் தோற்று போய்விட்டனர். அதிமுக 100 இடங்களுக்கு மேல் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.
துணை முதல்வர் பதவி மிஸ்ஸிங்
இப்படியான சூழலில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அப்போதே சிவப்பு கம்பளம் வைத்து தவெக வரவேற்றது.. போயிருந்தால் துணை முதல்வர் பதவி, 50 எம்எல்ஏக்கள் கிடைத்திருக்கும்.. இப்படி ஆகிடுச்சே என்று நொந்து கொண்டனர். தேர்தல் முடிவு வெளியான மறுநாளே தவெக பக்கம் சாய முடிவு செய்தனர். இன்று அதிகாரப்பூர்வமாக விஜய்யை சந்தித்து ஆதரவு தெரிவித்து கூட்டணி ஆட்சியில் பங்கேற்க முதல் ஆளாக பனையூர் சென்று விட்டார்கள்.
முதுகில் சவாரி செய்த காங்கிரஸ்
இதனை பச்சை துரோகம் என்று திமுகவினர் விமர்சிக்கிறார்கள். பல வருடங்களாக முதுகில் ஏறி சவாரி செய்த காங்கிரஸ், இப்போது முதுகில் ஏறி ஜெயித்தே அன்றே முதுகில் குத்தியிருக்கிறது என்று வேதனை தெரிவித்து வருகிறார்கள் திமுகவினர். அதேநேரம் தயவு செய்து திரும்ப வந்துடாதே என்று கிண்டல் செய்தும் திமுகவினர் மீம்ஸ் வெளியிடுகிறார்கள்.
திரும்பி வராதிங்கடா 😂🤣 pic.twitter.com/R8XcOO6dNV
— தூய துறவி (@VSK_Talks) May 6, 2026
பாஸ் என்ற பாஸ்கரன்
பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யா கோபித்துக் கொண்டு வீட்டை விட்ட செல்வார். அதனை பார்த்து அவரது அண்ணன் ஓடி வந்து பேச முயற்சி செய்வார். அப்போது ஆர்யா, தயவு செய்து கூப்பிடாதே.. நான் வர மாட்டேன் என்பார்.. அதற்கு ஆர்யாவின் அண்ணன், இந்த குடை, மழை பெய்கிறது.. இதனை காரணம் காட்டி வந்துவிடுவாய்.. அதனால் குடையை பிடி என்று கூறி, 'ஆல் தி பெஸ்ட்' கூறுவார். இந்த மீம்ஸ் போட்டு திமுகவினர் காங்கிரஸ் கட்சியை கலாய்த்து வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications