For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்

By Staff
Google Oneindia Tamil News

கே: பணம் மட்டும் ஒருவருக்கு நிம்மதியைத் தந்து விடுமா?

ப: தராது. நிம்மதியின்மையைத்தான் தரும். ஆனால் அந்த நிம்மதியின்மை தருகிற நம்பிக்கை அலாதியானது.

கே: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்! சரி, ஏழையின் அழுகையில்...?

ப: அரசியலைக் காணலாம்.

கே: மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதென்றால், 10 சதவிகித இட ஒதுக்கீடு போதும் என்கிறாரே முலாயம் சிங் யாதவ்.நீங்கள் என்ன அபிப்ராயப்படுகிறீர்கள்?

ப: அதிகம். அதில் பத்து குறைக்கலாம்.

கே: வாழப்பாடி ராமமூர்த்தியை ஒரு பொருட்டாகக் கருத வேண்டாம் என்று பிரதமர் வாஜ்பாய் சொன்னதாக டாக்டர்ராம்தாஸ் கூறுகிறாரே...?

ப: வாழப்பாடி ராமமூர்த்தி நாளைய தினமே, ஜனாதிபதியும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியும், ராமதாஸை சீரியஸாகஎடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று தன்னிடம் கூறியதாகச் சொல்லலாம்.

கே: அரசியல் என்பது குடும்பத் தொழில் போலவும், குடும்ப நிறுவனம் போலவும் ஆகிவிட்டது என்கிறாரே மத்தியஅமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்...?

ப: பெண்கள் இட ஒதுக்கீடு வரட்டும் அப்போது இந்த நிலை முழுமை பெற்றுவிடும். அரசியல்வாதிகளின் மனைவிகள்,தாயார்கள், சகோதரிகள், உறவுப் பெண்மனிகள்- ஆகியோர்தான், மூன்றில் ஒரு பங்கு ஆவார்கள். குடும்ப அரசியல் என்பதுஅப்போது பூரணத்துவம் பெறும்.

கே: வைகோ ஜெனீவா மாநாட்டில் பேசியது சர்ச்சைக்குள்ளாகியது குறித்து...?

ப: சந்திரிகாவை நேரடியாக எச்சரித்து வைகோ பேசியதாக செய்திகள் கூறினாலும், இதை அவர் மறுத்திருக்கிறார். ஆனால்அவருடைய அந்த மறுப்பிலிருந்தே கூட, பல சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன. தாட்சரோடு, சந்திரிகாவை ஒப்பிட்டடுவிட்டு,தீவிரவாதிகளுக்கு (கொலை செய்து முடிக்க) ஒருமுறை அதிர்ஷ்டம் அடித்தால் போதும் - உங்களுக்கோ தப்பிக்க மீண்டும்மீண்டும் தேவை என்று தாட்சருக்கு விடப்பட்ட எச்சரிக்கையை நினைவுறுத்தி பேசியதாக - வைகோவின் மறுப்பிலிருந்தேதெரிகிறது.

வைகோவின் விடுதலைப் புலி பாசம், இன்னமும் தொடர்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. அவருடைய புலி சகவாசம்,மத்திய அரசுக்கு பல தர்ம சங்கடங்களை ஏற்படுத்தக் கூடும். இது ஒரு புறமிருக்க, தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவுப்பிரசாரம் செய்பவர்கள் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? என்ற கேள்விதான் என் மனதில் பெரிதாகஎழுகிறது.

கே: குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன் பற்றி ஃபிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று தரக்குறைவாக விமர்சனம் செய்ததுபற்றியும், அதறகு உடனே அந்தப் பத்திரிக்கை மன்னிப்பு கேட்டது பறறியும் தங்கள் கருத்து...?

ப: அநாகரிகமான வாசகங்களைப் பிரசுரித்த பத்திரிக்கை மன்னிப்பு கேட்டு விட்டது என்பதால், இதோடு இதை விட்டுவிடுவதுதான் நல்லது. நமது பத்திரிக்கைகளும் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். நாராயணன் ஜனாதிபதியாகததேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவருடைய ஜாதியைக்ககுறிப்பிட்டு , அதனால் அவரது சாதனை என்ன என்பது போல பலபத்திரிக்கைகளும் எழுதின.

பல தலைவர்கள் இஷ்டப்படி பேசினார்கள். நாமே இப்படி நடந்து கொள்ளும்போது, அயல் நாட்டு பத்திரிக்கையை நொந்துகொள்வது என்ன நியாயம்? நாராயணன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது 9.7.97 துக்ளக் இதழில் நான் தெரிவித்தகருத்தின் ஒரு பகுதியை நினைவூட்ட விரும்புகிறேன்...

இவருடைய பல தகுதிகள் பற்றிப் பேசாமல், பலரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பது ஒன்றையே இவருடைய தகுதிபோல் சித்தரித்து வருந்த்த்தக்க விஷயம். நிர்வாக அனுபவம், அயல் நாட்டு விவகாரங்கள், படிப்பறிவு, கல்வித் துறையில்ஆர்வம், கண்ணியம் - என்ற பல தகுதிகள் இவருக்கு இருக்கின்றன. இதனால் தான் இவரை ஆதரிக்கிறோம் என்று பல கட்சித்தலைவர்களும் கூறியிருந்தால், அது நாராயணனுக்குப் பெருமையாக இருந்திருக்கும். ஜனாதிபதி பதவிக்கும் கெளரவமாகஇருந்திருக்கும். அதைவிட்டுவிட்டு, அவருடைய ஜாதி பற்றியே பேசி, ஜாதித் தகுதி மட்டுமே ஜனாதிபதி பதவிக்குப் போதும் -என்பது போல் பல தலைவர்களும், பத்திரிக்கைகளும் கருத்து தெரிவித்தது வந்தது, துரதிர்ஷ்டம்.

இது நாராயணன் அவர்களுடைய குற்றம் அல்ல. ஜாதியை வைத்தே ஆதாயம் தேட முனையும் அரசியல் கட்சிகளின் குற்றம் இது.

கே: சோ அண்ணனே! உங்கள் பின்னால் என்னைப் போல் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கும்போது, நீங்கள் ஏன் ஒருகட்சி ஆரம்பிக்கக்கூடாது?

ப: வேண்டாம். எப்போது அண்ணன் என்று ஆரம்பித்து விட்டீர்களோ- எனக்கு சமாதி கட்டும் வரை நீங்கள் ஓய மாட்டீர்கள்.சமாதி அடைய எனக்கு ஒரு அவசரமும் இல்லை.

கே: டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு உயர் நீதி மன்றம்அளித்த சாசகமான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் முற்றிலும் ரத்து செய்துவிட்டது பறஅறி...?

ப: வழக்கின் தன்மை பற்றியோ, அதில் எழுப்பப்பட்ட சட்ட நுணுக்கங்கள் பற்றியோ சுப்ரீம் கோர்ட் எதுவும் கூறியுள்ளதாக -பத்திரிக்கைச் செய்திகளிலிருந்து தெரியவில்லை. விசேஷ நீதிமன்றத்தில் வழக்கு பெரிதும் நடந்துள்ள நிலையில், உயர் நீதி மன்றந்தலையிட்டிருக்கக்கூடாது: ஆகையால் உயர் நீதிமன்ற உத்திரவு ரத்தாகிறது: வழக்கு விசேஷ நீதிமன்றத்தில் தொடர்ந்துநடைபெறட்டும் என்றுதாந் சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது. ஆகையால் ஏற்கனவே ஜெயலலிதா தரப்பில்எழுப்பப்பட்டஆட்சேபனைகள் பற்றி, சுப்ரீம் கோர்ட் என்ன கூறக்கூடும்- என்பது இப்போது சொல்ல முடியாதது. (அந்தஆட்சேபங்கள் பற்றி என் கருத்தும், ஜெயலலிதா தரப்பு கருத்தும், துக்ளக்கில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன.)

கே: சத்துணவு ஊழியர்கள் விஷயத்தில் (அரசு ஊழியராக்குதல்), முதல்வர் கருணாநிதி இத்தனை அடம் பிடிப்பது சரியா?

ப: சத்துணவு ஊழியர்கள், முழு நேர ஊழியர்கள் அல்ல - என்பதுதான் இன்றுவரை உள்ள நிலை. தினமும் ஒரு சில மணிகளேஅவர்களுடைய பணி நடக்கிறது. ஆகையால் அவர்களை முழுநேர அரசு ஊழியர்களாக ஆக்க, அரசு மறுப்பதில் நான் தவறுகாணவில்லை. இப்போது இருக்கிற அரசு ஊழியர்கள் எல்லாம் முழு நேரமும் பணி செய்கிறார்களா? என்று கேட்டு விடாதீர்கள்.இவர்களுக்கு முழு நேர வேலை இருக்கிறது - அவர்கள் செய்யவதில்லை. சத்துணவு ஊழியர்களுக்கு அப்படிப்பட்ட வேலைஇல்லை.

கே: அரசியலையும், பெண்களையும் விமர்சிப்பதைத் தவிர வேற என்ன உங்களுக்குத் தெரியும்?

ப: அர்த்தமற்ற கேள்விகளுக்கக் கூட பதில் சொல்லத் தெரியும்.

கே: விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரும் எதிர்க் கட்சியினரின் போராட்டம் குறித்து...?

ப: இந்தக் கோரிக்கையில் சற்றும் நியாயமில்லை. இம் மாதிரி பெறப்படுகிற கடன் - பொதுச் சொத்திலிருந்து பெறப்படுவது:அதைத் திருப்பித் தர மறுப்பது மக்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி. இம் மாதிரி கடன்கள் ரத்து செய்யப்பட்டால் - கடன் வாங்கிவிட்டால், கவலையே இல்லை: பிறகு ஒரு நிலையில் அது ரத்தாகி விடும். இம்மாதிரி நியாயமற்ற கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளின் கண் மூடித்தனமான ஆதரவு கிட்டுவது துரதிர்ஷ்ட்டவசமானது. தி.மு.க. எதிர்த்தரப்பில் இருந்தாலும், இதே போலகடனை ரத்து செய் என்றுதான் கோஷம் எழுப்பியிருக்கும். இன்ற தி.மு.க. ஆளும் கட்சியாக இருப்பதால், மற்ற கட்சிகள் இந்தப்பணியைச் செய்கின்றன. அரசின் நியாயமான நிவைலகளைக் கூட எதிர்ப்பது - என்ற எதிர்க் கட்சிகளின் இந்தப் போக்கு, நமதுஜனநாயக அமைப்பில் தோன்றிவிட்ட பொறுப்பற்ற தன்மையைத்தான் காட்டுகிறது.

கே: ஆண், பெண் வேறுபாடு இன்றி புற்றீசல் போல் போலிச் சாமியார்கள் உருவாகி வருவது குறித்து...?

ப: ஒரே ஒரு குறைதான். அலி சாமியாரின் மோசடி என்று ஒரு பரபரப்பை இன்னமும் காணோமே?

கே: பெற்ற தாய், பிள்ளையைக் கண்டிப்பதைப் போல நடவடித்கை எடுப்பதும், பிறகு அரவணைப்பதும் எனக்குமகிழ்ச்சியைத் தருகிறது என்கிறாரே ஜெயலிலதாவால் பதவி நீக்கப்பட்ட சத்தியமூர்த்தி. இது பற்றி...?

ப: சொத்து இல்லாத தாயாராக இருந்தால் முதியோர் இல்லத்திற்கு அனுப்பி விடலாம். சொத்து உள்ள தாயாராக இருக்கும் போது,இப்படியெல்லாம் பாசத்தைக் கொட்ட வேண்டியதுதான். வேறு வழியில்லை.

கே: உ.பி. மாநிலத்தில் சிறுபான்மையினரினர் மீது நடந்த தாக்குதல் - தற்செயலானதா, திட்டமிட்டு செய்யப்பட்டதா?

ப: இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் ஹிந்து அமைப்புகளைச் சார்ந்தவர்களா? அந்த அமைப்புகள் திட்டமிட்டு இச் செயலில்ஈடுபட்டனவா? என்பதெல்லாம் இன்னமும் - முழுமையாகத தெளிவாகவில்லை. ஆனால், மைனாரிட்டி கமிஷனே நேரில் சென்றவிசாரித்து, இதில் மத விரோதம் எதுவும் இல்லை என்றும், சமூக விரோதிகளின் சட்ட விரோதச்செயல்கள்தான் இவை என்றும்அறிக்கை கொடுத்துள்ளது. இந்த மாதிரி அராஜகத்தைச் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.தவிர, இம்மாதிரி அநாகரிக நிகழ்ச்சிகள் நடக்காமல் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்எடுக்க வேண்டும்: அம் மாநில அரசுகள் இப்படி செயல்படா விட்டால், மத்திய அரசு அந்த மாநில அரசுகளை எச்சரித்து,அவற்றை செயல்பட வைக்க வேண்டும். மத்தியில் பா.ஜ.கவினர் ஆட்சியில் அமர்ந்ததால்தான், ஹிந்து அமைப்புகளுக்குமைனாரிட்டிகளை தாக்கினால் தங்கள் மீது எந்த நடவடிக்கையும் வராது என்ற துணிவு வந்து விட்டது என்ற எண்ணம் பரவிவருகிறது. இது பா.ஜ.க.வுக்கும் நல்லதல்ல: மத்திய அரசுக்கும் நல்லதல்ல

கே: உங்களுடைய ஆதர்ச விளையாட்டான கிரிக்கெட். இப்படி சிதைக்கப்பட்டதில் உங்களுக்கு வருத்தம் ஏதேனும் உண்டா?

ப: கிடையவே கிடையாது. ஒரே பெருமையாக் இருக்கிறது. கால்காசு பெறாத ஆட்டம் என்று சொல்பவர்களின் வாய்கள்அடைக்கப்பட்டுவிட்டனவே!

கே: பத்திரிக்கைகளில் செய்திகளை தவறாகப் போட்டுவிட்டு திருத்தம் வெளியிடுவதற்கும், அரசியல்வாதிகள் ஒன்றைபேசிவிட்டு பிறகு மறுப்பு தெரிவிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ப: தவறை ஒப்புக் கொள்வது- மனம் வருந்தி மன்னிப்புக் கோருவது: மறுப்பு வெளியிடுவது - தவறே செய்யவில்லை என்றுபிடிவாதம் பிடிப்பது. பத்திரிக்கைகள் செய்வது முதலாவது: அரசிய்ல்வாதிகள் செய்வது இரண்டாவது.

கே: கிரிக்கெட் வீரர்களின் ஊழல் குறித்து அரசியல்வாதிகள் என்ன நினைப்பார்கள்?

ப: சே! நமக்கு கிரிக்கெட் ஆடத் தெரியாமற் போய்விட்டதே!

கே: ராஜீவ் காந்தி கொலையாளிகளில் ஒருவருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க, தமிழக அரசுசெய்த பரிந்துரை மனிதாபிமான அடிப்படையில்தான்- என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது பற்றி...?

ப: இது மனிதாபிமானம் அல்ல: புலியாபிமானம்.

கே: மற்ற துறைகளில் பிரகாசிக்கும் பெண்கள், அரசியலில் மட்டும் சோடை போவார்களா என்ன? என்று அமெரிக்க அதிபர்பில் க்ளிண்டனின் மனைவி ஹிலாரி க்ளிண்டன் கூறியிருப்பது பற்றி...?

ப: ஹிலாரி க்ளிண்டன் சமீபத்திய தமிழகத்து சாமியாரிணி பற்றிய செய்தியை படித்திருப்பார். திருட்டுச் சாமியார் தொழிலிலேயேபெண்கள் சோடை போகாத போது, அரசியலில் நிச்சயமாக சோடை போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு வந்திருக்கும்.

கே: தமிழக ஆட்சியை மீண்டும் ஜெயலலிதாவிடம் கொடுத்தால் ருசி கண்ட பூனையாகசெயல்படுவாரா? சூடு கண்டபூனையாக செயல் படுவாரா?

ப: எந்த பூனையாயா இருந்தால் என்ன? பூனை, பூனைதான்.அதற்கு மணி கட்டாத வரை, எலிகளுக்கு நிம்மதி கிடையாது. மக்கள்-எலிகள்.

கே: ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ரத்து செய்து ஆயுள் தண்டனையாக்கியதுபறறி...?

ப: இந்தப் பெண்மணியின் தூக்கு தண்டனை ரத்தாகக்கூடும்-என்ற என் சந்தேகத்தை ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன்.பெண்மையின் மீது கருணை- குழந்தையின் நிலை பற்றிய கவலை -மனிதாபிமானம் -என்ற போர்வைகளும், முகமூடிகளும்அணிந்து விடுதலைப் புலி ஆதரவு என்ற பயங்கரமே பவனி வருவதாக நான் நினைக்கிறேன். இத்தனை வயதுக்குள் உள்ளகுழந்தையை உடையவர்கள், கொலை செய்தாலும் கூட, கொலைக்கு உடந்தையாக இருந்தாலும் கூட-அவர்களுர்க்கு இன்னின்னதண்டனைகள் கிடையாதது என்று சட்டம் இயற்றுவார்களா இவர்கள்? பின் ஏன் இந்த கருணை? ராஜீவோடு சேர்ந்து இறந்த 17பேர்களின் குழந்தைகள் பற்றி இந்த அக்கறை இவர்களுக்கு வந்ததாகத் தகவலே இல்லையே? ஆகையால் இப்போதது ஒருகுழந்தைக்குக்க காட்டப்படுகிற பரிவு - புலிகளுக்குக் காட்டப்படுகிற சலுயைே தவிர வேறில்லை.

கே: அடிப்படை உரிமை: தார்மீக உரிமை: ஜனநாயக உரிமை- இவற்றுக்கு அரசியல் ரீதியான விளக்கம் தரவும்.

ப: ஜெயலலிதாவினால் வெளியேற்றப்படுகிறவர்கள், வேறு கட்சிக்குப் போவது- அவர்களுடைய அடிப்படை உரிமை:ஜெயலலிதா குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வது அவர்களுடைய தார்மீக உரிமை: இத்தனை நாள் இல்லாமல் இப்போதுதான்ஜெயலலிதாவை புரிந்து கொண்டது போல் பாவனை செய்து பேசுவது - அவர்களுடைய ஜனநாயக உரிமை.

கே: பழைய பேப்பர் வாங்குபவர் துக்ளக்கை மட்டும் வாங்க மறுக்கிறார்: காரணம் கேட்டால் துக்ளக்கை கிழிக்க மனம்வரவில்லை என்றும், தான் பெரிதும் மதிப்பவர்களில் சோவும் ஒருவர் என்றும் கூறுகிறார். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப: இதில் என்ன சந்தோஷம் வேண்டிக் கிடக்கிறது? எதுவும் தராமல் கழித்துக் கட்ட நினைப்பவர்களைப் பார்த்து கருணாநிதி என்இதயத்தில் இடம் தருகிறேன் என்று கூறுகிற மாதிரி இருக்கிறது. ஒரு பிரயோஜனமும் இல்லை.

கே: அதிக லஞ்சம் வாங்குபவர்களை லஞ்சப் பேய் என பேயுடன் ஒப்பிடுவது ஏன்?

ப: சில ஒற்றுமைகள் இருக்கின்றனவே! பேயை விரட்ட பூசாரியை நம்ப வேண்டும்: அவரிடமும் ஏமாற வேண்டும். அதே போலலஞ்சத்தை விரட்ட, சட்டத்தை நம்ப வேண்டும்: அதனிடமும் ஏமாற வேண்டும்- இது ஒரு ஒற்றுமை. லஞ்சம் ,பேய் இரண்டுமேஆட்டிப்படைக்குமே தவிர - இதோ இருக்கிறது என்று சுட்டிக் காட்ட முடியாதவை -இது இன்னொரு ஒற்றுமை.

கே: போயஸ் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலை பார்க்கவும் தயாராக இருப்பதாக, ஜெயலலிதாவால் பதவிபறிக்கப்பட்ட - முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி கூறியிருக்கிறாரே?

ப: இப்போது அ.தி.மு.க. வில் பதவிகளை பெறுகிறவர்களைப் பார்த்து அவருக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கலாம்.தோட்டக்காரனாகிவிட்டால் - அதை அடுத்து, தனக்கு ஒரு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்று அவர் எதிர் பார்க்கிறார்போலிருக்கிறது.

கே: குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிலவும் கடும் வறட்சி பற்றி தங்கள் கருத்து என்ன?

ப: வறட்சி நிலை தோன்றக் கூடும் என்ற அறிகுறிகள் காணப்படும் போதே நிவாரணப் பணிகள் ஏன் எடுக்கப் படுவதில்லையோ!இந்த இரு மாநில வறட்சிக்குப் பிறகாவது, ஆரம்பத்திலேயே உரிய நடவடிக்கைகள் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டால் நல்லது.

கே: ராமதாஸ் அடித்த பல்டி எந்த வகையைச் சார்ந்தது?

ப: எந்த பல்டியைச் சொல்கிறீர்கள்? முதலில் தி.மு.க.வை எதிர்த்துப் பேச்சு- அது ஒரு பல்டி: அடுத்து, அந்த அர்த்தத்தில்பேசவில்லை -என்ற இரண்டாவது பல்டி: இதற்குப் பிறகு, வேண்டாமென்றால் விட்டு விட்டுப் போகிறேன் - என்ற மூன்றாவதுபல்டி. அடுத்த பல்டியும் வரலாம். அப்படியிருக்க எந்த பல்டியை நீஙகள் குறிப்பிடுகிறர்கள்?

கே: மகா கூட்டணியால் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசை வீழ்த்த முடியுமா?

ப: மம்தா பானரிஜி முயற்சிக்கிற விவஸ்தையற்ற கூட்டணி வந்து விட்டால் - அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆபத்துதான்.அந்த மகா கூட்டணி வெற்றி பெற நல்ல வாய்ப்புண்டு.

கே: மூப்பனார், அ.தி.மு.க.விடம் எதிர்பார்ப்பது என்ன? ஜெயலலிதா, த.மா.க.விடம் எதிர்பார்ப்பது என்ன?

ப: நிறைய சீட்களை மூப்பனார் எதிர்பார்ப்பார்: குறைவான சீட்களை பெற மூப்பனார் சம்மதிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாஎதிர்பார்ப்பார். அது இனி பிரச்னையாக் கூடும். பா.ம.க. ஒருவேளை அ.தி.மு.க. அணிக்குப் போனால், நிறைய சீட்களைஎதிர்பார்க்கும். அ.தி.மு.க. சுமார் 150 இடங்களிலாவது போட்டியிட நினைக்கும். மீதி 84. இதில் த.மா.க. குறைந்தது 50இடங்களாவது எதிர்பார்க்கும். பா.ம.க., த.மா.கா.வுக்கு குறைவாக இடங்களை ஏற்க ஒப்புக் கொள்ளாது. காங்கிரஸ், கம்யூனிஸ்டதேசிய லீக் சீட்களுக்கு அ.தி.மு.க. எங்கே போகும்? பா.ம.க. இப்போது போலவே, தி.மு.க. அணி.‘ல் தங்கிவிட்டால்த.மா.கா.வுக்கு நல்லது.

கே: பணம் வாங்கியிருந்தால 434 விக்கெட்டுக்களை என்னால் எடுத்திருக்க முடியாது என்ற கபில் தேவ் கூறியது பற்றி...?

ப: சரி. ஆனால் 434 விக்கெட்டுகளில் பணம் வாங்கியவர்களின் விக்கெட்கள் எத்தனையோ? என்ற சந்தேகம் எழத்தானேசெய்யும்!

கே: ஆட்சியைப் பிடிப்பதும், தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதும் தான் வாஜ்பாய் அரசி கொள்கைஎன்று சோனியா காந்தி கூறவது பற்றி?

ப: தன்னைப் பார்த்து காப்பியடித்த மாணவன் பாஸ் செய்து, தான் ஃபெயிலாகி விட்டால் - ஒரு மாணவனுக்கு, காப்பியடித்தமாணவன் மீது வருகிற கோமுபம், காங்கிரஸாருக்கு பா.ஜ.க.மீது வருவது எதிர்பார்க்கக்கூடியதே.

கே: நமது நாடு, ஏழைகள் வாழும் பணக்கார நாடா? பணக்காரர்கள் வாழும் ஏழை நாடா?

ப: ஏழைகளும், பணக்காரரிகளும் வாழும் கடன்கார நாடு.

கே: சாதரண குடிமக்களைப் போல எம்.பி.க்களையும் விமான நிலையத்தில் கடும் சோதனைக்கு உள்ளாக்கக்கூடாது என்றுராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி. ரகுவன் பிரஸாத் சிங் கூறுவது பற்றி...?

ப: பிதற்றல். சாதரண மக்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற இந்த நினைப்பு, இவர்களுக்கெல்லாம் இருப்பதுகண்டனத்துக்குரியது

கே: தன்னம்பிக்கை அதிகம் ஆண்களிடத்திலா? பெண்களிடத்திலா?அரசியல்வாதிகளிடத்திலா?

ப: நான் பதில் சொல்லமாட்டேன். உங்கள் கேள்வியில் புதைந்து கிடக்கும் விஷமத்தனத்தை நான் ஆட்சேபிக்கிறேன். ஆண்கள்,பெண்கள், அரசியல்வாதிகள் என்றால் என்ன அர்த்தம்? அரசியல்வாதிகளை இப்படி மட்டமாகப் பேசுவதை நான் எதிர்க்கிறேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X